Wednesday, September 13, 2023

949. அறுவை சிகிச்சை

பவித்ரா ஒரு பிரபல மருத்துவமனையின் பூரண உடல்நலப் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் உடல்நலப் பரிசோதனை செய்து கொண்டபோது அவளுடைய கருப்பைக்குள் சிறு கட்டிகள் உருவாகி இருந்ததால் அவளுடைய கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் ஒரு மருத்துவர் ஆலோசனை கூறினார்.

"எப்ப ஆபரேஷன் செய்யணும் டாக்டர்?" என்றான் பவித்ராவின் கணவன் சேகர்.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். அடுத்த வாரம் கூட ஒரு தேதி வச்சுக்கிட்டு சர்ஜரிக்கான முன்னேற்பாடுகளை இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்" என்றார் மருத்துவர்.

"நாங்க யோசிச்சு சொல்றோம்!" என்று கூறி விட்டு அவரிடம் விடைபெற்றான் சேகர்.

மருத்துவமனையிலேந்து வெளியே வந்ததும், "ஆபரேஷன் செய்யணும்னா செஞ்சுக்கத்தானே வேணும்? இதில யோசிக்க என்ன இருக்கு?" என்றாள் பவித்ரா.

"நம்ம குடும்ப டாக்டர் சந்திராகிட்ட ஆலோசனை கேட்டுட்டு அப்புறம் முடிவு செய்யலாமே!" என்றான் சேகர்.

வித்ராவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை முழுமையாகப் படித்துப் பார்த்த டாக்டர் சந்திரா, "கருப்பையில ஃபைபிராயிட்ங்கற கட்டிகள் உருவாகறது பலருக்கும் ஏற்படற பிரச்னைதான். இந்தப் பிரச்னை இருக்கறவங்களோட கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கறதும் ஒரு சாதாரண நடைமுறையா ஆயிடுச்சு" என்றார்.

"அப்படின்னா ஆபரேஷன் செஞ்சுடலாம்னு சொல்றீங்களா?" என்றான் சேகர்.

"நான் அப்படிச் சொல்லல. பொதுவான நடைமுறையைச் சொன்னேன். ஆனா உங்க மனைவி விஷயத்தில இந்த ஆபரேஷனை இப்பவே செய்ய வேண்டியது அவசியம் இல்லேன்னு நினைக்கிறேன்."

"ஏன் டாக்டர்?" என்றாள் பவித்ரா.

"ஸ்கேன்ல பாக்கறப்ப உங்களுக்கு ஃபைபிராயிட் இப்பதான் உருவாக ஆரம்பிச்சிருக்கு. உங்க வயசை வச்சுப் பாக்கும்போது உங்களுக்கு மெனோபாஸ் வர நேரம் இது. மெனோபாஸ் வந்தப்புறம் இந்தக் கட்டிகள் வளருவது நின்று போகலாம். அதுக்குள்ள மருந்துகள் கொடுத்து இந்தக் கட்டிகளைக் கரைக்கவும் முயற்சி செய்யலாம். அப்படி செஞ்சா ஆபரேஷனே தேவையில்லைங்கற நிலைமை ஏற்படலாம். அப்படி இல்லாம கட்டிகளோட வளர்ச்சி அதிகமாச்சுன்னா அப்ப ஆபரேஷன் செஞ்சுக்கலாம். ஆறு மாசம் கழிச்சு முடிவு செஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன். ஆபரேஷன் செய்யாட்டாலும் ரெண்டு மூணு வருஷத்துக்கு பிரச்னை எதுவும் வர வாய்ப்பு இல்லை."

"அந்த ஆஸ்பத்திரியில உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்களே!"

"இன்னொரு டாக்டர் சொன்னதைப் பத்தி நான் எதுவும் சொல்லக் கூடாது. ஆனா, நீங்க ஆபரேஷனுக்கு சரின்னு சொல்லி இருந்தாலும் அவங்க உடனே ஆபரேஷனை வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!"

"ஏன் டாக்டர்?"

"ஏன்னா நீங்க ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. உங்க ஹீமோகுளோபின் அளவு ரொம்ப குறைச்சலா இருக்கு. முதல்ல உங்க ஹீமோகுளோபின் அளவை அதிகரிச்சுட்டு அப்புறம்தான் ஆபரேஷன் செய்ய முடியும். அதுக்கே ரெண்டு மூணு மாசம் ஆயிடுமே! அதனால நான் எழுதிக் கொடுக்கிற மாத்திரைகளை சாப்பிடுங்க. ஆறு மாசம் கழிச்சு மறுபடி ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம். அதுக்குள்ள உங்க ஹீமோகுளோபின் அளவும் அதிகரிச்சிருக்கும். ஆபரேஷன் தேவைன்னா அப்ப வச்சுக்கலாம்" என்றார் டாக்டர் சந்திரா.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

பொருள்: 
மருத்துவம் கற்றவர் நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...