Sunday, October 8, 2023

991. 'பிறந்த நாள்' செய்தி!

சிறு வயதில் நடந்த அந்தச் சம்பவம் கோபியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ஒருநாள் காலை கோபியின் தந்தை நரசிம்மன் தன் மனைவி மல்லிகாவையும், ஏழு வயது மகன் கோபியையும், வீட்டு வேலைக்காரன் சண்முகத்தையும் முன்னறைக்கு அழைத்தார்.

"சண்முகம், ஹாப்பி பர்த்டே!"  என்று வேலைக்காரனிடம் கூறி அவன் கையைப் பற்றிக் குலுக்கினார் நரசிம்மன்.

"ஐயா, என்னங்க இது?" என்றான் சண்முகம் வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன்.

நரசிம்மன் தன் மனைவியையும் மகனையும் பார்க்க, அவர்களும், "ஹாப்பி பர்த்டே சண்முகம்!" என்றனர்.

"ஹாப்பி பர்த்டே அங்க்கிள்னு சொல்லு!" என்றார் நரசிம்மன் கோபியிடம்.

"ஹாப்பி பர்த்டே அங்க்கிள்!" என்றான் கோபி.

"நான் ஒரு சாதாரண ஆளு. உங்ககிட்ட வேலை செய்யறேன். எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி என்னைப் பெருமைப்படுத்திட்டீங்களே! இன்னிக்கு என் பிறந்த நாள்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுதுன்னே எனக்குப் புரியல!" என்றான் சண்முகம்.

"ஒவ்வொத்தருக்கும் அவங்க பிறந்த நாள் விசேஷமானதுதான். இதில சாரணமானவங்க, விசேஷமானவங்கன்னு பிரிச்சுப் பார்க்க முடியாது. நீ வேலைக்குச் சேர்ந்தப்பவே உங்கிட்ட உன்னைப் பற்றின விவரங்களைக் கேட்டுக் குறிச்சுக்கிட்டேன். அதில உன் பிறந்த தேதியும் ஒண்ணு. அது உனக்கு மறந்து போயிருக்கலாம்! இன்னிக்கு உன்னோட பிறந்த நாள்ங்கறதால உனக்கு லீவு. இதை நான் நேத்திக்கே சொல்லி இருக்கலாம். ஆனா சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான் இன்னிக்குக் காலையில சொல்றேன். அப்புறம் உன் வீட்டுக்கு ஒரு கேக் வரும். அதை வெட்டிக் குடும்பத்தோடப் பிறந்த நாளை மகிழ்ச்சியாக் கொண்டாடு!"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை ஐயா!" என்றான் சண்முகம்.

சண்முகம் கிளம்பிச் சென்றதும், "என்னங்க இது, வேலைக்காரனோட பிறந்த நாளைக் கொண்டாடறீங்க. நம்ம பையன் அவனை அங்க்கிள்னு கூப்பிடணும்னு சொல்றீங்க! இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?" என்றாள் மல்லிகா, சற்றே கோபத்துடன்.

"நான் வேலை செய்யற இடத்தில என்னோட மேலதிகாரிகளுக்கும், என்னோட வேலை செய்யறவங்களுக்கும், எனக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கும் கூடப் பிறந்த நாள் வழ்த்து சொல்றேன். வீட்டில வேலை செய்யறவனுக்கு சொல்லக் கூடாதா? வேலைக்காரனா இருந்தாலும், வயசில பெரியவங்களை, சின்னவங்க மரியாதையா விளிக்கறதுதான் பண்பாடு. உத்தரவு போட்டாக் கூடப் பணிவோட போடலாமே!"

நரசிம்மன் சொன்னது மல்லிகாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் கூறியது கோபியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

கோபி வேலை செய்து வந்த நிறுவனத்தின் கிளை அலுவலகத்திலிருந்து வேறொரு கிளைக்கு மாற்றப்பட்டதும், பழைய கிளை அலுவலகத்தில் அவனுக்கு நடந்த விடைகொடுக்கும் நிகழ்ச்சியில் பலரும் அவன் திறமைகளையும், சிறப்புகளையும் பற்றிப் பேசினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினாலும், எல்லோருமே குறிப்பிட்டது அவனுடைய  நற்பண்புகளைப் பற்றித்தான். 

எல்லோரிடமுமே எளிமையாகவும், பணிவுடனும் பழக வேண்டும் என்று சிறு வயதில் தன் தந்தை தனக்குக் கற்பித்தது தன்னிடத்தில் எத்தனை சிறப்பான பண்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது என்று நினைத்து, மறைந்து விட்ட தன் தந்தைக்கு மனதுக்குள் அஞ்சலி செலுத்தினான் கோபி. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 100
பண்புடைமை

குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்: 
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...