Thursday, September 21, 2023

966. தணிகாசலம் போட்ட கணக்கு!

"என்ன தலைவரே இது, அந்த வீரய்யா உங்களைப் பத்தி எவ்வளவு கேவலமாப் பேசி இருக்காரு? அவரோட கூட்டணி வச்சுக்கலாம்னு சொல்றீங்களே!" என்றார் அகெமு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செல்வமணி.

"இங்க பாருங்க. இந்தத் தேர்தல் நமக்கு ரொம்ப முக்கியம். போன தேர்தல்ல நாம தோத்து ஆட்சியை இழந்துட்டோம். இந்தத் தேர்தல்லேயும் தோத்துட்டோம்னா நம்ம கட்சி காணாமலே போயிடும், கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆளும் கட்சிக்கும் நமக்கும் கடுமையான போட்டி இருக்கும்னு சொல்லுது. வீரய்யாவோட கட்சிக்கு அஞ்சு சதவீதம் ஓட்டு இருக்கு. அதனால அவரோட கூட்டு சேர்ந்தா நாம கண்டிப்பா ஜெயிச்சுடலாம்!" என்றார் பொதுச் செயலாளர் தணிகாசலம்.

"வீரய்யா உங்க மேல ஊழல் புகார் எல்லாம் சொல்லி இருக்காரு. உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து சிறைக்கு அனுப்பறதுதான் தன்னோட வாழ்க்கை லட்சியம்னு சொல்லி இருக்காரு. அவரோட போய் எப்படிக் கூட்டு வச்சுக்க முடியும்?" என்றார் செல்வமணி கோபத்துடன்.

"அப்படிச் சொல்லிட்டு நம்மோட கூட்டு வச்சுக்கிட்டது ஏன்னு சொல்ல வேண்டியது அவரோட பிரச்னை. நம்மைப் பொருத்தவரை நாம ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிடதாக் காட்டிப்போம்!" என்றார் தணிகாசலம்.

தணிகாசலத்தின் அகெமு கட்சிக்கும், வீரய்யாவின் வெகெமு கட்சிக்கும் கூட்டணி ஏற்பட்டது. வெகெமு கட்சிக்கு அவர்கள் பலத்துக்குப் பொருந்தாத விதத்தில் அதிக இடங்களை அகெமு விட்டுக் கொடுத்தது.

"யாருக்கு எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை. இந்தக் கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே நோக்கம்!" என்றார் தணிகாசலம்.

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

"வெகெமுவோட கூட்டு வச்சுக்கறதுக்கு முன்னால நமக்கும் ஆளும் கட்சிக்கும் சமமான அளவு ஆதரவு இருக்கறதா கருத்துக் கணிப்புகள் சொல்லிச்சு. வெகெமுவோட அஞ்ச சதவீதம் ஓட்டுக்களும் சேர்ந்தா நாம ஆளும் கட்சியை விட அஞ்சு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி ஜெயிச்சிருக்கணும். ஆனா அஞ்சு சதவீத ஓட்டு  குறைச்சு வாங்கித் தோத்திருக்கோம். அப்படின்னா நாம பத்து சதவீத ஓட்டை இழந்திருக்கோம்னு அர்த்தம்!" என்றார் செல்வமணி.

தணிகாசலம் மௌனமாக இருந்தார்.

"ஆனா நீங்க சொன்ன ஒரு விஷயம் நடக்கப் போகுது!"

"என்ன?" என்றார் தணிகாசலம்.

"இந்தத் தேர்தல்ல தோத்துட்டா நம்ம கட்சி காணாமப் போயிடும்னு சொன்னீங்க இல்ல, அது!" என்றார் செல்வமணி.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 966:
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

பொருள்: 
தன்னை இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தராது, அவனை தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...