Wednesday, September 27, 2023

977. புதிய பொது மேலாளர்

அந்த நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த தீனதயாளன் ஓய்வு பெற்றதும், அந்தப் பதவி தங்களில் யாருக்குக் கிடைக்கும் என்று அவருக்கு அடுத்த நிலையிலிருந்த ஆறு மூத்த நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராமல், வெளியிலிருந்து திவாகர் என்ற ஒருவர் பொது மேலாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

"யார் இந்த திவாகர்?"

"நான் விசாரிச்சதில, அவர் நம்ம கம்பெனி டைரக்டர் ஒத்தரோட அண்ணன் மகன்னு தெரியுது."

"இதுக்கு முன்னால அவர் எங்கே வேலை செஞ்சாரு? அனுபவம் உள்ளவரா?"

"சொன்னா வெட்கக் கேடு. அவருக்கு 30 வயசுதான் ஆகுது. ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடிச்சுட்டு, ஒரு கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டே ஏதோ ஒரு யூனிவர்சிடியில கரெஸ்பாண்டன்ஸ்ல எம்.பி.ஏ படிச்சிருக்காரு. அந்த எம்.பி. ஏ பட்டம், நாலைஞ்சு வருஷ அனுபவம் இதையெல்லாம் வச்சு, அவரை ஜெனரல் மானேஜரா நியமிச்சிருக்காங்க!"

"நாமெல்லாம் நிறையப் படிச்சிருக்கோம். நமக்கு நிறைய அனுபவம் இருக்கு. இந்த கம்பெனிக்காக இவ்வளவு வருஷம் உழைச்சிருக்கோம். அதுக்கெல்லாம் மதிப்பு இல்லையா?"

"நாம யாரும் எந்த டைரக்டருக்கும் உறவு இல்லையே!"

மூத்த நிர்வாகிகள் ஆறு பேரும் தங்களுக்குள் பேசிக் கொண்டது இது.

புதிய பொது மேலாளர் திவாகரை ஆறு மூத்த நிர்வாகிகளும் சந்தித்தனர்.

தன் அறைக்கு வந்தவர்களை உட்காரக் கூடச் சொல்லாமல், நிற்க வைத்தே பேசினான் திவாகர்.

"உங்க ஒவ்வொத்தரோட டிபார்ட்மென்ட்டைப் பத்தி ஒரு நோட் போட்டு எனக்கு அனுப்புங்க" என்றான் திவாகர்.

"சார்! இப்ப நம்ம நிதி நிலைமை கொஞ்சம் டைட்டா இருக்கு. அதனால, நாம சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கு. பழைய ஜி.எம் இருந்தப்பவே, இதைப் பத்தி ஒரு புரொபோசல் அனுப்பி இருக்கேன். ரிடயர் ஆகிற சமயத்தில, அவர் முடிவு எடுக்க விரும்பல. அந்த ஃபைலை நீங்க சீக்கிரம் கிளியர் பண்ணணும்" என்றார் நிதி மேலாளர் சிவப்பிரசாத்.

"அதை அப்புறம் பாக்கலாம். முதல்ல, எனக்கு இந்த ரூம்ல உள்ள ஃபர்னிச்சர், இன்டீரியர் டெகொரேஷன் இதைல்லாம் மாத்தணும். அதுக்கு ஒரு ஆளை அனுப்புங்க!" என்றான் திவாகர்.

திவாகர் மூத்த நிர்வாகிகளை மதிக்காமலே நடந்து வந்ததால், ஆறு மூத்த நிர்வாகிகளில் மூன்று பேர் வேலையை விட்டு விலகி விட்டனர்.

நிதி மேலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பேச்சை மதிக்காமல் திவாகர் செயல்பட்டதால், நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் மோசமாயிற்று. ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து நடந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில், திவாகரைப் பதவி நீக்கம் செய்வதென்றும், நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ரவிகுமாரைப் பொது மேலாளாக நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

பொருள்: 
சிறப்பு நிலை அதற்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், அது வரம்பு மீறிய செயலை உடையதாக இருக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...