"அப்படின்னா?" என்றான் நவனீத்.
"உனக்கு இங்கிலீஷ் தெரியாதா? பாஸ் ஏதாவது சொன்னா, அது தப்பா இருந்தாலும், மறுப்பு சொல்லாம ஏத்துக்கணும்."
"நான் அதைக் கேக்கல. சும்மா விடுவாங்களான்னு சொன்னியே, என்ன செய்வாங்கன்னு கேட்டேன்."
"என்ன செய்வாங்க? உன்னை எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிப்பாங்க. பரவாயில்லையா?" என்றான் சிவராமன், இகழ்ச்சியாக.
"ஜெனரல் மானேஜர் ஒரு டெவலப்மென்ட் பிளான் சொன்னாரு. அதைப் பத்திக் கருத்துக் கேட்டாரு. நான் என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதானே?"
"உனக்குப் புரியலைடா. தன்னோட திட்டத்தைப் பத்தி அவர் நம்ம கருத்தைக் கேட்டதே நாம எல்லாரும் அதை ரொம்பப் பிரமாதமான திட்டம்னு சொல்லணுங்கறதுக்காகத்தான். இங்கே, ஆமாம் சாமி போடறவங்கதான் பிழைக்க முடியும். நீ அவர் திட்டத்தில குறைகள் சொன்னதோட, அதில என்ன மாற்றங்கள் செய்யலாம்னு யோசனைகளும் சொன்ன. என்ன ஆகுதோ, பார்க்கலாம்."
சிவராமன் கணித்தபடியே, நவனீத் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கிளைக்கு மாற்றப்பட்டான்.
"நான் நினைச்சதை விட மோசமா நடந்திருக்கு. தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்தி இருந்தாக் கூடப் பரவாயில்லை. பிசினஸ் இல்லாத பிராஞ்ச்சுக்கு மாத்தி இருக்காங்க!" என்றான் சிவராமன்.
"என்னை அந்த பிராஞ்ச்சுக்கு மானேஜராதானே போட்டிருக்காங்க?" என்றான் நவனீத்.
"முட்டாள் மாதிரி பேசாதேடா! இப்ப, நீயும் நானும் ஹெட் ஆபீஸ்ல டிபார்ட்மென்ட் மானேஜரா இருக்கோம். பிராஞ்ச் மானேஜர் பதவியும் அதே ராங்க்தான். ஆனா, நமக்குத்தான் அதிகாரம் அதிகம். பிராஞ்ச் மானேஜரை நாம கேள்வி கேக்கலாம். கேள்வி கேக்கற இடத்திலேந்து, பதில் சொல்ற இடத்துக்குப் போகப் போற. இது முன்னேற்றமா?" என்றான் சிவராமன், சற்றே கோபத்துடன்.
"ஜி.எம் எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? 'நீங்க சில யோசனைகளை எல்லாம் சொன்னீங்களே, அதையெல்லாம் உங்க பிராஞ்ச்ல செயல்படுத்தி, பிராஞ்ச்சை முன்னுக்குக் கொண்டு வாங்க'ன்னாரு."
"அவர் உன்னைக் கிண்டல் பண்ணி இருக்காருடா. அவரை எதிர்த்துப் பேசினதுக்காக உன்னைப் பழி வாங்கினதோட இல்லாம, 'நீ பேசினதை எல்லாம் அங்கே செஞ்சு பாரு'ன்னு உன்னை நக்கல் அடிச்சிருக்காரு. இதைத்தான் குதிரை கீழே தள்ளி விட்டுக் குழியையும் பறிச்ச மாதிரின்னு சொல்லுவாங்க. இதுக்கு முன்னால அங்கே பிராஞ்ச் மானேஜராப் போனவங்க ஒத்தர் கூட வெற்றிகரமா செயல்பட்டதில்ல. கெஞ்சிக் கூத்தாடி, வேற எங்கேயாவது மாற்றல் வாங்கிட்டுப் போவாங்க, இல்ல, வெறுத்துப் போய் வேலையை விட்டுட்டுப் போயிடுவாங்க. "
"சரி, போய்த்தானே ஆகணும்? அங்கே போய் என்ன செய்ய முடியும்னு பாக்கறேன்."
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நவனீத் சீனியர் மானேஜராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டான்.
"சாதிச்சுட்டடா! சவாலைச் சாதனையா மாத்தறதுன்னு சொல்லுவாங்க. அதை செஞ்சு காட்டிட்ட. உனக்குக் கொடுத்த பனிஷ்மென்ட்டை, ரிவார்டா மாத்திக்கிட்டே. எப்படிடா?" என்றான் சிவராமன், நவனீத்தின் கைகளைக் குலுக்கியபடி.
"நம்ம ஜி.எம் சொன்ன மாதிரியே, நான் சொன்ன யோசனைகளைச் செயல்படுத்திப் பார்த்தா என்னன்னு நினைச்சு முயற்சி செஞ்சேன். பலன் கிடைச்சது. இதுவரை இல்லாத அளவுக்கு பிராஞ்ச் வளர்ந்தது. அதனால, அங்கே அசிஸ்டன்ட் மானேஜரா இருந்தவரை பிராஞ்ச் மானேஜரா புரொமோட் பண்ணிட்டு, எனக்கு புரொமோஷன் கொடுத்து இங்கே கொண்டு வந்துட்டாங்க!" என்றான் நவனீத், பெருமை ததும்பும் குலில்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை
குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
No comments:
Post a Comment