Sunday, October 1, 2023

980. இரண்டு கருத்துக்கள்

"என்ன மனோகரன், அக்கவுண்டண்ட் போஸ்டுக்கான இன்டர்வியூ முடிஞ்சு போச்சா?" என்றார் நிர்வாக இயக்குனர் நாகப்பன்.

"முடிஞ்சு போச்சு சார். ஒத்தரை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். ஆனா முடிவு செய்யறதுக்கு முன்னால உங்களோட ஆலோசனையைக் கேக்கணும்னு நினைச்சேன்" என்றார் பொது மேலாளர் மனோகரன்.

"என்னோட ஆலோசனை எதுக்கு? அவர் உங்ககிட்டதானே ரிபோர்ட் பண்ணப் போறாரு? நீங்களே முடிவு செய்யலாமே!"

"நான் இன்டர்வியு பண்ணின வகையில அவர் திறமையானவர்னுதான் சொல்லுவேன். படிப்பு, அனுபவம் எல்லாம் இருக்கு. உற்சாகமும், உத்வேகமும் உள்ளவராத்தான் இருக்காரு. நமக்குப் பொருத்தமானவராத்தான் இருப்பாருன்னு நினைக்கறேன்."

"அப்புறம் என்ன?"

"நம்ம வழக்கப்படி அவர் இப்ப வேலை செய்யற நிறுவனத்தை விட்டுட்டு, இதுக்கு முன்னே வேலை செஞ்ச ரெண்டு இடங்கள்ள அவரைப் பத்திக் கேட்டேன். இரண்டு பேரும் அவரைப் பத்தி எதிர்விதமா சொன்னாங்க."

"என்ன சொன்னாங்க?"

"அவர் ரொம்பத் திறமையானவர். விஷயங்களைத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு செயல்படறவர், வேலையில ரொம்ப கவனமா இருப்பாரு, நாம ஏதாவது யோசனை சொன்னா, அது அவருக்கு சரின்னு தோணினா எடுத்துப்பாரு, இல்லாட்டா 'சாரி சார் அது சரியா வராது'ன்னு சொல்லிடுவாரு... இப்படியெல்லாம் ரொம்ப பாசிடிவா சொன்னாரு."

"சரி. இன்னொத்தர்?"

"வேகமா செயல்பட மாட்டாரு, நாம ஏதாவது சொன்னா கேக்க மாட்டாரு, அவரு இஷ்டத்துக்குத்தான் நடந்துப்பாரு. கொஞ்சம் கூட டைனமிஸம் கிடையாது, சோம்பேறி அப்படின்னெல்லாம் நெகடிவா சொன்னாரு. அதனாலதான் எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருக்கு."

"இதில எந்தக் குழப்பமும் இல்லை மனோகரன்! கருத்துச் சொன்ன ரெண்டு பேரும் தங்களைப் பத்தித்தான் சொல்லி இருக்காங்க, கேண்டிடேட்டைப் பத்தி இல்ல!" என்றார் நாகப்பன் சிரித்துக் கொண்டே.

"என்ன சார் சொல்றீங்க?"என்றார் மனோகரன்.

"நீங்க அவரை இன்டர்வியூ பண்ணினீங்களே, அதோட அடிப்படையில அவரைப் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"திறமையானவர்னுதான்."

"அவரைப் பத்தி நல்லவிதமா கருத்து சொன்னவர் அதைத்தானே சொல்லி இருக்காரு? அதனால, அது உண்மைதானே! அதோட அவர் கவனமானவரு, தப்பான விஷயங்களுக்கு இடம் கொடுக்க மாட்டாரு, எதையுமே தனக்கு சரின்னு பட்டாதான் ஏத்துப்பாருன்னு சொல்லி இருக்காரு. இப்படிச் சொன்னவர் பண்பு உள்ளவர். அதனாலதான் அவர்கிட்ட இருந்த நல்ல விஷயங்களை மட்டும் பாத்திருக்காரு. இன்னொருத்தருக்கு அந்தப் பண்பு இல்லாததால அவர் குறைகளை மட்டுமே சொல்லி இருக்காரு."

"ஒத்தரோட குறைகளைச் சொல்றதே தப்புன்னு சொல்ல முடியுமா?"

"நான் அப்படிச் சொல்லல. குறைகளைச் சொன்னவர் அவரோட திறமையைப் பத்தியும் சொல்லி இருக்கணும் இல்ல? நீங்களே உங்க இன்டர்வியூவில அவரோட திறமையைக் கண்டறிஞ்சிருக்கீங்க இல்ல?அவர் திறமையானவர்தான், ஆனா அவர்கிட்ட சில குறைகள் இருக்குன்னு சொல்லி இருந்தா அது சரி. திறமையைப்பத்திச் சொல்லாம குறைகளை மட்டும் சொன்னது சொன்னவரோட சிறுமையைத்தான் காட்டுது."

"அப்படிப் பார்த்தா அவரோட நிறைகளைச் சொன்னவர் குறைகளைச் சொல்லாததும் தப்புதானே!"

"குறைகள் பெரிசா இருந்தா சொல்லி இருக்கணும்தான். அவர் நேர்மை இல்லாதவர், பொறுப்பு இல்லாதவர் என்கிற மாதிரிக் குறைகள் இருந்தா அதையெல்லாம் சொல்லாம இருந்தா அது தப்புதான். ஆனா இவர்கிட்ட அந்த மாதிரிக் குறைகள் இல்லையே! கூர்ந்து பார்த்தா இவர்கிட்ட குறைகள்னு இன்னொருத்தர் சொன்னதே இவரோட நிறைகளைத்தானோன்னு நான் நினைக்கிறேன்!"

"எப்படி சார் சொல்றீங்க?"

"விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு கவனமா செயல்படறவருன்னு ஒத்தர் சொன்னாரு?  இன்னொருத்தர் அதையே வேகமா செயல்படாதவர்னு சொல்றாரு. தனக்கு சரின்னு பட்டால் ஒழிய நாம சொன்னதை ஏத்துக்க மாட்டார்னு ஒத்தர் சொல்றாரு. அதையே இன்னொருத்தர் டைனமிஸம் இல்லைன்னு சொல்றாரு. குறை கண்டுபிடிக்கிற இயல்பு இருக்கறதாலதான் அவர் இப்படிச் சொன்னார்னு இதிலேந்து தெளிவாகுதே" என்றார் நாகப்பன்.

"உங்ககிட்ட பேசினதால கேண்டிடேட்டைப் பத்தி என்னால சரியா புரிஞ்சுக்க முடிஞ்சதோட, கேண்டிடேட்டைப் பத்திக் கருத்துச் சொன்னவங்களையும் புரிஞ்சுக்க முடிஞ்சது. நன்றி சார்" என்றார் மனோகரன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

பொருள்: 
பெருமைப் பண்பு பிறருடைய குறைகளை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றங்களையே எடுத்துக் காட்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...