Monday, September 25, 2023

971. தந்தையும் மகனும்

"அரசு நிறுவனத்தில நல்ல வேலை. சம்பளம், இன்க்ரிமென்ட், விலைவாசிப்படி உயர்வுன்னு எல்லா வசதியும் இருக்கு. நீ வேலையே செய்யாட்டாலும், புரொமோஷன் எல்லாம் ஆடோமாடிக்கா வந்துடும். அப்படி இருக்கறப்ப, எதுக்குப் புதுசா ஒரு கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கே!" என்றார் சம்பந்தம், தன் மகன் மகேஷிடம்.

"இல்லப்பா! டேட்டா அனாலிசிஸ்னு ஒரு சப்ஜெக்ட். அதில நிறைய வாய்ப்புகள் இருக்கறதா சொல்றாங்க. சாயந்திரம் ஆஃபீஸ்லேந்து வந்ததும் சும்மாதானே இருக்கேன். அதுதான் ரெண்டு மணி நேரம் கிளாஸ் போயிட்டு வரேன்" என்றான் மகேஷ்.

"அதுதான் எதுக்குங்கறேன்? இந்தப் படிப்பு உன் வேலையில முன்னேற உதவுமா?"

"நான் பாக்கற வேலைக்கும் இதுக்கும் தொடர்பு இல்லைப்பா. ஒரு ஆர்வத்திலதான் படிக்கறேன். இப்போதைக்குப் புதுசா ஒரு விஷயத்தைக் கத்துக்கறது உற்சாகமா இருக்கு. எதிர்காலத்தில ஏதாவது பயன் இருக்கலாம். இல்லாட்டாலும் பரவாயில்ல. ஆர்வத்தோட ஏதாவது ஒரு செயல்ல ஈடுபட்டுக்கிட்டிருக்கறது மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது."

சில மாதங்கள் கழித்து, மகேஷ், சம்பந்தத்திடம், "என்னப்பா, இப்பல்லாம் நீங்க சாயந்திரம் எங்கேயோ போயிட்டு வரீங்க போல இருக்கே!" என்றான்.

"ஆமாம். அன்னிக்கு நீ டேட்டா அனாலிசிஸ் படிக்கறது உனக்கு உற்சாகமா இருக்குன்னு சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். பென்ஷன் வாங்கிக்கிட்டு வீட்டில சும்மா உக்காந்திருக்கறது எனக்கு போரடிக்குது. சில சமயம் விரக்தி கூட வர மாதிரி இருக்கு. அதனாலதான், நானும் ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு, பக்கத்தில இருக்கற ஒரு சேவை நிறுவனத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம் வேலை செஞ்சுட்டு வரேன். இப்ப எனக்கு அது நிறைய உற்சாகத்தைக் கொடுக்குது!" என்றார் சம்பந்தம்.

"கிரேட் அப்பா!" என்றான் மகேஷ்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 98
பெருமை

குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

பொருள்: 
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளி தருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர் வாழ்வது இழிவு தருவதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...