"வாங்க, வாங்க! இது ரொம்ப சின்ன ஆஃபீஸ். நீங்க நாலு பேரும் உக்காந்துக்கறதுக்கு நாற்காலிகள் கூட இல்லை!" என்ற முருகேசன், தொழிலாளி ஒருவரை அழைத்து, தொழிற்சாலையிலிருந்து இரண்டு ஸ்டூல்களை எடுத்து வரச் சொல்லி, அவர் அமர்ந்திருந்த நாற்காலி உட்பட அங்கிருந்த மூன்று நாற்காலிகளிலும், ஒரு ஸ்டூலிலும் வந்தவர்களை அமரச் செய்து, தான் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.
"சாரி. இது ரொம்ப சின்ன ஆஃபீஸ். இங்கே பொதுவா விசிட்டர்கள் யாரும் வரது இல்ல" என்றார் முருகேசன், சங்கடத்துடன்.
"பரவாயில்ல, சார். எங்களை நீங்க அசோசியேஷன் கூட்டங்கள்ள பார்த்திருப்பீங்க. ஆனா, எங்க பேரெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ என்னவோ! என் பேர் சங்கரன், இவர் பழனி, இவர் மாயாண்டி, இவர் மருதாசலம்" என்று தங்களை அறிமுகப்படுத்துக் கொண்டார், வந்திருந்தவர்களில் ஒருவர்.
"சொல்லுங்க, சார்!" என்று முருகேசன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, ஸ்டிரா செருகப்பட்ட இளநீர்க் காய்களுடன் வந்த இரண்டு தொழிலாளிகள், ஒவ்வொருவர் கையிலும் ஒரு இளநீரைக் கொடுத்து விட்டுச் சென்றனர்.
"இங்கே காப்பி, கூல் டிரிங்க் எதுவும் கிடைக்காது. பக்கத்தில ஒரு இளநீர்க் கடைதான் இருக்கு!" என்றார் முருகேசன்.
"இந்த வெயிலுக்கு இளநீரை விட எதுவும் பெட்டர் இல்லை, சார்!" என்றார் மாயாண்டி.
"அது சரி. நீங்க சொல்லாமலேயே உங்க ஆள் இளநீர் வாங்கிக்கிட்டு வந்துட்டாரே, அது எப்படி?" என்றார் பழனி.
"என்னைப் பார்க்க யாராவது வந்தா, இளநீர் வாங்கிக்கிட்டு வரச் சொல்லி முன்னாடியே சொல்லி இருக்கேன்" என்ற முருகேசன், "இங்கே பக்கத்தில டீக்கடை எதுவும் இல்லாதால, தொழிலாளிகளுக்கு கம்பெனி செலவில தினம் ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்கறோம். இதனால, சில தொழிலாளிகள் காப்பி, டீ குடிக்கறதையே விட்டுட்டாங்க!" என்றார்.
"அருமையான விஷயம், சார்! எல்லாருமே இதைப் பின்பற்றலாம்" என்ற சங்கரன், தொடர்ந்து, "நாங்க இங்கே வந்தது, வரப் போற நம்ம அசோசியேஷன் தலைவரைத் தேர்ந்தெடுக்கறதைப் பத்திப் பேசத்தான்" என்றார்.
"சொல்லுங்க, சார்! நீங்க யாராவது தேர்தல்ல நிக்கறீங்களா? ஆனா, நம்ம அசோசியேஷன் தலைவரைப் போட்டி இல்லாமதானே தேர்ந்தெடுக்கறது வழக்கம்?"
"ஆமாம். இந்த முறை உங்களைத் தேர்ந்தெடுக்கலாம்னு இருக்கோம். அதுக்கு உங்க சம்மதத்தைக் கேக்கத்தான் வந்திருக்கோம்!"
"என்னையா?" என்றார் முருகேசன், நம்ப முடியாமல். "நான் ஏதோ ஒரு சின்னத் தொழிலை நடத்திக்கிட்டிருக்கேன். அசோசியேஷன் செயல்பாடுகளைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது."
"அதுக்குத்தான் செகரட்டரின்னு ஒத்தரை நியமிச்சிருக்கோமே, அவர் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. தலைவர்ங்கறது ஒரு கௌரவப் பதவிதான். இந்த முறை, அந்த கௌரவத்தை உங்களுக்குக் கொடுக்கலாம்னு இருக்கோம்" என்றார், இவ்வளவு நேரம் மௌனமாக இருந்த மருதாசலம்.
"ஆனா, என்னை எப்படி சார்...?" என்றார் முருகேசன், என்ன சொல்வதென்று தெரியாமல்.
"சார்! நீங்க ஒரு சின்னத் தொழிலை நடத்தறவரா இருக்கலாம். ஆனா, நீங்க எல்லார்கிட்டேயும் பண்பாப் பழகறது உங்க மேல எல்லாருக்குமே ஒரு மதிப்பை ஏற்படுத்தி இருக்கு. அதையும் தவிர, தொழில்ல நீங்க நேர்மையானவர்னு பேர் வாங்கி இருக்காங்க. நீங்க எல்லாத்தையும் முறையாச் செய்யறவரு, யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க மாட்டீங்கன்னு அரசு அதிகாரிகளே உங்களைப் பத்தி சொல்றாங்க. இங்கே வந்தப்புறம், உங்களைப் பத்தி நாங்க நினைச்சது சரிதான்னு எங்களுக்கு உறுதியாயிடுச்சு. தொழிலாளிகளுக்கு தினம் கம்பெனி செலவில இளநீர் கொடுக்கற ஒரே தொழிலதிபர் நீங்களாத்தான் இருப்பீங்க. உங்க விருந்தோம்பல் பண்பு எப்படிப்பட்டதுன்னு நாங்க நேரிலேயே பார்த்தோம். உங்க நாற்காலியை எங்களுக்குக் கொடுத்துட்டு, நீங்க ஸ்டூல்ல உக்காந்திருக்கீங்க! உங்களை மாதிரி பண்பாளர், பெரிய தொழிலதிபரா இருக்கணும்னு அவசியமில்லை. சொல்லப் போனா, பெரிய தொழிலதிபரா இருக்கறது, சாதனைகள் செய்யறது எல்லாத்தையும் விட இப்படி ஒரு பண்பாளரா இருக்கறதுதான் உயர்வான விஷயம். தயவு செஞ்சு, எங்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு, நம்ம அசோசியேஷனுக்குத் தலைவரா இருக்க ஒத்துக்கங்க!" என்றார் சங்கரன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (சிறந்த பண்பு)
குறள் 982:
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
No comments:
Post a Comment