Thursday, October 19, 2023

1003. நின்று போன ஸ்காலர்ஷிப்

நீண்ட நேரம் காத்திருந்த பின், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொழிலதிபர் குமணனின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

"எங்க பள்ளிக்கூடத்தில படிக்கிற மாணவர்கள்ள அதிக மார்க் வாங்கற அஞ்சு பேருக்கு, அவங்க மேற்படிப்புக்காக, சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தீங்க" என்றார் நிர்வாகக் குழுவின் தலைவர் சபேசன்.

"கொடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொல்லுங்க. நான் கொடுக்கலையே!" என்றான் குமணன், சிரித்தபடி.

"உங்கப்பாதான் அவரோட அப்பா பேர்ல இந்த ஸ்காலர்ஷிப் கொடுத்துக்கிட்டு வந்தாரு."

"அவர் போன வருஷம் இறந்துட்டாரு. அதுக்கப்புறம், ஸ்காலர்ஷிப்பும் நின்னு போச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் குமணன்.

"அதை நீங்க தொடரணும்னு கேட்டுக்கத்தான் நாங்க வந்திருக்கோம்."

"என்னோட அப்பாவுக்கு, அவரோட அப்பா நினைவா இப்படி ஏதாவது செய்யணும்னு தோணி இருக்கு. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லையே!" என்றான் குமணன்.

"இருபது வருஷமா இந்த ஸ்காலர்ஷிப்பை உங்க அப்பா கொடுத்துட்டு வந்திருக்காரு. நூறு ஏழை மாணவர்கள் இதனல பயன் அடைஞ்சிருக்காங்க. அவங்கள்ள பல பேர் உயர்ந்த பதவிகள்ள இருக்காங்க. அவங்க இப்பவும் தாங்க சதாசிவம் நினைவு ஸ்காலர்ஷிப்ல படிச்சதைப் பத்திரிகை பேட்டிகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் பெருமையாச் சொல்றாங்க. இதனால, உங்க குடும்பத்துக்கு எப்படிப்பட்ட புகழ் கிடைச்சிருக்குன்னு பாருங்க."

"எனக்குப் புகழ் எல்லாம் வேண்டாம். உங்களால முடிஞ்சா, என் பிசினஸ்ல,  எனக்குப் புதுசா சில வாடிக்கையாளர்கள் புடிச்சுக் கொடுங்க. அதுக்கு நான் உங்களுக்கு கமிஷன் கொடுத்துடறேன். ஸ்காலர்ஷிப் மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நான் பணத்தை வீண்டிக்க விரும்பல!" என்றான் குமணன்.

"சரி சார். நாங்க வரோம்!" என்று எழுந்தார் நிர்வாகக் குழுத் தலைவர்.

அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், "இவரோட அப்பா எப்படிப்பட்ட மனுஷர்! இவர் இப்படிப் பேசறாரு. இவரைப் பார்க்க வந்தது நமக்கு டைம் வேஸ்ட்" என்றார் ஒரு உறுப்பினர்.

"இவரே இந்த உலகத்துக்கு ஒரு வேஸ்ட்தான்!" என்றார் நிர்வாகக் குழுத் தலைவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் 
(நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)

குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

பொருள்: 
புகழை விரும்பாமல், பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...