"இந்தக் காலத்தில நல்லவங்களா இருக்கறது இயலாத காரியம்."
"ஆமாம். புராணங்களிலேயே சொல்லி இருக்கே, ஒவ்வொரு யுகத்திலும் நல்ல விஷயங்கள் குறைஞ்சுக்கிட்டே வரும்னு. இந்தக் கலியுகத்தில நல்லவங்களைத் தேடிப் பிடிக்கறதே கஷ்டம்."
"நல்லவங்களா இருக்கறவங்க கூட, கஷ்ட காலம் வந்தா மாறிடுவாங்க."
"எப்படிச் சொல்ற?"
"எனக்குத் தெரிஞ்ச ஒரு அரசு அதிகாரி இருக்காரு. ரொம்ப நேர்மையானவரா இருந்தாரு. அவரோட துறையில காசு கொடுக்காம எந்த வேலையும் நடக்காது. ஆனா, அவர் மட்டும் ஒரு பைசா வாங்க மாட்டாரு. இப்படி இருந்தவரு கடைசி காலத்தில மாறிட்டாரு!"
"லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுட்டாரா?"
"ஆமாம். அவர் எங்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா, 'இத்தனை வருஷமா நேர்மையா இருந்து என்ன பயனைக் கண்டேன்? என்னோட வேலை செஞ்சவங்கள்ளாம் பெரிசா வீடு கட்டிக்கிட்டு, வசதியா வாழறாங்க. பிள்ளைங்களைப் பெரிய படிப்பு படிக்க வச்சு, ஆடம்பரமா கல்யாணம் செஞ்சு கொடுக்கறாங்க. ஆனா, என்னால என் பையனையும், பொண்ணையும் அதிக ஃபீஸ் கட்டி நல்ல காலேஜில படிக்க வைக்க முடியல. அவங்க ரெண்டு பேரும் நான் அவங்களைக் கைவிட்டுட்ட மாதிரி நினைக்கறாங்க. மீதி இருக்கிற காலத்திலேயாவது, கொஞ்சம் சம்பாதிச்சுக் குடும்பத்துக்கு விட்டுட்டுப் போகலாம்னு பாக்கறேன்'னு."
"அரசு அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கறாங்க. அவங்களே இப்படிச் சொன்னா, மத்தவங்க என்ன செய்யறது?"
"இதுக்கு நேர்மாறா ஒத்தர் இருக்காரு!"
"அவர் என்ன செஞ்சாரு?"
"அவரும் நீங்க சொன்ன அரசு அதிகாரி மாதிரிதான். லஞ்சம் வாங்க மாட்டாரு. தன்னோட பிள்ளைகளைத் தன் வசதிக்கு ஏத்த அளவில படிக்க வச்சாரு. சொந்த விடு இல்லை. திடீர்னு அவர் மனைவிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. ஒரு தனியார் மருத்துவமனையில சேத்தாரு. அவங்க டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு, அவங்களுக்கு இதயம், நுரையீரல்ல எல்லாம் பிரச்னை இருக்குன்னு சொல்லி, அதையெல்லாம் சரி பண்ணப் பல லட்சங்கள் செலவாகும்னு சொன்னாங்க. அவரோட ஆஃபீஸ்ல இருந்தவங்க விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. அவர்கிட்ட இருக்கற ஒரு ஃபைலை அவர் கிளியர் பண்ணினா, அவர் மனைவியோட மருத்துவச் செலவை எல்லாம் அந்த ஃபைலுக்குத் தொடர்பு உடையவர் பாத்துப்பார்னு அவரோட மேலதிகாரி அவர்கிட்ட சொன்னாரு. ஆனா, அவர் விதிகளை மீறி எதுவும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரு. இப்ப அவர் மனைவியைத் தனியார் மருத்துவமனையிலேந்து அழைச்சுக்கிட்டு வந்து அரசு மருத்துவமனையில சேர்த்திருக்காரு. தினம் ஆஃபீஸ் முடிஞ்சதும், மருத்துவமனைக்குப் போய் மனைவியைப் பாத்துட்டு வராரு."
சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது.
"கல்யாணம் சார் கொஞ்ச நாளா இங்கே வரதில்லையே!"
"'விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு'ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு! இத்தனை நேரம் இவர் யாரைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தாரு? கல்யாணம்தான் தினம் மனைவியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிடறாரே!"
"சாரி. நான் இங்கே தினம் வரதில்லையே! அதனால, இவர் சொன்னது கல்யாணம் சாரைப் பத்தித்தான் எனக்குத் தெரியல."
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
No comments:
Post a Comment