"புது ப்ராஜக்ட்டைப் பத்தித்தானே சொல்ற? ப்ராஜக்ட் கன்சல்டன்ட் கூட அவ்வளவு நம்பிக்கையா இல்ல. ஆனா, யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிரமாதமான வெற்றி!" என்றான் அவன் சக ஊழியன் சக்தி.
எம்.டி கோபாலின் கார் வரும் சத்தம் கேட்கவே, இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
கரண் பியூனை அழைத்து, "சார் வந்துட்டாரு. அவரைப் பார்க்க வந்த ஒரு பெரியவர் விசிட்டர்ஸ் அறையில உட்கார்ந்திருக்காரு. சார்கிட்ட சொல்லிட்டு, அவரை உள்ளே அனுப்பு!" என்றான்.
கோபாலின் அறைக்குள் போய் விட்டுச் சற்று நேரத்தில் வெளியே வந்த அந்தப் பெரியவர், அலுவலகத்தின் மையத்தில் நின்று, கோபத்துடன் உரத்த குரலில் பேசத் தொடங்கினார்.
"இவனைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்! என்னை விடுங்க. இவனை வளர்க்க இவன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா! இப்ப, அவ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில கிடக்கறா. பையனைப் பார்க்கணும்னு ஆசைப்படறா. ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டான்னுதான், ஆஃபீசுக்கு வந்து நேர்ல கூப்பிட்டேன். 'இப்ப பிசியா இருக்கேன், நேரம் கிடைக்கிறப்ப வந்து பாக்கறேன்'கறான்.
"எப்ப வந்து பாக்கறது? அவ உயிரை விட்ட அப்புறமா? பணம் வேணும்னா கொடுக்கறானாம். இவன் பணம் யாருக்கு வேணும்? அப்பா அம்மாவை மதிக்காத இவன் பணத்தில ஒரு பைசா கூட வேண்டாம்னுதானே நாங்க பத்து வருஷமா வைராக்கியமா இருக்கோம்?
"இவ்வளவு பெரிய ஆஃபீஸ் இருக்கு. இவ்வளவு பேர் வேலை செய்யறீங்க. பிசினஸ்ல பணம் கொட்டுது. ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்கான். என்ன பிரயோசனம்? பாலைக் காய்ச்சித் துருப்பிடிச்ச பாத்திரத்தில கொட்டின மாதிரி அத்தனையும் வேஸ்ட்!"
பெரியவரின் உரத்த குரலைக் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த கோபால், "என்னையா எல்லாரும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்க? செக்யூரிடியைக் கூப்பிட்டு, இந்தக் கிழவனை வெளியில பிடிச்சுத் தள்ளச் சொல்லுங்க!" என்று இரைந்து கத்தினான்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
No comments:
Post a Comment