"ஏண்டா அப்படிச் சொல்ற?" என்றான் டாக்டர் வடிவேல்.
"பின்னே, உங்கிட்ட ஓசியில வைத்தியம் பார்த்துக்கற வாய்ப்பே எனக்கு வரலியே!"
"இப்படி ஒரு விபரீத ஆசையா உனக்கு? எல்லாரும் நோய் இல்லாம வாழணும்னுதானே ஆசைப்படுவாங்க!"
"அது இருக்கட்டும். நாளைக்கு என் வீட்டுக்கு வரே இல்லை?" என்றான் சதீஷ்.
"நாளைக்கு கிளினிக்குக்கு விடுமுறைதான். அதனால வரேன். நீயும் ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டிருக்க. ஆனா, நீ ஒரு பேச்சிலர். தனியா இருக்க. உன் வீட்டுக்கு வந்து என்ன ஆகப் போகுதுன்னு தெரியல! காப்பியாவது போட்டுக் கொடுப்பியா?" என்றான் வடிவேல்.
மறுநாள் சதீஷ் வீட்டுக்குச் சென்ற வடிவேலை வரவேற்று அமர வைத்த சதீஷ், "இரு. காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வரேன்!" என்று சமையலறைக்குள் சென்றான்.
உடனேயே, கையில் ஐந்தாறு டப்பாக்களுடன் திரும்பி வந்த சதீஷ், டப்பாக்களை மேஜையின் மீது வைத்து விட்டு, "எது வேணும்னா எடுத்துக்க!" என்று சொல்லி விட்டுப் போனான்.
ஒவ்வொரு டப்பாவாகத் திறந்து பார்த்தான் வடிவேல். முறுக்கு, தட்டை, மிக்ஸ்சர், கடலை மிட்டாய், மைசூர் பாகு ஆகியவை அவற்றில் இருந்தன.
டப்பாக்களை மூடி வைத்தான் வடிவேல்.
சற்று நேரத்தில், இரண்டு கோப்பைகளில் காப்பியுடன் வந்தான் சதீஷ்.
"என்ன, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கலையா?" என்றான் சதீஷ்.
"நான் வருவேன்னுட்டா இதையெல்லாம் வாங்கி வச்சிருக்க?" என்றான் வடிவேல்.
"சேச்சே! நீ என்ன உன்னை அவ்வளவு பெரிய வி ஐ பின்னு நினைச்சுக்கிட்டிருக்கியா? இதெல்லாம் நான் தினசரி கொரிக்கறத்துக்காக வாங்கி வச்சது. உள்ளே இன்னும் ரெண்டு மூணு டப்பா இருக்கு!"
"இதையெல்லாம் தினம் சாப்பிடுவியா? எப்ப சாப்பிடுவ, சாப்பாட்டுக்கு முந்தியா, அப்புறமா?"
"சாப்பாட்டுக்கு முந்தி அப்புறம்னெல்லாம் கணக்கா சாப்பிடறதுக்கு, இதெல்லாம் நீ கொடுக்கிற மாத்திரையா என்ன? எப்ப வேணும்னா சாப்பிடுவேன். போர் அடிச்சா சாப்பிடுவேன். ரொம்ப உற்சாகமா இருந்தா சாப்பிடுவேன். டிவி பாத்துக்கிட்டே சாப்பிடுவேன், புத்தகம் படிச்சுக்கிட்டே சாப்பிடுவேன், கம்ப்யூட்டர்ல வேலை செய்யறச்சே சாப்பிடுவேன்..."
"நிறுத்து, நிறுத்து. நல்லவேளை, தூங்கும்போது சாப்பிட முடியாது. அது கடவுள் நமக்குக் கொடுத்த கிஃப்ட்தான்!"
"என்னடா சொல்ற? என்னை மாதிரி தனியா இருக்கறவங்க, போர் அடிச்சா, ஏதாவது நொறுக்குத் தீனி தின்னுக்கிட்டுத்தான் இருப்பாங்க. அதனால என்ன ஆயிடப் போகுது?" என்றான் சதீஷ்.
"நேத்திக்கு நீ சொன்ன இல்ல, எங்கிட்ட ஓசியில வைத்தியம் பார்த்துக்கற வாய்ப்பு உனக்குக் கிடைக்கலேன்னு? நீ இது மாதிரி கட்டுப்பாடு இல்லாம, பசி இருக்கா இல்லையான்னெல்லாம் பார்க்காம, நினைச்சபோதெல்லாம் நொறுக்குத் தீனி தின்னுக்கிட்டிருந்தா, உனக்கு அந்த வாய்ப்பு நிறையவே கிடைக்கும்! நீ என் கிளினிக்குக்கு அடிக்கடி வர வேண்டிய நிலை ஏற்படும் - என்னப் பார்க்க இல்ல, உனக்கு வர நோய்களுக்கு வைத்தியம் பார்த்துக்க!" என்றான் வடிவேல்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து
குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
No comments:
Post a Comment