"யார் சொன்னாங்க?" என்றான் சுந்தரேசன்.
"நேத்து உங்க தங்கச்சிகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அவதான் சொன்னா."
"பரவாயில்லை. என் தங்கச்சி எங்கிட்ட பேசாட்டாலும், உங்கிட்டயாவது பேசறாளே!"
"அவ எனக்கு ஃபோன் பண்ணல, நான்தான் பண்ணினேன். உங்க தங்கச்சின்னு இல்ல, உங்களோட எந்த உறவுக்காரங்களுமே உங்ககிட்ட பேசறதில்லயே! நான்தான் உறவு விட்டுடக் கூடாதேங்கறதுக்காக, அப்பப்ப எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டிருக்கேன்."
"அது சரி. மாதவனோட பொண்ணுக்குக் கல்யாணம்னு அவளுக்கு எப்படித் தெரியும்?"
"மாதவன்தான் அவளுக்கு ஃபோன்பண்ணிச் சொன்னாராம். 'பத்திரிகை அனுப்பறேன், வந்துடு'ன்னு சொன்னாராம்!"
"மரியாதை தெரியாத பய. எனக்கு இல்ல முதல்ல சொல்லணும்? என் தங்கைக்கு முதல்ல சொல்லிட்டு, அப்புறம் எனக்குச் சொல்றது என்ன மரியாதை?" என்றான், சுந்தரேசன், கோபத்துடன்.
"அவர் இன்னும் உங்ககிட்ட சொல்லவே இல்லையே!"
"அதைத்தானே நானும் சொல்றேன்?"
"உங்ககிட்ட முதல்ல சொல்லி இருக்கணும்னு நீங்க சொல்றீங்க. அவர் உங்ககிட்ட சொல்றதாவே இல்லையோ என்னவோ!"
"நீ என்ன சொல்ற?"
"உங்ககிட்ட ஃபோன்ல சொல்லாம, பத்திரிகை மட்டும் அனுப்பலாம். அல்லது, பத்திரிகை கூட அனுப்பாம இருக்கலாம்!"
"அது எப்படி? அவன் பையன் கல்யாணத்துக்கு என் தங்கையைக் கூப்பிட்டுட்டு, என்னைக் கூப்பிடாம இருப்பானா?"
"இதுக்கு முன்னால இது மாதிரி நடந்திருக்கே! உங்க தங்கை, தான் வீடு கட்டறதைப் பத்தி, உங்க தம்பி, தூரத்து சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் சொல்லி இருக்கா. உங்ககிட்ட கிரகப்பிரவேசத்துக்கு ஒரு வாரம் முன்னாலதானே சொன்னா! நீங்க கூட அதுக்காக அவளோட சண்டை போட்டீங்களே!"
"ஆமாம்!" என்றார் சுந்தரேசன், சற்றுச் சோர்வுடன்.
"உங்க ஆஃபீஸ் நண்பர்கள் அடிக்கடி சந்திச்சுப் பேசிக்கறாங்க, சேர்ந்து டூர் போறாங்க. ஆனா, உங்களை யாரும் கூப்பிடறதில்ல, உங்களுக்குத் தகவல் கூடச் சொல்றதில்லைன்னு நீங்கதானே எங்கிட்ட சொல்லிக் குறைப்பட்டுக்கிட்டீங்க?"
சுந்தரேசன் பதில் சொல்லவில்லை.
தனக்கு வசதி இருந்தும், நண்பர்களோ, உறவினர்களோ உதவி கேட்டபோது, தான் நிர்த்தாட்சண்யமாக அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டதால், தன் நண்பர்களும், உறவினர்களும், தன்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதையும், தன்னை விலக்கி வைப்பதையும் அவர் உணர்ந்து கொண்டுதான் இருந்தார்.
நெருங்கிய உறவினர்கள் கூடத் தன்னைப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தி வந்தது அவருக்கு வேதனையை அளித்தது.
'நான் உயிருடன் இருக்கும்போதே, எனக்கு நெருக்கமானவர்கள் கூட என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், என்னிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் இறந்த பிறகு, என்னைப் பற்றிய நினைவு கூட யாரிடமும் இருக்காது போலிருக்கிறதே!' என்ற எண்ணம் தோன்றியபோது, எதையோ இழந்து விட்ட உணர்வு அவருக்கு ஏற்பட்டது.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)
குறள் 1004:
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
No comments:
Post a Comment