செயலாளர் வரவேற்புரை ஆற்றியபின், சங்கத்தின் தலைவர் குவளைக்கண்ணன் பேசத் தொடங்கினார்.
"பொதுவா, பிரபலமானவங்களுக்குத்தான் பாராட்டு விழாக்கள் நடத்துவாங்க. ஆனா, நம்ம சங்கத்தில, சாதாரண மனிதர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி, அவங்களுக்கு 'நோபிள் பர்ஸன்' அதாவது 'உயர்ந்த மனிதர்'ங்கற விருது வழங்கற பழக்கத்தை வச்சிருக்கோம். இதை நாம சுருக்கமா 'நோபிள் பரிசு'ன்னு சொல்றோம்.
"பரிசுக்குரிய நபரைத் தேர்ந்தெடுக்க நாம அமைச்சிருக்கிற தேர்வுக் குழுவுக்கு, நம் உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிஞ்ச சிறந்த மனிதர்களோட பெயர்களைப் பரிந்துரை செய்வாங்க. பரிந்துரை செய்யப்பட்ட மனிதர்களைப் பத்தி தேர்வுக் குழு ஆராய்ந்து, யாருக்குப் பரிசுன்னு முடிவு செய்யும்.
"தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாருன்னு, தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. இந்த சங்கத்தோட தலைவரான எனக்கோ, துணைத் தலைவருக்கோ, செயலாளருக்கோ கூடத் தெரியாது.
"தேர்வுக் குழுத் தலைவர் வெங்கடேசன் அவர்கள் இப்போது இந்த ஆண்டு 'நோபிள் பரிசு'க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் யார் என்பதை அறிவிப்பார்!"
தேர்வுக் குழுத் தலைவர் வெங்கடேசன் ஒலிபெருக்கி முன் வந்து பேசத் தொடங்கினார்.
"இந்த முறை நாங்க தேர்ந்தெடுத்திருக்கிற நபரைப் பத்திப் பல பேர்கிட்ட நாங்க விசாரிச்சப்ப, எல்லாரும் ஒரே மாதிரிதான் சொன்னாங்க. 'அவர் ரொம்ப நேர்மையானவர், நியாயமா நடந்துப்பாரு, அதோட எப்பவுமே தன்னால மற்றவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பார்த்துக்கிட்டிருப்பாரு.'
"அவர் ஒரு அலுவலகத்தில அதிகாரியா இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தன்னோட வேலைகளைச் சரியாச் செஞ்சதோட, மத்த ஊழியர்களுக்கு உதவி செய்யறதையும் பழக்கமா வச்சுக்கிட்டிருந்தவர்னு அவரோட மேலதிகாரிகளா இருந்தவங்களும், அவரோட வேலை செஞ்சவங்களும் சொன்னாங்க.
"அவருக்குக் கீழே வேலை செஞ்சவங்க 'அவர் எப்பவுமே நியாயமா நடந்துப்பாரு, வேலை விஷயத்தில ஸ்டிரிக்டா இருந்தாலும், எல்லார்கிட்டேயும் அன்பாகவும், கனிவாகவும், கருணையோடயும் நடந்துப்பாரு'னு சொன்னாங்க.
"அவர் ஓய்வு பெற்ற பிறகு கூட, அவரோட நிறுவனத்திலேந்து சில பேர் அவரை அப்பப்ப சந்திச்சு ஆலோசனே கேக்கறாங்க. அவரும் கொஞ்சம் கூட சலிச்சுக்காம, அவங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்றாரு.
"அவர் குடி இருக்கிற பகுதியில அவரைப் பத்தி விசாரிச்சோம். அவரோட குடியிருப்பு சங்கத்தில அவர் எந்த ஒரு பொறுப்பிலேயும் இல்லாட்டாலும், ஏதாவது பிரச்னைன்னா, முதல் ஆளா வந்து, அதைத் தீர்க்க உதவி செய்யறாருன்னு சொன்னாங்க.
"ஆனா, அவர் மனைவி மட்டும் அவரைப் பத்திக் குறை சொன்னாங்க, 'ரிடயர் ஆயிட்டார்னுதான் பேரு. ஆனா, எங்கேயாவது யாருக்காவது உதவி செய்யறேன்னு வெளியிலதான் சுத்திக்கிட்டிருப்பாரு, வேளாவேளைக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொல்றேன், அதைக் கூடச் செய்யறதில்லை'ன்னு!
"ரிடயர் ஆனப்புறம் அவர் ஒரு சங்கம் ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வராரு. ஆரம்பத்தில, அதோட தலைவர் பதவியைக் கூட அவர் ஏத்துக்கல. சமீபத்திலதான், அவரை வற்புறுத்தி சம்மதிக்க வச்சு, அந்தச் சங்கத்தோட தலைவரா ஆக்கி இருக்காங்க - ஆக்கி இருக்கோம்."
வெங்கடேசன் பேச்சை நிறுத்தி விட்டு, அவையில் இருந்தவர்களப் பார்க்க, அவையில் இருந்தவர்கள் அவரையும், தலைவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.
"இந்த ஆண்டு 'நோபிள் பர்ஸன்' அவார்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் நம் அன்புக்குரிய தலைவர், பண்பாளர் குவளைக்கண்ணன் அவர்கள்தான்!" என்று வெங்கடேசன் சொல்லி முடித்ததும், கரவொலி அரங்கை அதிர வைத்தது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை
குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
No comments:
Post a Comment