Tuesday, September 19, 2023

964. கோவில் திருவிழா

அந்த ஊரில் யாருமே சொக்கலிங்கத்தைப் பெயர் சொல்லிக் குறிப்பிட மாட்டார்கள் பண்ணையார் என்றுதான் சொல்வார்கள்.

அந்த அளவுக்கு அந்த ஊர் மக்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பும், மரியாதையும் இருந்தன.

இத்தனைக்கும், பண்ணையார் என்று சொல்லும் அளவுக்கு அவர் அதிக நிலம் வைத்திருந்தவர் அல்ல. ஓரளவுக்கு வசதியானவர், அவ்வளவுதான்.

சொக்கலிங்கத்துக்குப் பரம்பரையாக இருந்த பெருமையைத் தவிர, அவருடைய பண்பான அணுகுமுறையும் அவருக்கு மதிப்பைத் தேடித் தந்தது. அவர் யாரையும் கீழானவராக நினைத்ததில்லை, யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை.

"மனுஷன்னா இப்படி இருக்கணும்யா! நாலு காசு சம்பாதிச்சுட்டு, ரெண்டு சென்ட் நிலம் வாங்கினவங்கள்ளாம், பெரிய ஜமீன்தார் மாதிரி பந்தா பண்றாங்க. இவர் எப்படி இருக்காரு பாருங்க!" என்று ஊரில் பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்வது உண்டு.

ந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் இருந்த கனகம் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட செய்தி, அந்த ஊரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

"அந்தப் பொண்ணு ஒரு மாதிரியாம்! அவளோட தொடர்பு வச்சிருந்த யாரோ ஒத்தர்தான் அவளைக் கொன்னிருப்பாங்கன்னு பேசிக்கறாங்க!" என்ற பேச்சு ஊர்மக்களிடையே எழுந்தது.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் சொக்கலிங்கத்தைக் கைது செய்தனர்.

ஆயினும், அடுத்த சில வாரங்களில், உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு, சொக்கலிங்கம் விடுதலை செய்யப்பட்டார். 

வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம், பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

"உங்களைப் பார்க்க கோவில் தர்மகர்த்தா வந்திருக்காரு" என்றாள் சொக்கலிங்கத்தின் மனைவி.

"வாங்க, உக்காருங்க!" என்று தர்மகர்த்தாவை வரவேற்றார் சொக்கலிங்கம்.

தர்மகர்த்தா உட்காரவில்லை.

"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார் தர்மகர்த்தா.

"சொல்லுங்க!"

"அடுத்த வாரம் கோவில் திருவிழா வருது."

கோவில் திருவிழாவின்போது, சொக்கலிங்கதத்துக்கு முதல் மரியாதை தருவது வழக்கம். அதைச் சொல்லத்தான் வந்திருக்கிறார் போலிருக்கிறது. 

"இந்த சந்தர்ப்பத்தில நான் முதல் மரியாதை வாங்கிக்கறது சரியா இருக்குமான்னு தெரியல!" என்றார் சொக்கலிங்கம், தயக்கத்துடன்.

"இந்த வருஷம் சுந்தரமூர்த்திக்கு முதல் மரியாதை கொடுக்கறதுன்னு கமிட்டியில முடிவு செஞ்சுட்டாங்க. நான் சொல்ல வந்தது வேற விஷயம்!"

"என்ன?" என்றார் சொக்கலிங்கம், அதிர்ச்சியுடன்.

"கொலையில உங்களுக்குத் தொடர்பு இல்லேன்னாலும், அந்தப் பொண்ணோட உங்களுக்குத் தொடர்பு இருந்த விஷயம் தெரிஞ்சதால, ஊர்மக்கள் ரொம்ப அதிர்ச்சியில இருக்காங்க. இந்த நிலைமையில, உங்களைப் பொது இடத்தில பார்த்தா, மக்கள் எப்படி நடந்துப்பாங்கன்னு தெரியாது. அதனல, நீங்க திருவிழாவில கலந்துக்காம வீட்டில இருக்கறதுதான் நல்லதுன்னு உங்ககிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்."

சொக்கலிங்கத்தின் பதிலை எதிர்பாராமல், தர்மகர்த்தா வெளியே நடந்தார். 

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

பொருள்: 
உயர்ந்த நிலையில் இருந்தவர், தன் நிலை தாழ்ந்தால், தலையிலிருந்து உதிர்ந்த முடியைப்  போன்றவர் ஆவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...