Wednesday, September 27, 2023

976. தந்தை விட்டுச் சென்ற 'சுமை'

தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவருடைய நிறுவனத்தை வினோத் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தபோது, அவன் பிரச்னையாகக் கருதியது, அவன் தந்தை அவனுக்கு விட்டுச் சென்ற சுமை என்று அவன் கருதிய சுப்பையாவை.

நோய்வாய்ப்பட்டிருந்த அவன் தந்தை, தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே, அவனிடம் கூறி வந்த ஒரு விஷயம்: "சுப்பையா நம்ம கம்பெனிக்கு இருக்கிற ஒரு மதிப்புள்ள சொத்து. எந்தக் காரணத்தைக் கொண்டும், அவரை வேலையை விட்டு அனுப்பிடாதே! அவரா விரும்பி ரிடயர் ஆகிற வரையில, அவரை வேலையில வச்சுக்க."

தந்தையின் விருப்பப்படி, வினோத் சுப்பையாவைத் தொடர்ந்து வேலையில் வைத்திருந்தான். 

ஆனால், அவரால் நிறுவனத்துக்கு எந்தப் பயனும் இருந்ததாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவர் தன் விருப்பப்படி ஏதோ செய்து கொண்டிருந்தார்.

ஒருமுறை, வினோத் தன் நிறுவன மனேஜரை அழைத்து, "சுப்பையா வேலை எதுவும் செய்யாம சுத்திக்கிட்டிருக்காரு. அவருக்குன்னு குறிப்பிட்ட வேலைகளை அலாட் பண்ணுங்க" என்றான்.

"கஷ்டம், சார்! அவர் என்ன வேலை செய்யறாருன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, ஒரு நிமிஷம் கூட சும்மா இல்லாம, ஏதாவது செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாரு. உங்கப்பா காலத்திலிருந்தே அப்படித்தான். உங்கப்பா அவர் மேல ரொம்ப மதிப்பு வச்சிருந்தாரு. அதனால, அவர்கிட்ட அவரோட வேலையைப் பத்தி நான் எதுவும் கேட்டதில்லை. அவருக்குக் குறிப்பா இந்த வேலைன்னு கொடுத்தா, சரியா வராது" என்றார் மானேஜர்.

"ஆகக் கூடி, அவர் தண்டச் சம்பளம் வாங்கிக்கிட்டுத்தான் இருப்பாரு, அவர்கிட்ட எந்த வேலையும் வாங்க முடியாதுன்னு சொல்றீங்க. எப்படியோ போங்க!" என்றான் வினோத், எரிச்சலுடன்.

சில மாதங்களில் சுப்பையா இறந்து விட்டார்.

வினோத் வெளிப்பார்வைக்கு அவர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தாலும், மனதுக்குள், 'நல்லவேளை! மனுஷன் போய்ச் சேர்ந்தாரு. இல்லைன்னா, தொடர்ந்து அவருக்கு தண்டச் சம்பளம் கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டி இருந்திருக்கும்!' என்று நினைத்துக் கொண்டான்.

"மானேஜர்! என்ன நடக்குது? திடீர்னு, ஏன் இவ்வளவு குழப்பம், தப்புக்கள் எல்லாம் நடக்குது?" என்றான் வினோத், கோபத்துடன்.

"செக் பண்ணிக்கிட்டிருக்கேன், சார்! கோ-ஆர்டினேஷன் சரியா இல்ல. பார்த்து சரி பண்ணிடறேன்" என்றார் மானேஜர்.

"இத்தனை வருஷமா நீங்கதானே மானேஜரா இருக்கீங்க? என்னவோ இப்பதான் வேலைக்கு சேர்ந்த மாதிரி. செக் பண்ணிக்கிட்டிருக்கேங்கறீங்க!"

"மன்னிச்சுக்கங்க, சார்! நம்ம கம்பெனியில அஞ்சாறு டிபார்ட்மென்ட் இருக்கு. அதையெல்லாம் கோ-ஆர்டினேட் பண்ண வேண்டியது முக்கியம். சுப்பையா சார்தான் இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்தார்னு இப்பதான் தெரியுது. உங்கப்பாவோட நண்பர்ங்கறதால, அவர் என்ன செய்யறார்ங்கறதை அவர்கிட்ட கேட்க எனக்குத் தயக்கமா இருந்தது. ஏதோ வேலை செய்யற மாதிரி, சும்மா இங்கேயும் இங்கேயும் போய்க்கிட்டிருந்தார்னுதான் நான் நினைச்சேன். அவர் எவ்வளவு முக்கியமான ரோல் ப்ளே பண்ணி இருக்கார்னு இப்பதான் தெரியுது. அவர் என்னென்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டிருந்தார்ங்கறதை முழுசாப் புரிஞ்சுக்கிட்டு, அந்த வேலையை முறையா மத்தவங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்க எனக்குக் கொஞ்சம் டயம் வேணும்."

சுப்பையாவை அழைத்துப் பேசி அவர் என்ன வேலை செய்து வந்தார் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால், அவர் செய்து வந்த வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து, அவருடைய மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கலாமே என்று நினைத்தான் வினோத்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

பொருள்: 
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...