"சியாமளாவாத்தான் இருக்கும்" என்று தன் கணவன் குமரேசனிடம் கூறியபடியே கதவைத் திறந்தாள் சிந்து.
சியாமளாதான்! பக்கத்து வீட்டில் வசிப்பவள். கையில் ஒரு மூடப்பட்ட பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
"கேழ்வரகு தோசை செஞ்சேன். உன் குழந்தைக்காக ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தேன்!" என்றாள் சியாமளா, பாத்திரத்தை சிந்துவிடம் நீட்டியபடியே.
"எதுக்கு அக்கா இதெல்லாம்?" என்றாள் சிந்து, சங்கடத்துடன்.
சியாமளா பதில் சொல்லாமல் சிரித்து விட்டுப் பாத்திரத்தை சிந்நுவிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினாள்.
"எவ்வளவு தோசை வச்சிருக்காங்க?" என்றான் குமரேசன்.
சிந்து பாத்திரத்துக்குள் விரலை விட்டு எண்ணிப் பார்த்து விட்டு, "ஆறு தோசை இருக்கு" என்றாள்.
"குழந்தை ஆறு தோசை சாப்பிடுமா?" என்றான் குமரேசன், இலேசாகச் சிரித்தபடி.
"நம்ம மூணு பேருக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்காங்க. நம்ம நிலைமை தெரிஞ்சு, அடிக்கடி இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க!"
"முன்னெல்லாம், வயசான காலத்தில, பல பேர் எல்லாத்தையும் துறந்துட்டு, காட்டுக்குப் போயிடுவாங்களாம். அங்கே கிடைக்கிற பழத்தையோ, காயையோ சாப்பிட்டுட்டுக் காலத்தைக் கழிச்சுடுவாங்களாம். அது மாதிரி நம்மால போக முடியல. அதனால, சியாமளா மாதிரி நல்லவங்க, அவங்க குடிக்கற கஞ்சியையோ, கூழையோ கூட நம்மகிட்ட பகிர்ந்துக்க வேண்டி இருக்கு. நாமும் வேண்டாம்னு சொல்ற நிலையில இல்ல!" என்றான் குமரேசன், இயலாமையுடன்.
"அப்படியே காட்டுக்குப் போக முடிஞ்சாலும், நம்ம குழந்தையை விட்டுட்டு எப்படிப் போறது?"
"ஒரு பேச்சுக்குச் சொன்னேன். வறுமையை விட்டு அவ்வளவு சுலபமா விலகிட முடியுமா? நாம கஷ்டப்படறதோட மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு வாழறதுதான் நம்ம வாழ்க்கைன்னு ஆகிப் போச்சு!" என்றான் குமரேசன், ஒரு தோசையை விண்டு வாயில் போட்டுக் கொண்டபடியே.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105
நல்குரவு (வறுமை)
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
No comments:
Post a Comment