Sunday, October 1, 2023

981. "தெருவிளக்கு எரியவில்லை"

"சார்! உங்களை  ஏ.டி. கூப்பிடறாரு" என்றான் பியூன்.

பஞ்சநதம் துணை இயக்குனரின் அறைக்குச் சென்றார்.

"உக்காருங்க பஞ்சநதம்!" என்றார் துணை இயக்குனர்.

பஞ்சநதம் உட்கார்ந்தார்.

"உங்களுக்கு ஒரு ஃபைல் அனுப்பி இருந்தேனே, பார்த்தீங்களா?"

"அதை கிளியர் பண்ணி உங்களுக்கு அனுப்பிட்டேனே!"

"அப்படியா?" என்று வியப்புடன் கூறிய துணை இயக்குனர், தன் மேசை மீதிருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார்.

"ஆமாம், வந்திருக்கு!" என்றபடியே குறிப்பிட்ட கோப்பைப் பிரித்துப் பார்த்த துணை இயக்குனர் மகிழ்ச்சியுடன், "உங்களுக்கு இந்த ஃபைலை அனுப்பறதுக்கு முன்னால வேற ரெண்டு அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தேன். அவங்க அதை தங்களோட டிபார்ட்மென்ட் ஃபைல் இல்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டாங்க. அப்புறம்தான் உங்களுக்கு அனுப்பினேன்" என்றார்.

பஞ்சநதம் மௌனமாக இருந்தார்.

"இந்த ஃபைல் மூணு டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்டது. மூணு டிபார்ட்மென்ட்ல எந்த டிபார்ட்மென்ட்டும் இந்த ஃபைலை ஹேண்டில் பண்ணலாம். ஆனா இது ஒரு அரசாங்க நிறுவனங்கறதால மத்த ரெண்டு டிபார்ட்மென்ட் அதிகாரிகளும் இது தங்களோட வேலை இல்லைன்னு சொல்லி ஃபைலைத் திருப்பி அனுப்பிட்டாங்க. மூணாவது டிபார்ட்மென்ட் அதிகாரியான நீங்களும் அப்படிச் சொல்லிடப் போறீங்களோன்னு நினைச்சுதான் உங்களைக் கூப்பிட்டேன். ஆனா நீங்க அதுக்குள்ள வேலையை முடிச்சு ஃபைலை எனக்கு அனுப்பிட்டீங்க. வெரிகுட் பஞ்சநதம்" என்றார் துணை இயக்குனர் பாராட்டும் தொனியில்.

"என் டிபார்ட்மென்ட் தொடர்பான விஷயங்களும் இதில இருக்கும்போது இது என்னோட வேலை இல்லைன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் பஞ்சநதம்.

"எல்லா விவரங்களையும் முழுசா ஃபில் அப் பண்ணி இருக்கீங்களே! மற்ற ரெண்டு டிபார்ட்மென்ட் விவரங்களை எப்படி ஃபில் அப் பண்ணினீங்க?" என்றார் துணை இயக்குனர் கோப்பைப் படித்தபடியே..

"அந்த ரெண்டு டிபார்ட்மென்ட்டுக்கும் போய் அவங்களோட உக்காந்து விவரங்களைக் கேட்டு ஃபில் அப் பண்ணினேன்" என்றார் பஞ்சநதம்.

'உங்களுக்கு ஏன் சார் இந்த வேண்டாத வேலை?' என்று அந்த டிபார்ட்மென்ட்டின் ஊழியர்களும், அதிகாரிகளும் அலுத்துக் கொண்டதைப் பஞ்சநதம் துணை இயக்குனரிடம் சொல்லவில்லை!

"உங்க ஆட்டிட்யூட் எல்லாருக்கும் இருந்தா நாம எவ்வளவோ சிறப்பா செயல்படலாம்" என்று பெருமூச்சுடன் கூறிய துணை இயக்குனர், "தாங்க் யூ வெரி மச்!" என்றார் பஞ்சநதத்தைப் பார்த்துச் சிரித்தபடி.

"சார்! போன வாரம் வந்த அந்தப் பெரிசு மறுபடி வந்திருக்கு சார்!" என்றான் பியூன்.

'இந்த ஆளோட பெரிய தொந்தரவாப் போச்சே!' என்று தனக்குள் அலுத்துக் கொண்ட நகராட்சியின் உதவிப் பொறியாளர் "சரி உள்ளே அனுப்பு!" என்றார் பியூனிடம்.

உள்ளே வந்த அந்த முதியவர், "சார்! நீலகண்டன் தெருவில தெருவிளக்கு எரியல" என்றார்.

"போனவாரம் வந்தீங்க இல்ல?"

"ஆமாம்."

" அப்ப வேற தெருப் பேரு சொன்னீங்களே!"

"ஆமாம். அது நான் குடி இருக்கிற இளங்கோ தெரு. அங்கே தெருவிளக்கு எரியலேன்னு சொன்னேன். அதைச் சரி பண்ணீட்டீங்க. நன்றி!"

"நீலகண்டன் தெருவைப் பத்தி நீங்க ஏன் புகார் கொடுக்கறீங்க? உங்க சொந்தக்காரங்க யாராவது அங்கே இருக்காங்களா?"

"அதெல்லாம் இல்லை. நேத்து ராத்திரி அந்தத் தெரு வழியா வந்தபோது கவனிச்சேன்."

"ஆனா அது நீங்க இருக்கற தெரு இல்லையே! அங்கே தெருவிளக்கு எரியலேன்னு நீங்க ஏன் புகார் கொடுக்கறீங்க?"

"சார்! அந்தத் தெருவில நடந்து வந்தபோது தெஉவிளக்கு எரியலேன்னு நான் பார்த்ததால வந்து உங்ககிட்ட சொல்றேன். தெருவிளக்கு எரிஞ்சா அந்தத் தெருவில இருக்கறவங்களுக்கு நல்லதுதானே! ஒரு நல்ல விஷயத்துக்காக யார் வேணும்னா முயற்சி செயலாமே சார்!"

அந்த முதியவரை வியப்புடன் பார்த்த உதவிப் பொறியாளர் தனக்கு அருகிலிருந்த ஷெல்ஃபிலிருந்து ஒரு நோட்டை எடுத்து, "சரி. உங்க புகாரை எழுதிக்கறேன். புகார் கொடுத்தவங்க பேரை இதில எழுதணும். உங்க பேர் சொல்லுங்க" என்றார்.

"பஞ்சநதம்" என்றார் முதியவர். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 99
சான்றாண்மை (உயர்ந்த தன்மை)

குறள் 981:
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

பொருள்: 
நாம் செய்யத் தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்லவை எல்லாம் அவர்களுக்கு இயல்பான கடமைகளாக இருக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1061. ஏன் உதவி கேட்கவில்லை?

"இன்னும் ஒரு வாரத்தில ஆபரேஷன் பண்ணணும்!" என்றார் டாக்டர். "முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க!" டாக்டரின் அறையிலிருந்து வெளியே...