Monday, October 9, 2023

992. எம்.டி இல்லாத நேரத்தில்...

"சார், எம்.டி உங்களைக் கூப்பிடறாரு" என்று பியூன் ஒரு ஊழியரை வந்து அழைத்தாலே, அந்த ஊழியருக்கு ஒரு பெரிய மனச்சோர்வு ஏற்பட்டு விடும். 

மற்ற ஊழியர்களில் சிலருக்கு, 'பாவம்! இன்னிக்கு இவன் மாட்டிக்கிட்டானா!' என்ற பரிதாபமும், வேறு சிலருக்கு 'நல்லா மாட்டிக்கிட்டான், திரும்பி வரப்ப செத்துச் சுண்ணாம்பாதான் வருவான்' என்ற குரூரமான மகிழ்ச்சியும் ஏற்படும்.

நிர்வாக இயக்குனர் செல்வமூர்த்தி கோபத்துக்கும், கடுமையான சொற்களுக்கும் பெயர் போனவர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழி அவருக்கு அடியோடு பொருந்தாது. தன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், மற்றவர்கள் என்று எல்லோரிடமுமே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர் அவர்.

செல்வமூர்த்தி அலுவலகத்தில் இல்லாதபோது, சில ஊழியர்கள் ஒன்று கூடி அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

"சார் ஏன்தான் இப்படி இருக்காரோ தெரியல. சின்ன விஷயங்களுக்கெல்லாம் தப்பு கண்டுபிடிச்சு, கண்டபடி திட்டறாரு. ஆனா ஒரு தடவை கூட, யாரையும் பாராட்டினதாத் தெரியல!"

"நீ வேற! வாடிக்கையாளர்கள்கிட்ட பேசறப்ப கூடக் கனிவாப் பேச மாட்டாரு. 'நீ காசு கொடுக்கற, நான் பொருள் கொடுக்கறேன்'கற மாதிரிதான் பேசறாரு. இப்படி நடந்துக்கறவர்கிட்ட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பொருள் வாங்கறதே ஆச்சரியம்தான்!"

"என்னை மாதிரி சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் வாடிக்கையாளர்களைப் பார்க்கப் போகச்சே, 'என்னையா, உங்க எம்.டி கொஞ்சம் கூடப் பண்பாடு இல்லாம நடந்துக்கறாரு! உங்களை மாதிரி சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ்கள் எல்லாம் பணிவாப் பேசறீங்க. உங்களுக்காகத்தான் உங்க கம்பெனியில இன்னும் நாங்க இன்னும் சரக்கு வாங்கிக்கிட்டிருக்கோம்' னு அவங்க சொல்லுவாங்க!"

"வீட்டில எப்படி நடந்துப்பாரு?"

"ஒரு தடவை அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவர் மனைவி, குழந்தைகள் எல்லாரும் அவர்கிட்ட பயந்துக்கிட்டு இருக்கற மாதிரிதான் தெரியுது. வீட்டில ஒரு கலகலப்பான சூழ்நிலையே இல்லை!"

"எப்படி இருக்கும்? இவர்தான் யார்கிட்டேயும் அன்பு காட்ட மாட்டாரே! குற்றம் கண்டுபிடிக்கறதும், கோபமாக் கத்தறதும்தானே அவரோட இயல்பு!"

"இவரோட அப்பாதானே இந்தத் தொழிலை ஆரம்பிச்சவரு? அவர் தங்கமானவரு, எல்லார்கிட்டேயும் அன்பா நடந்துப்பாருன்னு நான் வேலைக்குச் சேர்ந்த புதுசில, அப்ப இருந்த சில சீனியர்கள் எங்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அவங்கள்ளாம் இப்ப எங்கே? ரிடயர் ஆயிட்டாங்களா?"

"ஒத்தர்தான் ரிடயர் ஆயிட்டாரு. மூணு பேர் வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க. போகும்போது, 'ஒரு பண்பான மனுஷனுக்கு மகனாப் பொறந்துட்டு, இப்படிப் பண்பாடு இல்லாதவனா இருக்கானே! இவன்கிட்ட மனுஷன் வேலை பாப்பானா?' ன்னு எங்ககிட்டல்லாம் சொல்லிட்டுப் போனாங்க!"

"நல்ல குடும்பத்தில பொறந்தும், இவர் ஏன் இப்படிப் பண்பாடு இல்லாம இருக்காரு?"

"நல்ல குடும்பத்தில பொறந்திருந்தா போதுமா? அடுத்தவங்க மேல கொஞ்சம் கூட அன்பு இல்லாத மனுஷன்கிட்ட எப்படிப் பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்?"

"இவர் இப்படி நடந்துக்கிறதால, இங்கே மானேஜரா வரவங்க யாரும் நிலைச்சு நிக்க மாட்டேங்கறாங்க. நமக்கும், அவருக்கும் நடுவில மானேஜர்னு ஒத்தர் இருந்தார்னா, நமக்குக் கொஞ்சம் குஷன் மாதிரி இருக்கும்!"

"மானேஜர் இருந்திருந்தா, எம்.டி இல்லாத நேரத்தில, நம்மால இப்படி சுதந்திரமாப் பேசிக்கிட்டிருக்க முடியாதே!"

அதற்குள் எம்.டியின் கார் வரும் சத்தம் கேட்கவே, அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து, தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த, அங்கே மயான அமைதி மீண்டும் திரும்பியது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்: 
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...