"எல்லாம் நம் வைத்தியரின் கைவண்ணம்தான்" என்றான் வீரவல்லபன்.
அரசருக்கு அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டிருந்த பணிப்பெண் மேகலை, அறைக்கு வெளியில் வந்து, "அரசர் ஏதோ கேட்கிறார். வருகிறீர்களா?" என்றாள்.
இருவரும் விரைந்து, அரசன் படுத்திருந்த அறைக்கு ஓடினர்.
அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த அரசன் ராஜகம்பீரன், அவர்களை அருகில் வருமாறு சைகை செய்தான்.
"என்னுடைய விசுவாசமான ஊழியர்களான உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்?" என்றான் அரசன்.
எதிரி நாட்டுடனான போரில், ராஜகம்பீரனின் படைகள் தோற்றதும், போரில் படுகாயம் அடைந்த ராஜகம்பீரனை, அவனுடைய விசுவாச ஊழியர்கள் சிலர் எதிரி மன்னனால் அவன் சிறைப்பிடிக்கப்படாமல் காப்பாற்றித் தப்ப வைத்து, ஒரு ரகசிய இடத்துக்குக் கொண்டு வந்து வைத்திருப்பதை அவர்கள் விளக்கினர்.
"போரில் ஏற்பட்ட காயங்களால் மயக்கமடைந்திருந்த தங்களை ஒரு பத்திரமான இடத்துக்கு அழைத்து வந்து, வைத்தியரை வைத்துத் தங்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறோம். பத்து நாட்களுக்குப் பிறகு, இன்றுதான் தாங்கள் கண் விழித்திருக்கிறீர்கள்" என்று விளக்கினான் பரஞ்சோதி.
ராஜகம்பீரன் கண்களை மூடிக் கொண்டான். மீண்டும் கண்களைத் திறந்தபோது, அவனிடம் ஒரு சோர்வு இருந்தது.
"வைத்தியர் எங்கே?" என்றான் அரசன்.
"இன்னும் சற்று நேரத்தில் வருவார்" என்ற பரஞ்சோதி, "அரசே! தங்களுக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் தீவிரத் தன்மையைப் பார்த்தபோது, எங்களுக்கு மிகவம் கவலை ஏற்பட்டது. ஆனால், தங்களைப் பிழைக்க வைக்க முடியும் என்பதில் வைத்தியர் உறுதியாக இருந்தார். அவர் சொன்னது போலவே, தாங்களும் கண் விழித்து எங்கள் வயிற்றில் பாலை வைத்து விட்டீர்கள்" என்றான் .
"உங்கள் வைத்தியரின் பெருமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய சிகிச்சை சிறப்பாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால், இறந்து போகாமல் இருப்பதற்கான மருந்தை நான் முன்பே உட்கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது!"
"என்ன சொல்கிறீர்கள், அரசே?"
"போரில் தோற்றவுடன், போர்க்களத்திலேயே என் உயிர் போயிருக்க வேண்டும். அவ்வாறு போக விடாமல், பலத்த காயங்களுடன் நான் என் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்றால், போரில் தோற்ற அவமானத்தை விட, உயிர் வாழும் விருப்பம் என்னிடம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதுதானே பொருள்!" என்றான் ராஜகம்பீரன், கசப்புணர்வுடன்.
பொருட்பால்
குடியிந்யல்
அதிகாரம் 97
மானம்
குறள் 968:
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
No comments:
Post a Comment