"ரெண்டுக்குமே போகப் போறதில்ல!" என்றான் கீர்த்திவாசன்.
"ஏன்?"
"ராமன் எனக்கு நெருக்கமான நண்பர் இல்ல. அவர் ஒரு மரியாதைக்காக, ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்திருக்காரு. நாம போகணும்னு அவசியமில்லை."
இரண்டு நாட்கள் கழித்து, "உங்க ஆஃபீஸ் நண்பர் முரளியோட மனைவியைத் தற்செயலா மார்க்கெட்ல பார்த்தேன். ராமனோட பையன் கல்யாணத்துக்கு உங்க ஆஃபீஸ்லேந்து எல்லாருமே வந்திருந்தாங்களாமே! நாம மட்டும்தான் போகலை போல இருக்கு. நீங்க ஏன் வரலேன்னு எங்கிட்ட கேட்டாங்க. உங்களுக்கு ஏதோ வேலை இருந்ததுன்னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!" என்றாள் மாலா.
"ஆமாம். ஆஃபீஸ்ல கூட சில பேர் என்னைக் கேட்டாங்க" என்றான் கீர்த்திவாசன், சுருக்கமாக.
"நீங்க பொதுவாகவே யார்கிட்டேயும் அதிகமாப் பழகறதில்ல. எங்க வீட்டில கூட இதைச் சொல்லிக் குறைப்பட்டுக்கறாங்க. ஏன், உங்க தங்கைகள் கூட 'அண்ணன் எங்க வீட்டுக்கெல்லாம் வரதில்ல, ஃபோன் பண்ணிப் பேசறது கூட இல்லை'ன்னு எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்காங்க. நீங்க மத்தவங்களோட இன்னும் கொஞ்சம் அதிகமாப் பழகணும்" என்றாள் மாலா.
"என்னால இப்படித்தான் இருக்க முடியும். என்னோட இயல்பு அதுதான்."
"ஆனா மத்தவங்க, நீங்க அவங்களை மதிக்கறதில்லேன்னு நினைக்கறாங்களே!"
"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"
"மத்தவங்களோட நாம பழகினாத்தான், நாம அவங்களை மதிக்கிறதா அவங்க நினைப்பாங்க. அதனால, உங்களுக்கு விருப்பம் இல்லாட்டாலும், ஒரு கர்ட்டிஸியா நினைச்சு நாம மத்தவங்களோட பழகணும்."
"அதுதான் நீ எல்லோரோடயும் நல்லாப் பழகறியே! அதனாலதானே என் தங்கைகள் கூட உங்கிட்ட வந்து என்னைப் பத்திப் புகார் செய்யறாங்க!"
"நான் சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்" என்றாள் மாலா.
"விடு. நான் எப்படி இருக்கேனோ, அப்படியே இருக்கேன். நீ எப்படி இருக்கியோ, அப்படியே இருந்துக்கோ!" என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கீர்த்திவாசன்.
கீர்த்திவாசன் வீட்டின் முன்னறையில் அமர்ந்திருந்தான்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்றாகி விட்டது. ஒரே மகனுக்குத் திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறான்.
மதியச் சாப்பாட்டை அருகிலிருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து கொண்டு வைத்து விடுவார்கள். அதைச் சாப்பிட்டாகி விட்டது.
வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அலமாரியில் புத்தகங்கள் இருக்கின்றன. நேரத்தைப் போக்க அவை ஓரளவுக்கு உதவும்.
கையில் செல்ஃபோன் இருக்கிறது. ஆனால், யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. தங்கைகளிடம் பேசினால், எடுத்த உடனேயே, "என்ன அண்ணா, என்ன விஷயம்?" என்பார்கள். விஷயம் இல்லாமல் அண்ணன் ஃபோன் செய்ய மாட்டான் என்று அவ்வளவு நம்பிக்கை!
ஆஃபீஸ் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பு இல்லை. அந்த ஓரிரு நண்பர்களுடன் எப்போதாவதுதான் பேச முடியும்.
நீண்ட நேரம் சோஃபாவில் உட்கார்ந்திருந்த கீர்த்திவாசன், திடீரென்று இப்போது நேரம் என்ன இருக்கும் என்று யோசித்தான். அருகிலிருந்த செல்ஃபோனை எடுத்துப் பார்த்தான். செல்போன் பெரும்பாலும் நேரம் பார்க்கத்தான் பயன்படுகிறது!
மணி மூன்று.
'அவ்வளவுதானா? ஐந்து மணிக்கு மேல் ஆகி இருக்கும் என்று நினைத்தேனே!'.
வீட்டுக்குள் பார்த்தான். அங்கே இல்லாத மனைவியின் நினைவு வந்தது. மற்றவர்களிடம் பழக வேண்டும் என்று எத்தனையோ முறை கூறியவள். அவள் சொன்னபடி கேட்டிருந்தால், சிலரிடமாவது சற்று நெருக்கமான தொடர்பு இருந்திருக்கும்.
'நான் சொன்னதைக் கேட்டிருந்தால், இப்படித் தனியே உட்கார்ந்து கொண்டு, நேரம் என்ன இருக்கும் என்பதைக் கூட உணராமல், வெறுமையில் வாடிக் கொண்டிருக்க வேண்டாமே!' என்று எங்கேயோ இருந்து கொண்டு சொல்லிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ!
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
No comments:
Post a Comment