ஆய்வு விரைவிலேயே முடிந்து விட்டது. ஊரிலிருந்து திரும்பிப் போக மாலையில்தான் பஸ்.
"என் வீட்டுக்கு வாங்க, சார்! நீங்க அங்கேயே ஓய்வு எடுத்துக்கலாம்" என்று அழைத்தார் தலைமை ஆசிரியர் முகுந்தன்.
"வேண்டாம், சார்! வெய்யில் இல்லை. கிளைமேட் நல்லா இருக்கு. கொஞ்ச நேரம் ஊருக்குள்ள நடந்துட்டு வரேன்" என்று கிளம்பினார் சோமசுந்தரம்.
"நானும் உங்களோட வரேன்!" என்றார் முகுந்தன்.
ஊரில் இருந்த இரண்டு சிறிய கோவில்கள், பஞ்சாயத்து போர்டு அலுவலகம், பாசனக் கால்வாய் இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, ஒரு தெருவுக்குள் நுழைந்தனர்.
தெருவில் நுழைந்ததுமே, அந்தப் பெரிய வீடு சோமசுந்தரத்தின் கவனத்தைக் கவர்ந்தது.
"இந்த வீட்டில இருக்கறவர்தான் இந்த ஊரிலேயே பெரிய பணக்காரரா இருப்பாரோ?" என்றார் சோமசுந்தரம்.
"ஆமாம். அவர் பேர் விநாயகம். வீட்டுத் திண்ணையில உக்காந்திருக்காரு பாருங்க, அவர்தான்" என்றார் முகுந்தன்.
அந்த வீட்டுக்கு அருகில் வந்ததும், தெருவில் நின்றபடியே விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்த முகுந்தன், "ஸ்கூல் இன்ஸ்பெக்டர்" என்று சோமசுந்தரத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சோமசுந்தரம் விநாயகத்துக்கு வணக்கம் தெரிவித்தார். விநாயகம் பதிலுக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கவில்லை. தலையை மட்டும் ஆட்டினார்.
அவர் வீட்டைத் தாண்டிச் சற்றுத் தொலைவு வந்ததும், "ரொம்ப அமைதியானவரா இருப்பார் போல இருக்கு" என்றார் சோமசுந்தரம்.
"ஊர்ல யாரும் அவர்கிட்ட பேச்சு வச்சுக்க மாட்டாங்க. அமைதியாத்தானே இருக்கணும்?"
"ஏன் அப்படி? ஊர்க்காரங்களோட சண்டையா?"
"அதெல்லாம் எதுவுமில்லை. அவர் யாருக்கும் ஒரு சின்ன உதவி கூடச் செய்ய மாட்டாரு. ஊர்ப் பொதுக் காரியங்களுக்கும் உதவி செய்ய மாட்டாரு. அதனால, ஊர்ல யாரும் அவர்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்கறதில்லை."
"ஊர்லேயே பெரிய பணக்காரரா இருந்துக்கிட்டு யாருக்கும் உதவாம இருந்தா எப்படி?"
"அவர் அப்படித்தான். இப்ப கூட பாருங்க. நீங்க வெளியூர்லேந்து வந்திருக்கீங்க. உங்களை அறிமுகப்படுத்தி வச்சேன். வேற ஒத்தரா இருந்தா, ஒரு மரியாதைக்காகவாவது வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட்டிருப்பாங்க. ஆனா, அவர் உங்களுக்கு பதில் வணக்கம் கூடச் சொல்லலியே!"
"வீட்டுக்குள்ள கூப்பிட்டா, தண்ணியாவது கொடுக்க வேண்டி இருக்குமேன்னு யோசிச்சிருப்பாரு!" என்றார் சோமசுந்தரம், சிரித்தபடி.
"சரியாச் சொன்னீங்க!" என்றார் முகுந்தன்.
பள்ளிக்குத் திரும்பும் வழியில், ஒரு பெரிய மரம் இருந்தது.
"இது என்ன மரம்? பெரிசா இருக்கே! காய்ச்சிருக்கே! என்ன காய் இது?" என்றார் சோமசுந்தரம்.
"இது ஒரு நச்சு மரம் சார்! இது காய்ச்சு என்ன பயன்? இதால, ஊர்ல யாருக்கும் எந்தப் பயனும் இல்லை!" என்றார் முகுந்தன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)
குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
No comments:
Post a Comment