Monday, September 18, 2023

963. உயர்ந்த இடத்தில் இருந்தபோது...

"டாப் இண்டஸ்டிரிலிஸ்ட்கள்ள ஒருத்தரா இருந்த நீங்க இன்னிக்கு இவ்வளவு கீழே வந்ததுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்றார் மதன்மோகன்.

"சார்! இது நான் உங்களோட நடத்தற மூணாவது மீட்டிங். இந்த பாயின்ட்டை நாம ஏற்கெனவே விரிவா விவாதிச்சுட்டோம். இப்ப நீங்க தீர்மானிக்க வேண்டியது என் நிறுவனத்தை மறுபடி மேலே கொண்டு வருவதற்கான என்னோட திட்டத்துக்கு நீங்க உதவப் போறீங்களாங்கறதுதான்!" என்றார் முத்துகிருஷ்ணன்.

"சரி. அடுத்த வாம் வாங்க. மறுபடி பேசலாம்."

"மன்னிச்சுக்கங்க சார்!  உங்களுக்கு இன்னும் ஏதாவது விளக்கங்கள் வேணும்னா சொல்லுங்க. அதையெல்லாம் கொடுக்கறேன். ஆனா திரும்பத் திரும்ப உங்களை வந்து பார்க்கறதை நான் விரும்பல. உங்களுக்கு வேற என்ன விவரம் வேணும்னாலும் என்னோட கன்சல்டன்ட்கிட்ட சொல்லுங்க. நான் வரேன்!" என்று கூறிக் கிளம்பினார் முத்துகிருஷ்ணன்.

சிறிது நேரம் கழித்து முத்துகிருஷ்ணனின் கன்சல்டன்ட் ஹரிபாபுவிடமிருந்து மதன்மோகனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது? 

"என்ன சார், மீட்டிங் எப்படிப் போச்சு?" என்றார் ஹரிபாபு.

"என்ன சார் இது? மனுஷன் நொடிச்சுப் போயிருக்காரு. அவருக்கு உதவி செய்ய யாருமே தயாரா இல்ல. நீங்க ரெஃபர் பண்ணினதால நான் அவரோட ரிவைவல் புராஜக்டுக்கு உவி செய்யறதைப் பத்திப் பரிசீலனை செய்யலாம்னு நினைச்சேன். ஆனா அவரு இவ்வளவு திமிராப் பேசறாரு!" என்றார் மதன்மோகன் கோபத்துடன்.

"சார். தப்பா நினைச்சுக்காதீங்க! அது திமிர் இல்லை. எந்த நிலைமையிலும் தன்னோட கௌரவம் பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைக்கிறாரு. அவ்வளவுதான். அவர் மூணு தடவை உங்களை சந்திச்சு விளக்கமாப் பேசிட்டாரு. நீங்க மறுபடியும் வரச் சொன்னதை அவர் விரும்பல அவ்வளவுதான்!" என்றார் ஹரிபாபு.

"பண உதவி கேக்கறவங்க பணிஞ்சுதான் போகணும். அவரு உச்சத்தில இருந்தப்ப எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்பவும் இருக்கணும்னா முடியுமா?"

"சார்! அவரு உச்சத்தில இருந்தப்ப நீங்க அவரைப் பார்த்ததில்ல. அதனால அப்ப அவர் எவ்வளவு பணிவா இருந்தார்னு உங்களுக்குத் தெரியாது. அவரோட பணிவைப் பார்த்து அவரை சாதாரணமா நினைச்சவங்க எத்தனையோ பேரு. ஒரு தடவை பாங்க்ல போய் கியூவில நின்னுருக்காரு. மானேஜர் பார்த்துட்டு ஓடி வந்து, 'நீங்க ஏன் சார் கியூவில நிக்கறீங்க? என்னோட கேபினுக்கு வந்திருந்தா உங்களுக்கு வேண்டியதை நான் செஞ்சு கொடுத்திருப்பேனே' ன்னு சொல்லி இருக்காரு. அதுக்கு இவரு 'என் வேலைக்காக உங்க அறைக்குள்ள வந்து உங்க வேலையைக் கெடுக்கறது எப்படி நியாயமா இருக்கும்?' னு சிரிச்சுக்கிட்டே சொன்னாராம்.

"ஏன், நான் அவருக்கு அறிமுகமானப்ப நான் ஒரு சாதாரண ஆளாத்தான் இருந்தேன். நான் என் கன்சல்டன்ட் தொழிலை ஆரம்பிச்ச புதுசு. அவரைப் பார்க்க முடியுமான்னு பயந்துகிட்டேதான் அவர் ஆஃபீசுக்குப் போனேன். முன்பின் தெரியாத என்னைக் கொஞ்சம் கூடக் காக்க வைக்காம தன் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாரு. நான் என் தொழிலைப் பத்தி சொன்னப்ப, 'இப்ப எனக்கு கன்சல்டன்ட் உதவி தேவைப்படல. தேவைப்பட்டா உங்களைக் கூப்பிடறேன்'னு சொன்னாரு. அது மாதிரியே ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு புது புராஜக்ட் ஆரம்பிக்கறப்ப ஞாபகம் வச்சுக்கிட்டு என்னைக் கூப்பிட்டாரு.

"அவர் உயர்ந்த நிலையில இருந்தப்ப எந்த அளவுக்குப் பணிவா இருந்தாரோ, அந்த அளவுக்கு இப்ப தன்மானத்தோட இருக்காரு. அவருக்கு உதவறதா வேண்டாமாங்கறதை நீங்க முடிவு செஞ்சு எங்கிட்ட சொல்லுங்க."

மதன்மோகனின் பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டார் ஹரிபாபு.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 97
மானம்

குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்: 
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், நிலை தாழ்ந்து விட்டால், அப்போது உயர்வான மான உணர்வும் இருக்க வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...