"இத்தனைக்கும், அவர் மூணு தடவை அமைச்சரா இருந்திருக்காரு. நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைன்னு லஞ்சம் அதிகம் நடமாடற துறைக்கு எல்லாம் அமைச்சரா இருந்திருக்காரு. அப்படி இருந்தும், அவர் மேல ஒரு புகார் கூட இல்ல."
"ஒரு அரசியல்வாதி தப்புப் பண்ணாம இருந்தா கூட, எதிர்க்கட்சிகள் அவர் மேல ஏதாவது குற்றம் சாட்டுவாங்க. ஆனா, இவர் விஷயத்தில, அவங்களால ஒண்ணும் சொல்ல முடியல!"
"ஒண்ணு ரெண்டு பேர் முயற்சி செஞ்சாங்க. ஆனா, துரைக்கண்ணு அவங்க சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யின்னு ஆதாரபூர்வமா நிரூபிச்சப்பறம், அவங்க மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்க."
அரசியல்வாதி துரைக்கண்ணுவைப் பற்றி இரண்டு பத்திரிகை நிருபர்கள் பேசிக் கொண்டது இது.
"ஏம்ப்பா, எல்லாரும் சொல்ற மாதிரி, நீ அத்தனை சுத்தமானவனா?" என்றார் துரைக்கண்ணுவின் நண்பர் குலசேகரன்.
"ஏன், அதில உனக்கென்ன சந்தேகம்?" என்றார் துரைக்கண்ணு.
"எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான்தான் உன்னை சின்ன வயசிலேந்து பார்த்துக்கிட்டிருக்கேனே! உன் அரசியல் எதிரிகள் கூட உன்னை சுத்தமானவன்னு ஏத்துக்கறாங்களே, அதுதான் எனக்கு ஆச்சரியம்!"
"நாம எப்படி இருக்கோங்கறதைப் பத்தி நமக்கு ஒரு தெளிவு இருந்தா, நாம தப்பு செய்யாம இருக்கலாம். மத்தவங்களுக்கும் நம்மைக் குற்றம் சொல்ல வாய்ப்பு இருக்காது."
"நீ சொல்றது எனக்குப் புரியலியே!"
"இந்த உதாரணம் பழசுன்னாலும், இதைச் சொல்லி விளக்கறதுதான் பொருத்தமா இருக்கும். ஒரு பொண்ணு கற்புள்ளவள்னா, அவளைப் பத்தி என்ன சொல்லுவாங்க?"
"அவ நெருப்பு மாதிரி. அவளை யாரும் நெருங்கக் கூட முடியாதுன்னு சொல்லுவாங்க" என்றார் குலசேகரன்.
"அதேதான். நானும் அப்படித்தான் நெருப்பா இருந்து, தவறான எண்ணங்கள், ஆசைகள் இதையெல்லாம் என் பக்கத்தில நெருங்க விடாம, கடுமையா நடந்துக்கறேன். அதனால, தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லாமல் போகுது" என்றார் துரைக்கண்ணு.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை
குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
No comments:
Post a Comment