'என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்காமல், 'என்ன செய்யப் போறோம்?' என்று கேட்ட மனைவியின் பொறுப்புணர்ச்சியை மனதுக்குள் வியந்த பாலு, "அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான்.
"சுப்பிரமணிகிட்ட கேட்டுப் பாருங்களேன்!"
"சுப்பிரமணிகிட்டயா?"
"நீங்கதானே சொல்லி இருக்கீங்க, உங்க அப்பாதான் அவரைப் படிக்க வச்சாருன்னு? அவரும் இதை ரெண்டு மூணு தடவை சொல்லி இருக்காரு. அவர் இப்ப வசதியா இருக்காரு. உங்க அப்பா மேல இருக்கற நன்றிக்காக, அவர் உங்களுக்கு உதவி செய்யலாம் இல்ல?"
"அவன் எனக்கு உதவி செய்வான்னு எனக்குத் தோணல. நீ சொல்றதுக்காக வேணும்னா கேட்டுப் பாக்கறேன்" என்று மனைவியிடம் கூறி விட்டுக் கிளம்பினான் பாலு.
வீட்டுக்குத் திரும்பிய பாலுவின் முகத்திலிருந்த சோர்வைப் பார்த்தே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட மாலதி, உள்ளே சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்த பாலு, "கேட்டேன். கொஞ்சம் கூட தாட்சண்யம் இல்லாம, முடியாதுன்னுட்டான்!" என்றான், கோபத்துடன்.
"பரவாயில்ல. வேற எங்கேயாவது கிடைக்கும். கவலைப்படாதீங்க!" என்றாள் மாலதி.
"இப்ப இப்படிச் சொல்ற! அப்புறம் எதுக்கு அவன்கிட்ட போய் உதவி கேக்கச் சொன்ன? எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா?" என்றான் பாலு, கோபம் குறையாமல்.
"இதில அவமானப்படறதுக்கு எதுவும் இல்லீங்க. நமக்கு உதவி தேவைப்பட்டது. அவர் உதவி செய்யற நிலைமையில இருக்காரு. அவருக்கு உங்க அப்பா உதவி செஞ்சருக்கறார்ங்கறதால, அவர்கிட்ட உதவி கேக்கறது தப்பு இல்லேன்னு நினைச்சோம். அதுவும் கடன்தான் கேட்டோம். உங்க நிலைமை சரியானப்பறம், ரெண்டு மூணு மாசத்தில திருப்பிக் கொடுக்கப் போறீங்க! இந்த நிலைமையில உங்களுக்கு அவர் உதவ மறுத்துட்டாருன்னா, அது அவருக்குத்தான் இழுக்கு. உங்களுக்கு இதில எந்த அவமானமும் இல்ல!" என்றாள் மாலதி, உறுதியான குரலில்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
No comments:
Post a Comment