Tuesday, September 26, 2023

973. சிறு விபத்து

சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கார், ஒரு அதிர்வுடன் நின்றது.

"டிரைவர்! என்ன ஆச்சு? ஏதோ இடிச்ச மாதிரி இருந்ததே!" என்றாள் காரில் அமர்ந்திருந்த அபிராமி.

"ஆமாம், மேடம். ஒரு சைக்கிள் வந்து மோதிடுச்சு. இருங்க, பாக்கறேன்" என்றபடியே காரிலிருந்து இறங்கினான் டிரைவர் சுதாகர்.

அந்தச் சாலையில் போக்குவரத்து எதுவும் இல்லை. சாலையில் அப்போது மனிதர்கள் யாரும் கூட இல்லை.

சுதாகர் காரிலிருந்து இறங்கி, சைக்கிளுடன் சேர்ந்து கீழே விழுந்திருந்த மனிதனைத் தூக்கி நிறுத்தினான்.

அந்த மனிதனின் எளிய உடையும், பயந்த முகமும் அவன் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒரு மனிதன் என்பதை உணர்த்தின.

"ஏம்ப்பா குறுக்கே வந்தே? பார்த்து வரக் கூடாது?" என்று சுதாகர் அவனைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே, காரிலிருந்து இறங்கி வந்த அபிராமி, பளாரென்று அந்த மனிதனின் கன்னத்தில் அறைந்தாள்.

"ஏண்டா, ரோடில எங்களையெல்லாம் நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டீங்களா? நீ பாட்டுக்குக் குறுக்கே வந்து மோதற! புது கார் டேமேஜ் ஆயிடுச்சு பார்!" என்றாள் அபிராமி.

காரில் ஒரு பெயின்ட் உதிரல் கூட ஏற்படவில்லை என்பதை கவனித்த சுதாகர், "அடிக்காதீங்க, மேடம்! பிரச்னை ஆயிடும். காருக்கு ஒண்ணும் ஆகல" என்றான்.

அதற்குள் எங்கிருந்தோ வந்த சிலர் அங்கே கூடி விட்டனர்.

"என்ன ஆச்சு?" என்றான், முரட்டுத் தோற்றத்துடன் இருந்த ஒரு ஆள்.

"இந்த ஆளு பாவம், ஓரமா சைக்கிள்ள வந்துக்கிட்டிருந்தாரு. இந்த அம்மா வந்து காரை அவன் மேல மோதிட்டு, அவனைக் கன்னத்தில வேற அறையறாங்க!" என்றான், சற்றுத் தொலைவிலிருந்து நடந்தவற்றைப் பார்த்த மற்றொருவன்.

"நான் காரை ஓட்டல!" என்றாள் அபிராமி, எச்சரிக்கை உணர்வுடன்.

"நான்தாங்க கார் ஓட்டினேன். இவர் திடீர்னு குறுக்க வந்ததால, கார் மோதிடுச்சு. ஆனா, அவருக்கு ஒண்ணும் ஆகல" என்றான் சுதாகர், சமாதானமாக.

சுதாகரின் பேச்சைப் பொருட்படுத்தாத அந்த முரட்டு ஆள், "ஏம்மா, எவ்வளவு தெனாவெட்டு இருந்தா, இவர் சைக்கிள் மேல காரை மோதிட்டு அவரைக் கன்னத்தில வேற அறைஞ்சிருப்பீங்க? சைக்கிள் ரிப்பேர் செலவு, அவரோட ஆஸ்பத்திரிச் செலவு, அவரை அறைஞ்சது எல்லாத்துக்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபா எடுத்து வையுங்க. இல்லேன்னா, காரைப் போக விட மாட்டோம்!" என்றான், அபிராமியைப் பார்த்து.

"இல்லை, நான் அவரை அடிக்கல" என்றாள் அபிராமி, பலவீனமான குரலில்.

"அடிச்சதைப் பார்த்ததுக்கு சாட்சி இருக்கு. கையில பணம் இருக்கா? இல்லேன்னா, ஜிபே கூடப் பண்ணலாம். நம்பர் சொல்லட்டுமா?"

அபிராமி பரிதாபமாக சுதாகரைப் பார்த்தாள்.

அதற்குள் கீழே விழுந்து கிடந்த சைக்கிளைத் தூக்கி நிறுத்திய அந்த மனிதன், "தப்பு என் மேலதான். நான்தான் குறுக்கே வந்துட்டேன். எனக்கு அடி எதுவும் படல. அவங்க என்னை அடிக்கவும் இல்ல. சைக்கிளுக்கும் ஒண்ணும் ஆகல. கொஞ்சம் பெண்ட் ஆகி இருக்கு. பக்கத்தில இருக்கற சைக்கிள் கடையில பெண்டை நிமித்திக்கறேன்" என்று கூறி விட்டுத் தன்னால் முடிந்த அளவுக்கு சைக்கிளை நேராக்கி விட்டு, அதைக் கஷ்டப்பட்டுத் தள்ளிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

முரட்டு ஆளும், மற்றவர்களும் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்ப, அபிராமி காரில் ஏறி அமர்ந்து கொள்ள, சுதாகர் காரைக் கிளப்பினான்.

கார் கிளம்பியதும், "லோ கிளாஸ் பீப்பிள்!" என்றாள் அபிராமி.

"யாரைச் சொல்றீங்க?" என்றான் சுதாகர், தனக்குள் சிரித்தபடியே.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 973:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

பொருள்: 
மேல்நிலையில் இருந்தாலும், மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர். கீழ்நிலையில் இருந்தாலும், இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...