"புரோநோட், பத்திரம் ஏதாவது எழுதி வாங்கினியா?" என்றான் அவன் நண்பன் மாதவன்.
"எதுவும் இல்லை. வெறும் வாய் வார்த்தைதான். அவரை மாதிரி மனுஷனுக்கெல்லாம் புரோநோட் எல்லாம் தேவையில்லை. புரோநோட்டை விட அவர் வாய் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்."
"நல்லவரா இருக்கறவங்க எப்பவுமே அப்படி இருப்பாங்கன்னு எப்படிச் சொல்ல முடியும்?"
"அப்படி இருக்கறவங்களைத்தான் நல்லவர்னு சொல்றோம்!"
"நீயும் நானும் வேலை செஞ்சோமே சரவணா அண்ட் கோ, அதோட முதலாளி சரவணனைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"
"ரொம்ப கண்ணியமானவரு, நேர்மையானவரு, நாணயமானவரு. நாம அங்கே வேலை செஞ்சப்ப, வாடிக்கையாளர் யாராவது நாம கொடுத்த சரக்கு தரமா இல்லேன்னு சொன்னா, தன்னோட செலவிலேயே அதைத் திருப்பி எடுத்துக்கிட்டு வந்து, அவங்களோட மொத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்திருக்காரே! வேற நல்ல வேலை கிடைச்சுதுன்னு அவர் கம்பெனியை விட்டு வந்தாலும், நாம வருத்தத்தோடதானே அங்கேந்து வெளியில வந்தோம்?"
"அப்படிப்பட்டவர் என்ன செஞ்சிருக்காரு தெரியுமா? வியாபாரத்துக்காக, தெரிஞ்சவங்க சில பேர்கிட்ட லாபத்தில பங்கு தரேன்னு சொல்லிக் கடன் வாங்கிட்டு, சொன்னபடி லாபத்தில பங்கு கொடுக்காம ஏமாத்தறாராம்!"
"அது எப்படி முடியும்?"
"ஏன்னா, கடன் பத்திரத்தில, அது அஞ்சு வருஷத்துக்கான வட்டியில்லாக் கடன்னு மட்டும்தான் எழுதி இருந்ததாம். லாபத்தில பங்கு கொடுக்கறதைப் பத்தி எதுவும் குறிப்பிடலையாம். கேட்டதுக்கு, 'சட்டப்படி அதையெல்லாம் பத்திரத்தில எழுத முடியாது. ஆனா, உங்களுக்கு 15 சதவீதத்துக்குக் குறையாம வருமானம் கிடைக்கும்'னு சொல்லி இருக்காரு. அவர் சொன்னதை நம்பி அவருக்குத் தெரிஞ்சவங்க சில பேர் பத்தாயிரம் ரூபாயிலேந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செஞ்சிருக்காங்க. இப்ப கேட்டா, தொழில்ல லாபம் இல்லை, அதனால எதுவும் கொடுக்க முடியாதுன்னு சொல்றாராம்!"
"உண்மையிலேயே லாபம் வரலையோ என்னவோ!"
"நீ வேற! லாபம் வந்துக்கிட்டுத்தான் இருக்காம். ஆனா, கடன் கொடுத்தவங்களை அவர் நல்லா ஏமாத்திட்டாருன்னு அங்கே வேலை செய்யறவங்க சொல்றாங்க. அவங்களோட நான் தொடர்பில இருக்கேன்னு உனக்குத் தெரியுமே!"
"என்னால நம்பவே முடியலியே! அவ்வளவு நேர்மையா இருந்தவர், எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சாரு?"
"தொழில்ல முதலீடு செய்ய அவருக்குப் பணம் தேவையா இருந்திருக்கு. யாரோ ஒரு ஆலோசகர் சொன்ன யோசனைப்படி, இப்படி செஞ்சுட்டாரு. அதான் அஞ்சு வருஷம் கழிச்சு முதலைத் திருப்பிக் கொடுக்கப் போறோமே, அதனால இது ஒண்ணும் ஏமாத்தறது இல்லைன்னு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கறாரோ என்னவோ!"
"எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சரவணன் மாதிரி நல்லவங்கள்ளாம் இப்படி மாறினா, இந்த உலகம் என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு!" என்றான் ராஜவேல்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
No comments:
Post a Comment