நண்பர்களுக்குள் சம்பந்தம் செய்து கொள்வது சரியாக இருக்காது என்று முருகேசன் காரணம் கூறினாலும், பொருளாதார நிலையில் தான் முருகேசனை விடத் தாழ்ந்தவன் என்பதுதான் உண்மையான காரணம் என்பது தனஞ்சயனுக்குப் புரிந்தது.
"காசுதான் பெரிசு! நண்பன்னு கூட பாக்காம, முடியாதுன்னு சொல்லிட்டானே!" என்று தன் மனைவியிடம் புலம்பினார் தனஞ்சயன்.
"பெண் கொடுக்கறது அவங்க விருப்பத்தைப் பொருத்தது. நண்பர்ங்கறதுக்காக, நீங்க கேட்டவுடனே அவர் தன் பெண்ணை நம்ம பிள்ளைக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு எதிர்பாக்கறது என்ன நியாயம்?" என்றாள் அவர் மனைவி.
ஆயினும், அன்று முதல், தனஞ்சயன் முருகேசனைத் தன் விரோதியாகவே பார்க்க ஆரம்பித்தார்.
முருகேசனின் பெண் சுகன்யாவுக்கு நிச்சயமான திருமணம் திடீரென்று நின்று போயிற்று.
பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியதற்குச் சரியான காரணம் கூறவில்லை. வேறொரு ஜோதிடரிடம் ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொன்னபோது, அவர் ஜாதகம் பொருந்தாது என்று சொல்லி விட்டதாகச் சொன்னார்கள்.
"திருமணம் நிச்சயம் செய்த பிறகு எதற்கு ஜாதகம் பார்த்தீர்கள்?" என்ற கேள்விக்கு அவர்களால் சரியான பதில் கூற முடியவில்லை.
சில நாட்களுக்குப் பிறகுதான், உண்மையான காரணம் தெரிந்தது.
சுகன்யா தனஞ்சயனின் மகன் பாலுவைக் காதலித்ததாகவும், பொருளாதார ஏற்றத் தாழ்வினால் முருகேசன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு செய்தி பிள்ளை வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட்டதுதான் அவர்கள் திருமணத்தை நிறுத்தியதற்குக் காரணம் என்று தெரிந்தது.
இந்த விஷயம் தெரிந்ததும், முருகேசனின் மகனும் சுகன்யாவின் அண்ணனுமான மூர்த்தி கொதித்துப் போய் விட்டான்.
"சுகன்யாவும், பாலுவம் சந்திச்சுக்கிட்டது கூட இல்லை. அப்படி இருக்கறப்ப, இப்படி ஒரு பொய்ச் செய்தியை தனஞ்சயன் மாமாதான் பரப்பி இருக்கணும். இத்தனை நாள் உங்களோட நட்பா இருந்துட்டு, அவர் பையனுக்கு சுகன்யாவைக் கல்யாணம் செஞ்சு வைக்க நீங்க ஒத்துக்கலைன்னதும், இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தில இறங்கி இருக்காரே!" என்றான் மூர்த்தி, கோபத்துடன்.
முருகேசன் எதுவும் பேசவில்லை.
அந்த ஊரில் இருந்தால் சுகன்யாவின் திருமணம் தடைப்படும் என்று நினைத்து, அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு நகரத்துக்குச் சென்று குடியேறினார்கள்.
"அப்பா! இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது" என்றான் மூர்த்தி.
"என்ன?" என்றார் முருகேசன்.
"உங்க பழைய நண்பர் தனஞ்சயனோட முதியோர் பென்ஷன் விண்ணப்பம் என் மேஜைக்கு வந்தது."
"அவன் ஏன் முதியோர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கணும்?அவனுக்கு வேற வருமானம் இல்லையா என்ன?"
"நாம அவரைப் பாத்து இருபது வருஷம் ஆச்சு. இந்த இருபது வருஷத்தில என்ன நடந்ததோ!"
"சரி. சாங்ஷன் பண்ணிட்ட இல்ல?"
"இல்லை. ரிஜக்ட் பண்ணப் போறேன். ஃபைல் இன்னும் என் மேஜை மேலதான் இருக்கு."
"ஏன்? அவனுக்கு எலிஜிபிலிடி இல்லையா?"
"இருக்கு. ஆனா, நான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கப் போறேன். உங்ககிட்ட சொன்னா, நீங்க சந்தோஷப்படுவீங்கன்னுதான் சொல்றேன்!"
"விண்ணப்பத்தை நிராகரிக்கறதுக்கு முன்னால எங்கிட்ட சொன்னதில சந்தோஷம்தான். ஆனா, நீ செய்ய நினைச்சது ரொம்ப இழிவான செயல்!"
"என்னப்பா இப்படிச் சொல்றீங்க? அவர் நம்ம சுகன்யா கல்யாணத்தையே நிறுத்தினவரு. அதனால, நாம அந்த ஊரை விட்டே வரும்படி ஆச்சு. அப்புறம் சுகன்யாவுக்கு நல்ல இடத்தில கல்யாணம் ஆயிடுச்சுன்னாலும், அவர் செஞ்ச துரோகத்துக்கு அவரைப் பழி வாங்கறதில என்ன தப்பு?"
"பழி வாங்கறதே தப்பு. அதிலேயும், நீ உன் அதிகாரத்தைத் தவறாப் பயன்படுத்தி, அவரைப் பழி வாங்க நினைக்கிறது ஒழுக்கம், பண்பாடு இதையெல்லாம் மீறின செயல். முறைப்படி அவனுக்குக் கிடைக்க வேண்டியதைத் தடுக்காதே!" என்றார் முருகேசன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
No comments:
Post a Comment