Tuesday, October 24, 2023

1009. தினகரனின் சொத்துக்கள்

தினகரன் வறுமை நிலையிலிருந்து முன்னேறி வந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.

மிகச் சிறிய முதலீட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்பதில் தொடங்கிய அவருடைய தொழில் முயற்சி மேலும் மேலும் வெற்றி பெற்று ஒரு பெரிய வியாபாரியாக வளர்ந்து விட்டார்.

வியாபாரம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அவருடைய திடீர் மரணம் நிகழ்ந்தது.

 தினகரன் மறைந்து விட்டார் என்ற செய்தி அவர் குடும்பத்தினரையும், அவர் நிறுவனத்தின் ஊழியர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"நாப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது. திடீர்னு போயிட்டாரு. மாரடைப்புன்னு சொல்றாங்க" என்றார் அவருடைய நிறுவனத்தின் மேலாளர் சாம்பசிவம்.

"கம்பெனி தொடர்ந்து நடக்குமா சார்?  அவர் பையனும் பொண்ணும் இன்னும் படிப்பையே முடிக்கலியே!" என்றான் செல்வராஜ் என்ற ஊழியன்.

"தெரியல. அவங்க கம்பெனியைத் தொடர்ந்து நடத்தறது சந்தேகம்தான். வேற வேலைக்கு இப்பவே முயற்சி பண்ணுங்க. இங்கே சம்பளம் ரொம்ப கம்மியாத்தானே கொடுக்கறாங்க? நான் கூட வேற வேலைக்கு முயற்சி செய்யப் போறேன்!" என்றார் சாம்பசிவம்.

தினகரன் மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவருடைய ஆடிட்டர் கண்ணப்பன் சினகரனின் வீட்டுக்கு வந்து தினகரனின் மனைவி கலாவதியைச் சந்தித்துப் பேசினார்.

"உங்க கணவரைப் பத்தின சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லணும். அவர் என்னோட நண்பர்தான். ஆனா என் ஆலோசனைகளைக் கேக்காம அவர் சில காரியங்களை செஞ்சாரு. அதனால இப்ப உங்களுக்குத்தான் பிரச்னை!  " என்று ஆரம்பித்தார் கண்ணப்பன்.

"என்ன செஞ்சாரு? என்ன பிரச்னை?" என்றாள் கலாவதி.

"தினகரன் கடுமையான உழைப்பாளி. ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சு வியாபாரத்தைப் பெருக்கினாரு."

"அது எனக்குத் தெரியுமே! குடும்பத்தை எங்கே அவர் கவனிச்சாரு? குழந்தைகள்கிட்ட அன்பா ரெண்டு வார்த்தை கூடப் பேசினதில்ல. இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு நிறைய சொத்து சேர்த்திருக்கணுமே! அப்படி ஒண்ணும் தெரியலியே!" என்றாள் கலாவதி விரக்தியுடன்.

"அதைத்தான் சொல்ல வந்தேன். அவரு நிறைய சம்பாதிச்சாரு. ஆனா வருமான வரி கட்டணுமேங்கறதுக்காக பாதி பிசினசை பிளாக்கில பண்ணினாரு. பணத்தைக் கையில வச்சுக்காம சில பேருக்கு வட்டிக்கு விட்டாரு. யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்காருன்னு அவருக்குத்தான் தெரியும். அவர் இப்ப போனப்புறம் கடன் வாங்கினவங்க பணத்தைத் திருப்பிக் கொடுப்பாங்களா?"

"அடப்பாவி! இப்படியா செஞ்சு வச்சிருக்காரு? எங்கிட்டயாவது சொல்லி இருக்கலாம், இல்ல?"

"சொல்லி இருந்தா மட்டும்? கடன் வாங்கினவங்ககிட்ட நீங்க போய்க் கேட்டா அவங்க கொடுத்துடுவாங்களா? அவரு புரோநோட்டு கூட எழுதி வாங்கலியே! அதோட இல்ல. மானேஜர் சாம்பசிவம் பேரில ஒரு கம்பெனி ஆரம்பிச்சு பாதி பிசினசை அந்த கம்பெனியில செஞ்சாரு. இப்ப சாம்பசிவத்துக்கிட்ட கேட்டா, அவன் 'அது என்னோட பிசினஸ்தான். தினகரன் சாரோட அனுமதியோட நான்தான் அந்த பிசினஸை நடத்திக்கிட்டு வரேன்'னு சொல்றான்!"

"இப்படியா ஏமாத்துவான்? கம்பெனியில வேலை செஞ்சவங்களுக்கு உண்மை தெரியும் இல்ல? அவங்க சொல்ல மாட்டாங்களா?"

"தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. திவாகர் சார் தன்கிட்ட வேலை செய்யறவங்களுக்கெல்லாம் ரொம்ப குறைச்சலாத்தான் சம்பளம் கொடுத்தாரு. 'நியாயமான சம்பளம் கொடுங்க சார், அப்பதான் வேலை செய்யறவங்க விசுவாசமா இருப்பாங்க' ன்னு நான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவர் கேக்கல. அதனால கம்பெனி  யாரும் உண்மையைச் சொல்ல மாட்டாங்க. அவங்களைத் தன்னோட கம்பெனியில வேலைக்கு வச்சுக்கறதாகவும், சம்பளம் அதிகமாக் கொடுக்கறதாகவும் சாம்பசிவம் அவங்ககிட்ட சொல்லி இருக்கான். அதனால அவங்க யாரும் சம்பசிவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டாங்க. அப்படியே யாராவது உண்மையைச் சொன்னாலும், ரிகார்டுகள்படி அந்த கம்பெனி சாம்பசிவம் பேரில இருக்கறதால நம்மால எதுவும் செய்ய முடியாது. வருமான வரி கட்டாம தப்பிக்கறதுக்காக தினகரன் செஞ்ச காரியம் இப்ப உங்களுக்கே இழப்பை ஏற்படுத்தி இருக்கு" என்றார் கண்ணப்பன்.

'இவ்வளவு சொல்றீங்களே, உங்க பேரிலேயே அவரு ஏதாவது பினாமி சொத்து வாங்கி இருக்கலாம், அல்லது பணமாவது கொடுத்து ருக்கலாம். அப்படி இருந்தா நீங்க அதை எங்கிட்ட சொல்லவா போறீங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கலாவதி, "சரி சார். எங்க விதி அப்படி! எங்களுக்குன்னு என்ன விட்டு வச்சிருக்காரோ அதை மட்டும் வச்சுக்கிட்டு நாங்க திருப்திப்பட வேண்டியதுதான்" என்றாள் விரக்தியுடன்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்: 
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தை மற்றவர்கள் அனுபவிப்பார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...