Monday, September 25, 2023

972. புது மானேஜர்

புதிய மானேஜர் சங்கரராமனின் அறைக்குள் தயங்கிக் கொண்டே நுழைந்தான் சூபர்வைசர் கணபதி.

"வாங்க, கணபதி! உக்காருங்க!" என்றார் சங்கரராமன்.

கணபதி சற்றே தயக்கத்துடன் அமர்ந்தான். 

பழைய மானேஜராக இருந்தால், அவர் அறைக்குள் அவன் நுழைந்ததுமே, அவனைப் பார்த்துப் புருவத்தை உயர்த்துவார். சொல்ல வேண்டியதைக் கதவுக்கருகில் நின்றபடியே சொல்லி விட்டுப் போக வேண்டியதுதான். அவர் முன் உட்காருவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

மானேஜருடன் பேசி விட்டுத் திரும்பியபோது, 'இவர் சற்று வித்தியாசமானவர்' என்ற எண்ணம் கணபதியின் மனதில் ஏற்பட்டது.

அடுத்த சில மாதங்களில், கணபதிக்கு சங்கரராமனுடன் ஒருவித நெருக்கமே ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம். இருவரும் தொழிற்சாலை விஷயங்களைப் பற்றித்தான் பேசினார்கள் என்றாலும், அவருடன் பேசி விட்டு வந்தபோது, ஒரு நெருங்கிய நண்பனிடம் பேசியது போன்ற ஒரு உணர்வு கணபதிக்கு ஏற்பட்டது.

ருநாள், தொழிற்சாலை நிர்வாகம் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த சங்கரரராமன், "எனக்கு டயாபடீஸ் இருக்கு. அதனால நான் நேரத்துக்கு சாப்பிடணும். உங்க லஞ்ச் பாக்சை இங்கே எடுத்துக்கிட்டு வந்துடுங்களேன். ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றார்.

கணபதி சற்று அதிர்ச்சியுடன், "நீங்க சாப்பிடுங்க, சார். நான் அப்புறம் வரேன்" என்று எழுந்தான்.

"உக்காருங்க. ஏன், லஞ்ச் கொண்டு வரிலியா? அப்படின்னா, என்னோட லஞ்சசைக் கொஞ்சம் ஷேர் பண்ணிக்கங்க. வேணும்னா, அப்புறம் நீங்க வெளியில போய் சாப்பிட்டுக்கலாம்! ஏன்னா, என் லஞ்ச் பாக்ஸ்ல என் மனைவி ரொம்பக் கொஞ்சமாதான் சாப்பாடு வச்சிருப்பாங்க!" என்றார் சங்கரராமன் .

"அதுக்கில்லை, சார்! நீங்க உயர்ந்த ஜாதின்னு நினைக்கறேன். நான் தாழ்ந்த ஜாதி! உங்களோட சேர்ந்து சாப்பிடறது சரியா இருக்காது!" என்றான் கணபதி, தயக்கத்துடன்.

"கடவுளே!" என்ற சங்கரராமன், ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார்.

பிறகு, "அப்படியெல்லாம் எதுவும் இல்லை, கணபதி. கடவுள் எல்லாரையும் சமமாத்தான் படைச்சிருக்காரு!" என்றார்.

"ஜாதிகளை நான்தான் படைச்சேன்னு கடவுளே சொல்லி இருக்கறதா சொல்றாங்களே, சார்!"

"கடவுளே! உனக்கு இப்படி ஒரு கெட்ட பேரா?" என்று சொல்லிச் சிரித்தார் சங்கரராமன். 

