Sunday, September 24, 2023

967.வேண்டாம் இந்த வேலை!

"எங்கே போயிட்டு வரீங்க?" என்றாள் சரசு.

"நல்ல விஷயமாத்தான்!" என்றான் சிரித்துக் கொண்டே.

"என்ன நல்ல விஷயம்?"

"சொல்றேன்."

ஆயினும் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கதிரேசன் அந்த நல்ல விஷயம் எது என்று சொல்லவில்லை. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே எங்கோ போய் விட்டு வந்து சரசுவிடம் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்தான் கதிரேசன்.

"பணம் ஏதுங்க?" என்றாள் சரசு.

"நாளையிலேந்து வேலைக்குப் போகப் போறேன்!"

"அப்படியா?" என்று மகிழ்ச்சியுடன் கூறிய சரசு, "வேலைக்குப் போனா மாசம் முடிஞ்சதும்தானே சம்பளம் கொடுப்பாங்க! வேலைக்குப் போறதுக்கு முன்னாலேயே எப்படி சம்பளம் கொடுப்பாங்க?" என்றாள் வியப்புடன்.

"நமக்குத் தெரிஞ்சவங்களா இருந்தா, சொந்தக்காரங்களா இருந்தா கொடுக்க மாட்டாங்களா?"

"சொந்தக்காரங்களா?"

"நம்ம பரந்தாமன் கம்பெனியிலதான் நான் வேலைக்குப் போகப் போறேன்!"

"எந்தப் பரந்தாமன்?" என்று கேட்ட சரசு, உடனே எந்தப் பரந்தாமன் என்று புரிந்து கொண்டவளாக, "அவன் கம்பெனியிலேயா?" என்றாள் அதிர்ச்சியுடன்.

த்து ஆண்டுகளுக்கு முன் சரசு கதிரேசனைத் திருமணம் செய்து கொண்டதும் அவர்கள் அவனுடைய கிராமத்து வீட்டில்தான் குடித்தனம் நடத்தினர்.

அது கதிரேசனின் தந்தை கணபதி வியாபாரத்தில் ஈட்டிய பணத்தில் வாங்கிய வீடு.

சரசுவின் திருமணத்துக்குச்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே கணபதியின் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. சமீபத்தில்தான் தந்தையுடன் வியாபாரத்தில் இணைந்திருந்த கதிரேசன் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஆனால் திடீரென்று கணபதி இறந்து விட்டார்

கணபதி இறந்ததும் வியாபாரத்துக்காக அவருக்குக் கடன் கொடுத்திருந்தவர்கள் கதிரேசனை நெருக்க ஆரம்பித்தனர்.

கணபதிக்குக் கடன் கொடுத்திருந்தவர்களில் முக்கியமானவர் கணபதியின் ஒன்று விட்ட சகோதரர் பூமிநாதன்.. 

கதிரேசன் பூமிநாதன் வீட்டுக்குச் சென்றான்.

"சித்தப்பா! அப்பா இறந்துட்டாரு. நான் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். மத்த கடன்கார்கள்கிட்ட எல்லாம் பேசிட்டேன். அவங்க ஆறு மாசம் டைம் கொடுத்திருக்காங்க. நீங்களும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா உங்க கடனைக் கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பிக் கொடுத்துடுவேன்!" என்றான் கதிரேசன்.

பூமிநாதன் பதில் சொல்வதற்குள் அருகிலிருந்த அவருடைய மகன் பரந்தாமன், "யாருடா சித்தப்பா? உங்கப்பா என்ன எங்கப்பாவோட கூடப் பொறந்தவரா? உறவை எல்லாம் சொல்லிக்கிட்டு வராதே! மரியாதையாக் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பாரு. இல்லேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுப் பணத்தை வாங்கிடுவோம்!" என்றான்.

"பரந்தாமா! நான் உன்னை விட வயசில பெரியவன். கொஞ்சம் மரியாதையாப் பேசு" என்றான் கதிரேசன் பொறுமையுடன்.

"கடன் வாங்கிட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாதவங்கிட்ட என்னடா மரியாதை?" என்றான் பரந்தாமன்.

"பரந்தாமா! சும்மா இரு. நான் பேசிக்கறேன்" என்ற பூமிநாதனை, "நீங்க சும்மா இருங்கப்பா! உங்களுக்குக் கடன் கொடுக்கத்தான் தெரியும், கொடுத்த கடனைத் திருப்பி வாங்கத் தெரியாது" என்று அடக்கிய பரந்தாமன், "இங்கே பாரு கதிரேசா! உங்கப்பனை நம்பித்தான் எங்கப்பா கடன் கொடுத்தாரு. அவன் போய்ச் சேர்ந்தப்புறம், உன்னை நம்பி நாங்க காத்துக்கிட்டிருக்க முடியாது. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள கடனை வட்டியோட செட்டில் பண்ணலேன்னா கோர்ட்ல கேஸ் போட்டுடுவேன்!" என்றான்.

தன்னை மட்டுமின்றித் தன் தந்தையையும் அவமரியாதையாகப் பேசியவனிடம் தொடர்ந்து பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து கதிரேசன் மௌனமாக வெளியேறினான்,

பரந்தாமனின் வீட்டிலிருந்து கதிரேசன் வெளியே வந்தபோது அந்தத் தெருவில் இருந்தர்களில் பலர் பரந்தமனின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது பரந்தாமன் உரத்த குரலில் தன்னையும் தன் தந்தையையும் மரியாதைக் குறைவாகப் கத்திப் பேசியது அவர்கள் காதில் விழுந்திருக்கும் என்ற உணர்வு கதிரேசனை மேலும் அவமானமாக உணரச் செய்தது.

வேறு வழியில்லாமல் வீட்டை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டான் கதிரேசன்.

அதற்குப் பிறகு அருகிலிருந்த நகரத்தில் குடியேறி, ஒரு நிலையான வேலை கிடைக்காமல் பத்து வருடங்களாகப் பல வேலைகளில் இருந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன்.

"நீ நினைக்கிறது எனக்குப் புரியுது சரசு. பரந்தாமன் என்னை அவமானப்படுத்தினவன்தான். ஆனா நாம இப்ப இருக்கற நிலைமையில எனக்கு வேற வழி தெரியல. அவன் இந்த ஊர்ல ஒரு கம்பெனி வச்சு நடத்திக்கிட்டிருக்கான்னு கேள்விப்பட்டு அவனைப் போய்ப் பார்த்தேன். அவன் எனக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்து ஒரு மாசச் சம்பளத்தை அட்வான்சாகவும் கொடுத்திருக்கான்" என்றான் கதிரேசன் சங்கடத்துடன்.

ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு யோசித்த சரசு, "நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?" என்றாள்.

"சொல்லு சரசு!"

"உங்களுக்கு வேலை கிடைக்காம, நமக்கு வருமானம் இல்லாம நாம, பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்ல. ஆனா இந்த வேலை உங்களுக்கு வேண்டாம். இப்பவே போய் அவன் கொடுத்த அட்வான்சைத் திருப்பிக் கொடுத்துட்டு வந்துடுங்க!" என்றாள் சரசு உறுதியான குரலில், 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்: 
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...