Thursday, October 5, 2023

988. முன்னாள் முதலாளி!

பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபரை முதலில் மணிக்கு அடையாளம் தெரியவில்லை.

சில விநாடிகள் கழித்துத்தான், சட்டென்று ஒரு பொறி தட்டியது.

 'கருணாகரனா இவர்? எப்படி மாறி விட்டார்!'

"சார்!" என்று அவர் அருகில் சென்று அழைத்தான் மணி.

திரும்பிப் பார்த்த கருணாகரன், உடனேயே அவனை அடையாளம் கண்டு கொண்டவராக, "அட, மணி! எப்படி இருக்கே?" என்றார்.

"எப்படி சார் என்னை உடனே அடையாளம் கண்டுபிடிச்சீங்க? எனக்கு உங்களை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியலியே!"

"நான் மாறி இருக்கலாம். நீ மாறாம அப்படியேதானே இருக்கே! இப்ப எங்கே வேலை செய்யற?"

"கார்த்திக் இண்டஸ்டிரீஸ்ல, சார்!"

"ஓ, ஞாபகம் வருது. நம்ம கம்பெனியிலேந்து அங்கேதானே போனே! வேலை எல்லாம் எப்படி இருக்கு?"

"எல்லாம் நல்லா இருக்கு சார். நீங்க ஏன் சார் பஸ் ஸ்டாப்ல நிக்கறீங்க? கார் ரிப்பேரா?"

"காரே இல்லைப்பா. இருந்தாதானே ரிப்பேர் ஆறதுக்கு?" என்ற கருணாகரன், "என்னோட பஸ் வந்துடுச்சு. நான் வரேன். ஆல் தி பெஸ்ட்" என்று கூறி விட்டு, பஸ்ஸில் ஏறிப் போய் விட்டார்.

வீட்டுக்குச் சென்றதும் மணி, கருணாகரனின் நிறுவனத்தில் தன்னுடன் பணி புரிந்த பாஸ்கரின் தொலைபேசி எண்ணைத் தேடி எடுத்து, அவனுக்கு ஃபோன் செய்தான் 

கருணாகரனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுத் தொழிலை நடத்த முடியாமல் அவர் அதை மூடி விட்டதாகவும், இப்போது அவர் வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதாகவும் பாஸ்கர் கூறினான்

"தொழிலை மூடினப்புறம், அவர் ஏன் வேலைக்குப் போகணும்? அவருக்கு வேற சொத்தெல்லாம் இருந்தது போல இருக்கே!" என்றான் மணி .

"இருந்தது. அதையெல்லாம் வித்து, கொடுக்க வேண்டிய கடனையெல்லாம் கொடுத்துட்டாரு. வக்கீல் கூட 'அதெல்லாம் அவசியமில்ல. உங்க தனிப்பட்ட சொத்தையெல்லாம் யாரும் அட்டாச் பண்ண முடியாது, கடன் கொடுத்தவங்க கோர்ட்டுக்குப் போனா, கேஸ் பல வருஷங்கள் இழுத்தடிக்கும், அப்புறமும் உங்களுக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்'னு சொன்னாராம். ஆனா கருணாகரன் சார், 'எனக்கு நஷ்டம் ஏற்பட்டதுங்கறதுக்காக எனக்குக் கடன் கொடுத்தவங்க யாரும் பணத்தை இழக்கக் கூடாது' ன்னு சொல்லித் தன் சொத்துக்களை வித்துக் கடன்களை எல்லாம் செட்டில் பண்ணிட்டாரு. அதோட, அவர் கம்பெனியில வேலை செஞ்ச எங்களுக்கெல்லாம் நஷ்ட ஈடா பெரிய தொகை கொடுத்தாரு. சட்டப்படி என்ன கொடுக்கணுமோ அதுக்கு மேலேயே கொடுத்ததோட, எங்களைத் தொடர்ந்து வேலையில வச்சுக்க முடியலையேன்னு எங்ககிட்ட மன்னிப்புக் கேட்டாரு. நஷ்ட ஈடா அவர் கொடுத்த பணத்தை வச்சுத்தான் சின்னதா ஒரு வியாபாரம் ஆரம்பிச்சு நான் பொழச்சுக்கிட்டிருக்கேன். அவரை மாதிரி ஒரு உயர்வான மனுஷனைப் பார்க்கவே முடியாது!" என்றான் பாஸ்கர்.

"அப்படிப்பட்ட நல்ல மனுஷன் இப்ப கஷ்டப்படறாரே! நாப்பது பேருக்கு வேலை கொடுத்தவரு, இன்னிக்கு சம்பாத்தியத்துக்காக வேலைக்குப் போறாரு. கார்ல போய்க்கிட்டிருந்தவரு, இப்ப பஸ்ல இல்ல போறாரு!" என்றான் மணி, வருத்தத்துடன்.

"ஆனா, அதெயெல்லாம் அவர் பெரிசா நினைக்கவே இல்லையே! அவர்கிட்ட அப்பப்ப பேசுவேன். வேலைக்குப் போறதையோ, பஸ்ஸில போறதையோ அவர் கௌரவக் குறைச்சலா நினைக்கல, அதுக்காக வருத்தப்படவும் இல்ல. முதலாளியா இருந்தப்ப எப்படி இருந்தாரோ, அதே மாதிரிதான் அமைதியா, சந்தோஷமா இருக்காரு! எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்றான் பாஸ்கர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)

குறள் 988:
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்: 
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...