கல்லூரியில் வகுப்பு முடிந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்புகையில், சில மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, மணவாளன் பற்றிப் பேச்சு வந்தது.
"இவர் மாத்ஸ் புரொஃபசர். ஆனா, கல்லூரியிலேயே நான்தான் பெரிய அறிவாளின்னு சொல்லிக்கறாரே, அது எப்படி? ஃபிசிக்ஸ், கெமிஸ்டிரி டிபார்ட்மென்ட்ல கூட இவரை விட அறிவாளி யாரும் இல்லேன்னு எப்படிச் சொல்றாரு?" என்றான் ஒரு மாணவன்.
"அவர் முப்பதுக்கு மேலே ரிஸர்ச் பேப்பர்ஸ் சப்மிட் பண்ணி இருக்காராம். அதனால, தன் அளவுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சுக்கிட்டிருக்கார் போலருக்கு. தன்னைத்தானே உயர்த்திப் பேசறவங்க அப்படிதான் பேசுவாங்க. உலகத்திலேயே நான்தான் பெரிய அறிவாளின்னுக் கூடச் சொல்லிப்பாங்க!" என்றான் மற்றொரு மாணவன்.
"மாத்ஸ் டிபார்ட்மென்ட்டை மட்டும் எடுத்துக்கிட்டா கூட, ஆதிகேசவன் சார் இவரை விடப் பெரிய அறிவாளின்னுதான் நான் சொல்லுவேன்!"
"எப்படி? அவர் பி.எச்.டி கூடப் பண்ணலியே!"
"பி.எச்.டி பண்ணாட்டா என்ன? எப்படி வகுப்பு எடுக்கறாரு! எவ்வளவு தெளிவா சொல்லிக் கொடுக்கறாரு! என்ன சந்தேகம் கேட்டாலும் விளக்கமா பதில் சொல்றாரு. எவ்வளவு கஷ்டமான கணக்கைக் கொடுத்தாலும், உடனே சால்வ் பண்ணிடுவாரு. ஆனா, மணவாளன் சார்கிட்ட ஏதாவது சந்தேகம் கேட்டா, 'பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்'பாரு. ஆனா பல சமயங்கள்ள, அதைப் பத்தி அப்புறம் பேசவே மாட்டாரு. அவரால அதை சால்வ் பண்ண முடிஞ்சிருக்காதுன்னு நினைக்கறேன்!"
"எப்படி இருந்தா என்ன? மணவாளன் சார் பி.எச்.டி. அது அவருக்குப் பெருமைதானே? ஆதிகேசவன் சாருக்கு நல்ல நாலட்ஜ் இருக்கு, நல்லா சொல்லிக் கொடுக்கறாருன்னாலும், அவர் பி.எச்.டி இல்லையே! அது அவருக்கு மதிப்புக் குறைவுதானே?"
"மணவாளன் சார் தனக்குத்தானே தம்பட்டம் அடிச்சுக்கறாரு. ஆனா, நாம அவரைக் கேலி செஞ்சுதானே பேசறோம்! ஆதிகேசவன் சார் அடக்கமா இருக்காரு. நாம அவரைப் புகழ்ந்து பேசறோம். ரெண்டு பேர்ல யாருக்கு உண்மையாகவே பெருமை இருக்குன்னு இதிலேந்தே தெரிஞ்சுக்கலாமே!"
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை
குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
No comments:
Post a Comment