Monday, September 25, 2023

970. விவசாயிக்குச் சிலை

அந்தச் சிறிய ஊரில் பஸ் நின்றதும் இறங்கினேன்.

அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தை இன்ஸ்பெக்ட் செய்ய வேண்டிய அதிகாரி நான்.

பள்ளி எங்கே இருக்கிறது என்று விசாரித்தபோது, "நேரா போனீங்கன்னா, பராங்குசம் சிலை வரும். அங்கே இடது பக்கம் திரும்பணும்" என்றார் எனக்கு வழி சொன்னவர்.

'பராங்குசம் என்று ஒரு அரசியல் தலைவர் இருக்கிறாரா என்ன? கேள்விப்பட்டதே இல்லையே!' என்று நினைத்துக் கொண்டே, பள்ளிக்கூடத்துக்குச் சென்றேன்.

பள்ளிக்கூடத்தில் என் வேலை முடிந்ததும், தலைமை ஆசிரியரிடம், "இங்கே பராங்குசம்னு ஒத்தருக்கு சிலை வச்சிருக்காங்களே, அவர் என்ன இந்தப் பக்கத்தைச் சேர்ந்த அரசியல் தலைவரா" என்று தயங்கிக் கொண்டே கேட்டேன். ஒருவேளை அவர், "பராங்குசத்தைத் தெரியாதா உங்களுக்கு?" என்று கேட்டு, என்னைப் பொது அறிவு இல்லாதவன் என்று உணர வைத்து விடுவாரோ என்ற பயம் எனக்கு இருந்தது.

"இல்லை சார்! அவர் இந்த ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி" என்றார் தலைமை ஆசிரியர்.

"விவசாயியா? அவருக்கு ஏன் சிலை வச்சிருக்காங்க. விவசாயத்தில புதுமையா ஏதாவது செஞ்சாரா?"

"அதெல்லாம் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில இந்த ஜில்லாவோட கலெக்டரா இருந்தவர் ரொம்பக் கொடூரமானவர். வரி வசூலிக்கறில ரொம்ப கடுமையா இருப்பாரு. ஆனா வரி அதிகமா இருந்ததால, பல விவசாயிகளால வரியைக் கட்ட முடியல. அதனால, வரி கட்டாதவங்களோட நிலங்களை ஜப்தி பண்ணச் சொல்லி கலெக்டர் உத்தரவு போட்டுட்டாரு. ஜப்திக்கான தேதியையும் அறிவிச்சுட்டாங்க.

"ஜப்தி பண்றதுக்கு முதல் நாள் ராத்திரி பராங்குசம் தன்னோட வயலுக்குப் போனாரு. அடுத்த நாள் காலையில அவர் தன்னோட நிலத்திலேயே இறந்து கிடந்தாரு. பூச்சி மருந்தைக் குடிச்சிருந்தாருன்னு தெரிஞ்சது."

"என்ன சார் இது? ஒத்தர் தற்கொலை செஞ்சுக்கிட்டார்ங்கறதுக்காக அவருக்குச் சிலை வைப்பாங்களா? தற்கொலை செஞ்சுக்கறது கோழைத்தனம் இல்லையா?" என்றான் நான், வியப்புடன்.

"ஊர்க்காரங்க அப்படி நினைக்கல. ஒரு விவசாயிக்கு அவரோட நிலம் ஜப்தி செய்யப்படறது பெரிய அவமானம். ஜப்தி நோட்டீஸ் வந்த எல்லா விவசாயிகளுமே இந்த அவமான உணர்வோடதான் இருந்தாங்க. ஆனா, இப்படி ஒரு அவமானம் நேர்ந்தப்பறம் உயிர் வாழக் கூடாதுன்னு பராங்குசம் நினைச்சிருக்காரு. அவரோட தன்மான உணர்வை இந்த ஊர்க்காரங்க பெரிசா நினைக்கறாங்க. அது மட்டும் இல்ல. அவரோட தற்கொலையால, அரசாங்கம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தினதோட இல்லாம, வரி அதிகமா இருக்கறதை உணர்ந்து வரியைக் குறைச்சுட்டாங்க. அந்த நன்றி உணர்வுக்காகவும்தான் சிலை வச்சாங்கன்னு வச்சுக்கலாம்" என்றார் தலைமை ஆசிரியர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

பொருள்: 
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர் வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...