"நீங்க தொழிலாளர்களுக்கு ஒரு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க. நீங்க சொன்னா அவங்க கேப்பாங்களோ, மாட்டாங்களோன்னு நினைச்சுக்கிட்டு, மானேஜர்தான் இப்படிச் சொன்னார்னு சொல்றீங்க. தொழிலாளர்கள் எங்கிட்ட வந்து, 'நீங்க இப்படிச் சொன்னீங்களா?'ன்னு கேக்கவா போறாங்க? அது மாதிரிதான், யாரோ செஞ்சு வச்ச விஷயத்துக்குக் கடவுள் மேல பழியைப் போட்டுட்டாங்க!" என்றார், தொடர்ந்து.

"பிறப்பால எல்லாரும் சமம்னு சொல்றீங்க. அப்படின்னா, மனுஷங்களுக்குள்ள உயர்வு தாழ்வு இருக்கே, அது எப்படி சார்?"

"ரெண்டு காரணங்கள் இருக்குன்னு நினைக்கிறேன். ஒவ்வொத்தருக்கும் சூழ்நிலை வேறுபடலாம். வசதியான குடும்பத்தில பொறந்த ஒத்தருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். ரெண்டாவது, உயர்வு தாழ்வுங்கறது நாம செயல்படற விதத்தால வருது. ரெண்டாவதுதான் ரொம்ப முக்கியம்னு நினைக்கறேன். ஏன்னா, ஒரே சூழ்நிலையில பொறந்து வளர்ந்த ரெண்டு பேர் வாழ்க்கையில ஒரே மாதிரி முன்னேறுவது இல்லையே!"

"நான் ஏழைக் குடும்பத்தில பொறந்தேன். அதனால, அதிகமாப் படிக்க முடியல. வசதியான குடும்பத்தில பொறந்திருந்தா, அதிகம் படிக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதனால, சூழ்நிலை கூட நாம எங்கே பொறக்கறோங்கறதை ஒட்டித்தானே சார் அமையுது?" என்றான் கணபதி

"சூழ்நிலை நிச்சயம் ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனா, சூழ்நிலை சரியாக இல்லாட்டாலும், அதையும் மீறி வெற்றி அடைஞ்சவங்க உண்டு. சூழ்நிலை நல்லா இருந்தும், அதைப் பயன்படுத்திக்காம போனவங்களும் உண்டு. அதனால, செயல்கள்தான் நம்மை வேறுபடுத்துதுன்னு சொல்லுவேன்."

கணபதி அவர் சொன்னதை முழுவதும் ஏற்றுக் கொள்ளாதது போல், மௌனமாக இருந்தான்.

"என்னைப் பார்க்க ஒத்தர் இங்கே அப்பப்ப வருவாரே, கவனிச்சிருக்கீங்களா?" என்றார் சங்கரராமன்.

"ஆமாம், பாத்திருக்கேன், எப்பவும் ஏதோ பிரச்னையில இருக்கற மாதிரி சோகமா இருப்பாரு" என்ற கணபதி, தான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று நினைத்து, உடனே "சாரி!" என்றான்.

"பரவாயில்ல. நீங்க அப்படி நினைச்சது சரிதான். அவன் என் தம்பிதான். எனக்கு இருந்த எல்லா வாய்ப்புகளும் அவனுக்கும் இருந்தது. ஆனா, அவன் அவற்றைப் பயன்படுத்திக்கல. சரியாப் படிக்காம, அலட்சியமா விளையாட்டுத்தனமா இருந்தான். இப்ப அவனுக்குச் சரியான வேலை இல்லை. ரொம்ப கஷ்டப்படறான். எங்கிட்ட உதவி கேட்டு வருவான். நானும் என்னால முடிஞ்ச உதவியைச் செய்வேன்... என்ன எழுந்துட்டீங்க? போரடிக்கிறேனா?"

"இல்லை சார். நீங்க டயத்துக்கு சாப்பிடணும் இல்ல? நான் போய் என் லஞ்ச் பாக்சை எடுத்துக்கிட்டு வரேன்" என்றான் கணபதி, சிரித்துக் கொண்டே. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்: 
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரே தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால், சிறப்புத்தன்மை ஒத்திருப்பதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...