Sunday, September 24, 2023

969. வழக்கறிஞரின் யோசனை!

அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் முரளிக்கு ஃபோன் செய்தாள் சியாமளா.

"முரளி. உங்கப்பாவுக்கு பிசினஸில கொஞ்சம் நஷ்டம் வந்துடுச்சு. அவருக்குப் பொருள் சப்ளை பண்ணினவங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுக்க முடியல. நீ கொஞ்சம் பணம் அனுப்பினா நல்லா இருக்கும்" என்றாள்.

"எவ்வளவு?" என்றான் முரளி.

சியாமளா தயங்கிக் கொண்டே,"பத்து லட்ச ரூபாய்!" என்றாள். 

"பத்து லட்சமா? மை காட்! என்னம்மா நினைச்சுக்கிட்டிருக்கே? பத்து லட்ச ரூபாய்க்கு  நான் எங்கே போவேன்?" என்றான் முரளி கோபத்துடன். 

"பத்துப் பன்னண்டாயிரம் டாலர் உன்னால புரட்ட முடியாதா?"

"டாலர் கணக்கெல்லாம் போடாதே அம்மா! எனக்குப் பத்தாயிரம் டாலர்னா, உங்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் மாதிரின்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?"

"முரளி! நான் அப்பா பேசறேன். நான் பொருட்கள் சப்ளை பண்ணின ஒரு பெரிய கஸ்டமர் திடீர்னு ஏதோ பிரச்னையில மாட்டிக்கிட்டார். அவரோட பாங்க் அக்கவுன்ட்டை எல்லாம் முடக்கிட்டாங்க. அவர்கிட்டே இருந்து எனக்கு வர வேண்டிய பெரிய தொகை முடங்கிப் போச்சு. ஆனா என்னோட சப்ளையர்களுக்கு நான் பணம் கொடுத்துத்தானே ஆகணும்? நீ இப்ப எனக்குப் பணம் கொடுத்தா நான் ஒரு வருஷத்தில அதை உனக்குத் திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றார் ரமணன்.

"அப்பா! இந்த பிசினஸ் எல்லாம் உங்களுக்கு வேண்டாம், உங்க ரெண்டு பேரோட குடும்பச் செலவுக்கு நான் பணம் அனுப்பறேன், நீங்க ரெண்டு பேரும் ஜாலியா லைஃபை எஞ்ஜாய் பண்ணுங்கன்னு நான் உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்!"

"அதெல்லாம் இருக்கட்டும். இப்ப இந்தப் பிரச்னையைத் தீர்க்கணும் இல்ல?  நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்கணுங்கறது எனக்கு ரொம்ப முக்கியம்!"

"ஆனந்த்னு எனக்கு ஒரு லாயர் ஃபிரண்ட் இருக்கான். அவனை உங்களை வந்து பாக்கச் சொல்றேன். அவன் உங்க பிரச்னைக்கு ஒரு தீர்வு கொடுப்பான்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் முரளி.

றுநாள் ரமணனின் அலுவலகத்துக்கு வந்த ஆனந்த், அவரிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டு விட்டு, "சப்ளையர்ஸ் எல்லாம் அன்செக்யூர்ட் கிரடிடார்ஸ். அவங்களால உங்க எந்தச் சொத்தையும் தொட முடியாது. அதோட உங்க பேர்ல சொத்து எதுவும் இல்ல. உங்க வீடு பரம்பரை சொத்து. அதில உங்க பையனுக்கு உரிமை உண்டு. அதனால அதையும் அட்டாச் பண்ண முடியாது. சப்ளையர்ஸ் உங்க மேல கேஸ் போடட்டும். அதெல்லாம் விசாரிச்சுத் தீர்ப்பு வரப் பல வருஷங்கள் ஆகும். கேஸை எப்படி இழுத்தடிக்கறதுங்கறது எனக்குத் தெரியும். அப்படியே சீக்கிரம் தீர்ப்பு வந்தாலும் உங்ககிட்ட பணம், சொத்து எதுவும் இல்லைன்னு சொல்லி ஐபி கொடுத்துடலாம்!" என்றான் ஆனந்த்.

"ஐபி கொடுக்கறதா?" என்றார் ரமணன் அதிர்ச்சியுடன்

"ஆமாம். எத்தனையோ பேரு ஐபி கொடுத்துட்டுக் கவலை இல்லாம சுத்திக்கிட்டிருக்கான். கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்.. உங்களுக்கு வர வேண்டிய பணம் வராததால உங்களால சப்ளையர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுடுச்சுன்னு எல்லா  சப்ளையர்களுக்கும் ஒரு லெட்டர் அனுப்பிடலாம். நான் லெட்டர் டிராஃப்ட் பண்ணி நாளைக்கு எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் ஆனந்த்.

டுத்த நாள் காலை எட்டு மணிக்கு ஆனந்துக்கு முரளியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"என்னடா இந்த நேரத்தில ஃபோன் பண்ற? இப்ப அங்கே ராத்திரி பதினோரு மணியா இருக்குமே!" என்றான் ஆனந்த்.

"இன்னிக்கு நீ என் அப்பாவைப் பார்க்கப் போகறதா இருந்த இல்ல? அங்கே போக வேண்டாம். என் அப்பா இறந்துட்டாரு" என்றான் முரளி.

"ஐயையோ! எப்ப? எப்படி?"

"தெரியல. தூக்கத்திலேயே இறந்துட்டாரு. அவருக்கு எந்த ஹெல்த் பிராப்ளமும் இல்ல. அதனாலதான் அவர் திடீர்னு இறந்தது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. கடன்காரர்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியலியேன்னு நேத்து பூரா புலம்பிக்கிட்டிருந்தாராம். அந்த அவமான உணர்ச்சியே அவரைக் கொன்னிருக்கும்னு அம்மா சொல்றாங்க. விஷயம் தெரியாம நீ அங்கே போகக் கூடாதுன்னுதான் உனக்கு ஃபோன் பண்ணினேன்" என்று கூறி உரையாடலை முடித்தான் முரளி. 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்: 
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...