Thursday, September 28, 2023

978. தொலைபேசியில் வந்த பாராட்டு

"வணக்கம். நான் ராமகிருஷ்ணன் பேசறேன்" என்றார் தொலைபேசியில் பேசியவர்.

"எந்த ராமகிருஷ்ணன்?" என்றார் இசை அமைப்பாளர் வினீத்.

"நானும் இசை அமைப்பாளரா இருந்திருக்கேன், அஞ்சு வருஷம் முன்னால வரைக்கும்!"

"ஓ, நீங்களா? எப்படி இருக்கீங்க? இப்ப, உங்களுக்குப் படம் எதுவும் இல்லை போலருக்கே!"

"இல்லை. அதனாலதான், அஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் இசை அமைப்பாளரா இருந்தேன்னு சொன்னேன்!"

"ஓ, சரி. சொல்லுங்க. என்ன விஷயம்?"

"சமீபத்தில வந்த ஒரு படத்தில நீங்க இசை அமைச்ச ஒரு பாட்டைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்னோட பாட்டு எல்லாமே ஹிட்தான். நீங்க எந்தப் பாட்டைச் சொல்றீங்க?"

"'மல்லிகை மணம் வீசும்'ங்கற பாட்டு."

"ஓ, அதுவா? அது ஒரு சூப்பர்ஹிட் பாட்டு. இளைஞர்கள் மத்தியில அது ஒரு கிரேஸாகவே இருந்துக்கிட்டிருக்கு!"

"புதுப் பாடல்கள் எல்லாம் நான் அதிகம் கேட்கறதில்ல. ஆனா, தற்செயலா இந்தப் பாட்டைக் கேட்டேன். நல்லாப் போட்டிருக்கீங்க. அதுக்குப் பாராட்டுத் தெரிவிக்கத்தான் கூப்பிட்டேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாழ்த்துக்கள்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"நிகழ்காலமே சூப்பராத்தான் இருக்கு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரொம்ப பிஸின்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே! ஃபோனை வச்சுடட்டுமா?" என்று கூறி ஃபோனை வைத்தார் வினீத்.

வினீத் அங்கிருந்து அகன்றதும், வினீத்தின் தொலைபேசி உரையாடலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அவருடைய உதவியாளன் சந்திரன், அங்கே இருந்த டெக்னீஷியன் குணாவிடம், "யார் ஃபோன் பண்ணினாங்க தெரியுமா?" என்றான்.

"யாரு?"

"ராமகிருஷ்ணன் சார்!"

"எந்த ராமகிருஷ்.. அவரா?" என்றான் குணா, வியப்புடன்.

"அவரேதான். திரை இசை வேந்தர் ராமகிருஷ்ணனேதான்!" 

"உனக்கு எப்படித் தெரியும்?"

"அவர் தன் பெயரைச் சொன்னதும், நம்ம ஆளு 'எந்த ராமகிருஷ்ணன்?'னு கேட்டாரே! அப்பவே அவராதான் இருக்கும்னு நினைச்சேன். அதோட, அவர் இவரைப் புகழ்ந்து பேச ஆரம்பிச்சதும், நான் அதைக் கேக்கணுங்கறதுக்காக, இவர் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டுட்டாரு. என்ன ஒரு அல்ப புத்தி பாரேன்!"

"ராமகிருஷ்ணன் சார் அவர் காலத்தில கொடி கட்டிப் பறந்தவராச்சே!அவரை மாதிரி எல்லாம் மியூசிக் போட இனிமே யாராவது பொறந்துதான் வரணும்" என்றான் குணா.

"அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆளு இவரோட 'மல்லிகை மணம் வீசும்' பாட்டைக் கேட்டுட்டு, அது நல்லா இருக்குன்னு ஃபோன் பண்ணிப் பாராட்டறாரு. எவ்வளவு பெருந்தன்மை பாரு!"

"அவர் எப்பவுமே அப்படித்தான். அவர் டாப்ல இருந்த காலத்திலேயும், அடக்கமாத்தான் இருப்பாரு. தன்னைப் பற்றி உயர்வாப் பேசிக்க மாட்டாரு!"

"ஆனா, நம்ம ஆள் அதுக்கு நேர்மாறானவரு. 'என்னைப் போல உண்டா?'ன்னு பேசிக்கிட்டுத் திரியவரு. அவ்வளவு பெரிய மியூசிக் டைரக்டர் இவரோட பாட்டைப் புகழ்ந்து பேசறாரு. இவர் அதுக்கு நன்றி கூடச் சொல்லல. 'உங்களுக்கு இப்ப படம் எதுவும் இல்லை போலருக்கே!'ன்னு அவரைக் குத்திக் காட்டிப் பேசறாரு. 'என் பாட்டு எல்லாமே ஹிட்டுதான்'னு அவர்கிட்டப் பெருமை அடிச்சுக்கறாரு. கடைசியில, நான் ரொம்ப பிசின்னு சொல்லி, ஃபோனை கட் பண்ணிட்டாரு!"

"ஒண்ணு தெரியுமா உனக்கு? இவர் போட்ட அந்த 'மல்லிகை மணம் வீசும்' பாட்டே ராமகிருஷ்ணன் சார் போட்ட 'கனவில் வந்த கன்னியே'ங்ற பாட்டிலேந்து சுட்டதுதான். ஆனா, அவர் பெருந்தன்மையா, அதைக் கூடப் பொருட்படுத்தாம இவரைப் பாராட்டி இருக்காரு. இவர் வழக்கம் போல சுய தம்பட்டம் அடிச்சுக்கிட்டாரு போல இருக்கு!" என்றான் குணா.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பொருள்: 
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ, தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...