"ஆமாம், சொன்னாங்க. நம்ம ஊரிலேயே பெரிய பணக்காரராச்சே!"
"ஆமாம். விவசாயம், வியாபாரம், வட்டித் தொழில்னு பல வகையிலும் பணம் சம்பாதிச்சாரு."
"அவருக்கு யார் கொள்ளி போடப் போறாங்க?"
"அவர் பையன் அமெரிக்காவில இருக்கான். அவனால உடனே வர முடியாது. அவரோட அண்ணன் பையனுக்குத் தகவல் சொல்லி இருக்காங்களாம். அவன் வந்துதான் கொள்ளி போடுவான்."
"அவர் பையன் அமெரிக்காவில படிச்சு, அங்கேயே வேலை தேடிக்கிட்டு, அங்கேயே கல்யாணமும் செஞ்சுக்கிட்டானாமே! அவன் ஏன் அப்பாவைப் பார்க்க இங்கே வரதே இல்லை?"
"எப்படி வருவான்? அவன் அமெரிக்கா போய்ப் படிக்கப் பணம் கேட்டப்ப, இவர் கொடுக்க மாட்டேன்னுட்டாரு இல்ல?"
"ஏன் கொடுக்க மாட்டேன்னுட்டாரு?"
"பணம் செலவழிஞ்சுடுமேன்னுட்டுதான்! அவன் அப்புறம் பாங்க்ல, தெரிஞ்சவங்ககிட்டல்லாம் கடன் வாங்கிட்டுப் போய்ப் படிச்சான். அதுதான் அப்பாவைப் பாக்க இங்க வரதே இல்லை. அம்மாகிட்ட மட்டும் ஃபோன்ல பேசுவான். அவங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க."
"அடப் பாவமே! இவ்வளவு பணம் இருந்தும், பையன் படிப்புக்கே கொடுக்க மாட்டேன்னா, எப்படி?"
"அவர் அப்படித்தான். மனுஷனுக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கணும், ஆனா, வெளியில போகக் கூடாது! அதனலதான் ஒரு வசதியும் செஞ்சுக்காம, சாப்பாட்டுக்குக் கூட அதிகம் செலவழிக்கக் கூடாதுன்னு அவரோட சம்சாரத்தை கெடுபிடி பண்ணிக்கிட்டு வாழ்ந்தாரு. சொந்தக்காரங்களை அண்ட விட மாட்டாரு. ஆனா, இன்னிக்குக் கொள்ளி போட அண்ணன் மகன்தான் வர வேண்டி இருக்கு. அவன் கடனுக்குக் கொள்ளி போட்டுட்டுப் போவான்!"
"அது சரி. அவருக்கு ஈமச் சடங்கெல்லாம் செய்யப் பணம் வேணுமே!"
"அவர் வீட்டிலேயே ஏகப்பட்ட பணம் பெட்டியில இருக்கும். அதையெல்லாம் அவர் பையன் வந்துதானே திறந்து பார்க்க முடியும்? பையனை ஃபோன் பண்ணிக் கேட்டதுக்கு, 'என் பெரியப்பா பையனைக் கொள்ளி போட வரச் சொல்றேன். ஆனா, அவன்கிட்டப் பணம் கிடையாது. ஊர்ல யாராவது பணம் போட்டுக் காரியங்களைச் செய்யுங்க. நான் வந்ததும் கொடுத்துடறேன்'னு சொன்னானாம்!"
"அடப் பாவி! இவ்வளவு பணத்தைச் சேர்த்து வச்சாரு. தானும் அனுபவிக்கல. மத்தவங்களுக்கும் கொடுக்கல. அவருக்குக் கொள்ளி போடக் கூட வேற யாராவதுதான் பணம் போட வேண்டி இருக்கு. இவ்வளவு காலமா அவரு இவ்வளவு பணம் சம்பாதிச்சு என்ன பயன்?"
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 101
நன்றியில் செல்வம் (நன்மை இல்லாத/ பயன்படாத செல்வம்)
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
No comments:
Post a Comment