வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்ட சண்முகம், "வெண்மேகம் கார்மேகம் ஆகறதுன்னா என்ன அர்த்தம்?" என்றான்.
"ஆவியான நீர் வெண்மேகத்தில சேர்ந்தா, அது கார்மேகம் ஆகும். அதுதான் மழை தரும் மேகம். தெரியாத மாதிரி கேக்கற! நீ தமிழ் படிச்சவன்தானே?" என்றான் அவன் நண்பன் சசி.
"தெரியும். ஆனா, கார்மேகம் வெண்மேகமா ஆனா எவ்வளவு கொடுமையா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன்!"
"என்னடா சொல்ற?"
"எங்க ஊர்ல தேவராஜன்னு ஒத்தர் இருந்தாரு - இப்பவும் இருக்காரு. எங்க ஊர்ல அவர் உதவி செய்யாத மனுஷங்களே இல்லைன்னு சொல்லலாம். யாருக்கு என்ன கஷ்டம்னாலும், அவர்கிட்டதான் போவாங்க. பசியோட இருக்கற ஒருத்தர் அவர் வீட்டுக்குப் போனா, சாப்பாடு கிடைக்கும். ஒரு குடும்பம் கஷ்டப்பட்டா, அவங்களுக்கு அரிசி, பணம்னு கொடுப்பாரு. படிப்புக்குப் பணம் கொடுத்து உதவறது, உடம்பு சரியில்லாதவங்களை மருத்துவமனைக்கு எடுத்துக்கிட்டுப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவறது, மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவறதுன்னு எல்லாருக்கும் எல்லா விதத்திலேயும் உதவி செய்வாரு. அவர் ஒரு மழை மேகம் மாதிரிதான்" என்றான் சண்முகம்.
"சரி. இப்ப எப்படி இருக்காரு?"
"சமீபத்தில அவரைப் பார்த்தேன். சாலையில நடந்து போய்க்கிட்டிருந்தாரு. பார்த்துப் பேசினேன். கோர்ட் தீர்ப்பால, அவரோட சொத்தெல்லாம் அவரோட சித்தப்பா பையன்களுக்குப் போயிடுச்சாம். ஹைகோர்ட்ல அப்பீல் பண்ணி இருக்காரு. அதுக்காக சென்னைக்கு வந்திருக்காரு. யாரோ சொந்தக்காரங்க வீட்டில தங்கி இருக்காரு. அவர் எங்கிட்ட வெளிப்படையா சொல்லாட்டாக் கூட, சொத்தும் இல்லாம, வருமானமும் இல்லாம கஷ்டப்படறாருன்னு தெரிஞ்சது. ஹைகோர்ட்ல நடக்கற வழக்குக்கு வேற பணம் செலவழிக்கணும். ஊர்ல இருக்கிறவங்கள்ளாம் மருத்துவமனைக்குப் போகத் தன்னோட காரைக் கொடுத்து உதவின மனுஷன், உடம்பு சரியில்லைன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு நடந்து போய்க்கிட்டிருந்தாரு! நான் ஆட்டோல கொண்டு விட்டேன். அவரோட நிலையைப் பார்த்தா, கார்மேகம் வெண்மேகமா ஆயிட்ட மாதிரிதான் இருந்தது!"
"கவலைப்படாதே! அவர் வழக்கில ஜெயிச்சு, சொத்தெல்லாம் அவருக்குத் திரும்பக் கிடைச்சா, பழையபடி ஆயிடுவாரு!" என்றான் சசி.
"அவருக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. ஹைகோர்ட்ல அவருக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வரும்னு வக்கீல் உறுதியாச் சொல்றாராம், ஆனாலும், எல்லாருக்கும் உதவி செஞ்சுக்கிட்டு நல்ல பேரோட இருந்த ஒரு சிறந்த மனுஷர் கஷ்டப்படறது தற்காலிகமானதா இருந்தாலும். அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" என்றான் சண்முகம்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)
குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
No comments:
Post a Comment