இந்த ஒரு மாதத்தில் அவன் அதிகம் நெருக்கமாக இருந்தது காஷியர் நடராஜனிடம்தான். அவர்தான் அவனிடம் இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசிக் கொண்டிருப்பார்.
அவர் நகைச்சுவையாகப் பேசி வந்ததால், ஒருமுறை மணி அவரிடம், "உங்களுக்கென்ன சார்? செலவுக்குப் பணம் வேணும்னா, கேஷ்லேந்து எடுத்துக்கலாம்!" என்றான் விளையாட்டாக.
நடராஜன் உடனே பதறிப் போய், "விளையாட்டுக்குக் கூட அப்படிச் சொல்லாதப்பா! நீ வேலையில சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாலதான், கேஷியரா இருந்தவர், அப்பப்ப தன் கைச் செலவுக்காக கேஷ்லேந்து பணம் எடுத்து மாட்டிக்கிட்டாரு. அவர் இடத்துக்குத்தான் நான் வந்திருக்கேன்! அதனால, இதைப் பத்தி ஜோக் அடிச்சாக் கூடத் தப்பாப் போயிடும்!" என்றார், மெல்லிய குரலில்.
"சாரி சார்! எனக்குத் தெரியாது. பணம் கையாடல் பண்ணின கேஷியரை வேலையை விட்டு அனுப்பிட்டாங்களா, சார்?"
"வேலையை விட்டு அனுப்பறதாவது! அதோ, அந்த டேபிள் முன்னால நின்னு சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கானே, அவன்தான் அது!" என்றார் நடராஜன், அந்த நபரைத் தன் கண்ணால் காட்டி.
"மதுசூதனன் சாரா? அவரா அப்படிப் பண்ணினாரு? நம்பவே முடியலியே! அவர் மேல நடவடிக்கை எதுவும் எடுக்கலியா?"
"நம்ம முதலாளி ரொம்ப இரக்க குணம் உள்ளவர். மதுசூதனன் அவர் கால்ல விழுந்து கெஞ்சினான். அவன் மொத்தமாக் கையாடின பணம் பத்தாயிரம் ரூபாதான் இருக்கும். 'அதை மாசா மாசம் சம்பளத்திலேந்து பிடிச்சுக்கங்க, வேலையை விட்டு அனுப்பிடாதீங்க'ன்னு கெஞ்சினான். அதனால, முதலாளி அவனை கேஷியர் வேலையிலேந்து வேற சீட்டுக்கு மாத்திட்டு, என்னை கேஷியரா போட்டிருக்காரு."
"ஆனா, மதுசூதனன் சார் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசிக்கிட்டு ஜாலியா இருக்காரே! எங்கிட்ட கூட நல்லா பேசுவாரு. அவர் எப்படி இப்படி இருக்கார்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு!"
"கொஞ்சம் கூட அவமான உணர்ச்சி இல்லாம, எப்படி சாதாரணமா இருக்கான்னு கேக்கறே, அப்படித்தானே? எல்லா மனுஷங்களுக்கும் ஒரே மாதிரி உடல் அமைப்புதான் இருக்கு. உடை, உணவுப் பழக்கம் எல்லாம் கூட ஒண்ணா இருக்கலாம். ஆனா, தப்புப் பண்ணினா அதுக்காக வெட்கப்படறதுங்கற குணம் நல்ல மனுஷங்ககிட்டதான் இருக்கும்!" என்றார் நடராஜன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 102
நாணுடைமை
குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
No comments:
Post a Comment