Wednesday, September 13, 2023

948. இரத்தப் பரிசோதனை

"எத்தனை நாளா ஜுரம் இருக்கு?" என்றார் டாக்டர்.

"மூணு நாளா" என்றான் மதன்.

"சரி, பிளட் டெஸ்ட் எடுத்துடலாம். இப்போதைக்கு ஒரு மாத்திரை எழுதித் தரேன். அதை ரெண்டு நாளைக்கு சாப்பிடுங்க" என்ற டாக்டர், இரத்தப் பரிசோதனை, மாத்திரை ஆகியவற்றுக்கான பிரிஸ்கிரிப்ஷனை எழுதிக் கொடுத்தார்.

"பிளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்ததும் என்னை வந்து பாருங்க. சுலபமா ஜீரணமாகிற உணவுகளை மட்டும் சாப்பிடுங்க. வெளியில எங்கேயும் சாப்பிடாதீங்க. ரெண்டு நாள் ஓய்வில இருக்கறது நல்லது" என்று அறிவுரை கூறி, மதனை அனுப்பி வைத்தார் டாக்டர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு, இரத்தப் பரிசோதனை அறிக்கையுடன் டாக்டரிடம் வந்த மதன், "டாக்டர்! நீங்க கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதில, இப்ப ஜுரம் சரியாயிடுச்சு. இப்ப நான் நார்மல் ஆயிட்டேன்!" என்றான், உற்சாகத்துடன்.

"நல்லது!" என்று புன்னகையுடன் கூறிய டாக்டர், இரத்தப் பரிசோதனை அறிக்கையைப் படித்துப் பார்த்து விட்டு, "லிவர்ல இன்ஃபெக்‌ஷன் ஆகி இருக்கு. அதுக்கு ஒரு மாத்திரை எழுதித் தரேன். அதை மூணு நாளைக்கு சாப்பிட்டுட்டு, அப்புறம் என்னை வந்து பாருங்க. முதல்ல கொடுத்த மாத்திரையை இனிமே சாப்பிட வேண்டாம்" என்றார்.

"வேற மாத்திரை எதுக்கு, டாக்டர்? அதான் நீங்க முதல்ல கொடுத்த மாத்திரையிலேயே, உடம்பு பூரணமா குணமாயிடுச்சே! வேணும்னா, அந்த மாத்திரையையே இன்னும் ரெண்டு நாளைக்கு சாப்பிடறேனே!"

"ஜுரம் வரதுக்குப் பல காரணங்கள் இருக்கு. சாதாரண ஜுரம்னா, ரெண்டு மூணு நாள்ள சரியாயிடும். மருந்து எதுவும் இல்லாம கூட குணமாயிடும். ஆனா, வேற காரணங்களால ஜுரம் வந்தா, அந்தக் காரணத்தைக் கண்டுபிடிச்சு, அதைப் போக்க சரியான மருந்து கொடுக்கணும். காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான் பிளட் டெஸ்ட். இப்ப பிளட் டெஸ்ட் ரிபோர்ட்லேந்து, லிவர் இன்ஃபெக்‌ஷன்னு தெரிஞ்சு போச்சு. இப்ப, அந்த இன்ஃபெக்‌ஷனைப் போக்க மருந்து கொடுக்கணும். உங்களுக்கு ஜுரம் சரியாயிட்டாலும், இன்ஃபெக்‌ஷன் இருக்கறதால, மறுபடி ஜுரமோ வேற பிரச்னைகளோ வரலாம். முதல்ல கொடுத்த மாத்திரை என்ன பிரச்னைன்னு தெரியாதபோது, ஜுரத்தைத் தணிக்கறதுக்காகக் கொடுத்தது. இப்ப காரணம் தெரிஞ்சதும், அதுக்கு ஏத்த மருந்தைத்தானே கொடுக்கணும்?" என்றார், டாக்டர், மதனிடம் பிரிஸ்கிரிப்ஷனை நீட்டியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்: 
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்ய வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...