Saturday, October 21, 2023

1006. சிரித்தது ஏன்?

அருள்நிதிக்குத் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், அவர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

பல மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பின், அவருக்கு வைரல் காய்ச்சல் என்று கண்டறிந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

அருள்நிதியின் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்த சில ஊழியர்கள் அவரை வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில், ஊழியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர்.

"சாரைப் பார்க்க மருத்துவமனைக்கு நிறைய பேர் வந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா, நம்மைத் தவிர வேறு யாருமே வரலியே!" என்றான் பார்த்திபன்.

"வேற நேரத்தில வந்துட்டுப் போயிருப்பாங்க" என்றான் கணேசன்.

"நேத்து நான் வந்திருந்தேனே! நேத்து கூட யாரையும் காணோம். மேடம் மட்டும்தான் இருந்தாங்க" என்றான் செல்வம்.

"ஒருவேளை, வைரல் ஃபீவர்ங்கறதால யாரும் வரலியோ என்னவோ?"

"வைரல் ஃபீவர்னா கொரோனா மாதிரி இல்லை. அதனால, வைரல் ஃபீவரால பாதிக்கப்பட்டவங்களை யாரும் வந்து பார்க்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தா, நம்மையே அனுமதிச்சிருக்க மாட்டாங்களே!"

"உண்மையைச் சொன்னா, சாருக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது."

"ஏன் அப்படி?"

"சாரைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. 'நன்கொடைன்னு கேட்டு யாராவது வந்தா உள்ளேயே விடாதே!'ன்னு வாட்ச்மேன்கிட்டயே சொல்லி இருக்காரே! வீட்டிலேயும் அப்படித்தான். நண்பர்கள், உறவினர்கள் யாருக்குமே எந்த உதவியும் செய்ய மாட்டாரு. அதோட இல்ல. பணத்தைத் தானும் அனுபவிக்க மாட்டாரு. மேடம் ஏதாவது வாங்கணும்னு ஆசைப்பட்டா, அதுக்கு சார்கிட்டப் பணம் கேட்டு வாங்கறது ரொம்ப கஷ்டமாம்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"நான்தான் சார் வீட்டுக்கு அடிக்கடி போவேனே. அங்கே பார்த்தது, கேட்டது இதையெல்லாம் வச்சுத்தான் சொல்றேன்.

"சாருக்கு பிசினஸ்ல நிறையப் பணம் வருதுல்ல?"

"வருதே! நாமதான் பாக்கறமே!"

"தானும் அனுபவிக்காம, மத்தவங்களுக்கும் உதவி செய்யாம, அத்தனை பணத்தையும் வச்சுக்கிட்டு என்ன செய்யறாரு?"

பார்த்திபன் திடீரென்று சிரித்தான்.

"ஏண்டா சிரிக்கற?" என்றான் கணேசன்.

"ஒண்ணுமில்லை. வைரல் ஃபீவர்னா கொரோனா மாதிரி இல்லைன்னு சொன்னே இல்ல? கொரோனா சமயத்தில இருந்த கெடுபிடிகளை நினைச்சேன். சிரிப்பு வந்தது" என்றான் பார்த்திபன்.

'பின்னே, தான் சேர்த்து வைத்த பணத்துக்கே ஒரு வைரஸ் மாதிரி இருந்து கொண்டு, பணத்துக்கு அருகில் யாரையும் வர விடாமல் செய்து வைத்திருக்கிறாரே அருள்நிதி என்று நினைத்துப் பார்த்துச் சிரித்ததை, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன?'

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

பொருள்: 
தானும் நுகராமல், தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...