இதற்குக் காரணங்கள் இரண்டு.
ஒன்று, அந்த அலுவலகத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகள் பற்றி ரமணனுக்கு இருந்த ஆழ்ந்த அறிவு. அந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் அறையை ஒட்டி இருந்த ஒரு பழைய அறையில், ஒரு அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலுவலக விதிமுறைகள், சட்டங்கள், நடைமுறைகள் பற்றிய புத்தகங்கள், கையேடுகள் ஆகியவற்றில் இருக்கும் அத்தனை விஷயங்களும் அவர் மூளைக்குள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன.
யார் எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும், டக்கென்று பதில் சொல்வார் ரமணன். சிக்கலான விஷயங்களை எப்படி அணுகுவது என்று யோசனை சொல்லுவார். சில சமயம், அவருடைய மேலதிகாரிகள் அவரிடம் சந்தேகம் கேட்டு விளக்கம் பெற்றபின், அவர் சொன்தைச் சரிபார்க்க, விதிமுறைகள் கையேடுகளைப் பார்ப்பார்கள். அவர் கூறியது ஒருமுறை கூடத் தவறாகப் போனதில்லை.
இரண்டாவது காரணம், அவருடைய நேர்மை. பணிகளை முடித்துக் கொடுக்கப் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவது ஒரு வழக்கமாக இருந்த அந்த அலுவலகத்தில், ரமணன் மட்டும் யாரிடமும் லஞ்சம் பெற்றதில்லை. அவரிடம் வரும் விண்ணப்பங்கள் சட்டப்படி சரியாக இருந்தால், அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பெழுதுவார். விதிகளுக்குப் புறம்பாக இருந்தால், அதைக் குறிப்பிட்டு எழுதி விடுவார்.
சில விண்ணப்பதாரர்கள், அவரைத் தங்களுக்குச் சாதகமாகக் குறிப்பு எழுதும்படி செய்ய எவ்வளவோ முயன்றும், அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டதில்லை. இறுதியில், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் ரமணனிடம் போய் விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது.
ரமணனின் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய சக ஊழியர் நாதன், "என்ன சார்! வீட்டுக்கு வெள்ளையடிச்சு ரொம்ப வருஷம் ஆகி இருக்கும் போல இருக்கே!" என்றார்.
"ஆமாம். என் மனைவி கூட சொல்லிக்கிட்டிருக்கா. அதுக்கு நிறைய செலவாகுமே! எப்ப முடியுமோ தெரியல!" என்றார் ரமணன்.
"நீங்க எப்ப வெள்ளை அடிக்கறதானாலும், தண்டபாணியை விட்டு அடிக்கச் சொல்லுங்க. அவர்தான் குறைஞ்ச கட்டணத்துக்கு நல்லா அடிச்சுக் கொடுப்பாரு."
"அவர் நம்ம ஆஃபீஸ்ல அடிக்கடி அப்ளிகேஷன் போட்டுக்கிட்டே இருப்பாரே! அவரை விட்டு செய்யச் சொன்னா, சரியா இருக்குமா?"
"அவர் என்ன சும்மாவா அடிக்கப் போறாரு? காசு வாங்கிக்கிட்டுத்தானே அடிக்கப் போறாரு! நமக்குக் கொஞ்சம் குறைஞ்ச கட்டணத்தில அடிச்சுக் கொடுப்பாரு. அவ்வளவுதான்! நம்ம ஆஃபீஸ்ல இருக்கற எல்லார் வீட்டுக்கும் அவர்தான் வெள்ளை அடிக்கறாரு" என்றார் நாதன்.
"என்ன சார்! நாங்கள்ளாம் ஏதோ அஞ்சு பத்துன்னு வாங்கறோம். நீங்க மொத்தமா வாங்கறீங்க போல இருக்கே!" என்றான் சுந்தர் என்ற சக ஊழியன்.
"என்னப்பா சொல்ற?" என்றார் ரமணன், புரியாமல்.
"கான்டிராக்டர் தண்டபாணியை வச்சு உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுட்டீங்களே, அதைச் சொல்றேன்!"
"தப்பாப் பேசாதே! பணம் கொடுத்துத்தான் அடிக்கச் சொன்னேன்" என்றார் ரமணன், கோபத்துடன்.
"கொடுத்திருப்பீங்க. அம்பதாயிரம் ரூபா வேலைக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருப்பீங்க!"
ரமணன் பதில் சொல்வதற்குள், அவரை அவர் மேலதிகாரி அழைப்பதாக பியூன் வந்து சொல்ல, மேலதிகாரியின் அறைக்குச் சென்றார் ரமணன்.
"ரமணன்! உங்ககிட்ட ஒரு அப்ளிகேஷன் அனுப்பி இருக்கேன். அதுக்கு ஃபேவரபிளா நோட் போட்டுடுங்க!" என்றார் மேலதிகாரி.
"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்தா, போட்டுடறேன்."
"ரூல்ஸ்படி எல்லாம் சரியா இருந்தா, நான் ஏன் இதை உங்ககிட்ட சொல்றேன்? நீங்க பணமா வாங்க மாட்டீங்க, பொருளாவோ, சேவையாவோதான் வாங்குவீங்க போல இருக்கு! அவர் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க. செஞ்சு கொடுத்துடுவாரு, தண்டபாணி உங்க வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக் கொடுத்த மாதிரி!" என்று சொல்லிச் சிரித்தார் மேலதிகாரி.
அவருக்குச் சூடாக பதில் சொல்ல வேண்டும் என்று எழுந்த எண்ணத்தை அடக்கிக் கொண்ட ரமணன், அமைதியாகத் தன் இருக்கைக்குத் திரும்பினார்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்
குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
No comments:
Post a Comment