Sunday, September 10, 2023

944. குழந்தையின் பிடிவாதம்!

"பிடிவாதம் பிடிக்காம சாப்பிட்டுடு. இல்லேன்னா, பூதம் வந்து தூக்கிக்கிட்டுப் போயிடும்!" என்று தன் மூன்று வயதுப் பேரன் சந்தீப்பை மிரட்டினாள் ருக்மிணி.

"சாப்பாட்டை பூதமே தூக்கிக்கிட்டுப் போகட்டும். எனக்கு வேண்டாம்!" என்றான் சந்தீப்.

அருகில் அமர்ந்து  கவனித்துக் கொண்டிருந்த ருக்மிணயின் கணவர் மணிகண்டன், "என் பேரன் எவ்வளவு புத்திசாலி! பூதம் அவனைத் தூக்கிக்கிட்டுப் போயிடும்னு நீ மிரட்டினா, அதை, பூதம் சாப்பாட்டைத் தூக்கிக்கிட்டுப் போயிடும்னு அர்த்தப்படுத்தி, உன்னை எப்படி மடக்கிட்டான் பாரு!" என்றார், சிரித்தபடியே.

"தாத்தாவோட குணம் பேரனுக்குக் கொஞ்சமாவது வராம இருக்குமா? இவனைச் சாப்பிட வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்! எனக்கு உதவி செய்யாட்டாலும், கேலி பண்ணாமலாவது இருக்கலாம் இல்ல?"

"ருக்மிணி! குழந்தைக்குப் பசியில்லேன்னு நினைக்கிறேன். நீ வலுக்கட்டாயமாத் திணிச்சா, அவன் எப்படி சாப்பிடுவான்?"

"பசி இல்லாம எப்படி இருக்கும்? மணி ஒண்ணு ஆச்சே!"

"அது சரிதான். ஆனா, காலையிலேந்து குழந்தைக்கு என்னென்ன கொடுத்தேன்னு நினைச்சுப் பாரு. எழுந்தவுடனே பால், அப்புறம் எட்டு மணிக்கு பிஸ்கட், ஒன்பது மணிக்கு இட்லி, பதினோரு மணிக்கு வாழைப்பழம், பன்னிரண்டு மணிக்கு ஜூஸ் இப்படிக் கொடுத்துக்கிட்டே இருந்தா, குழந்தைக்கு எப்படிப் பசிக்கும்? முதல்ல சாப்பிட்டது ஜீரணமாக நேரம் கொடுத்துட்டுப் பசி எடுக்கற நேரத்திலதான் மறுபடி ஏதாவது கொடுக்கணும். அதுவும், எளிதா ஜீரணம் ஆகிற மாதிரி பார்த்துக் கொடுக்கணும்" என்றார் மணிகண்டன்.

"அதெல்லாம் பெரியவங்களுக்கு. சின்னக் குழந்தை நல்லா சாப்பிட்டாதான், வேகமா வளரும்!" என்றாள் ருக்மிணி.

"நான் சொல்லி, நீ எங்கே கேக்கப் போற?" என்றார் மணிகண்டன், பெருமூச்சுடன்.

"ரெண்டு மூணு நாளாவே இப்படித்தான் சாப்பிடாம பிடிவாதம் பிடிக்கிறான். சாயந்திரம் டாக்டர்கிட்டே போயிட்டு வந்துடலாம்."

"டாக்டர்கிட்ட போற அளவுக்கு எதுவும் இல்லையே! அரை மணி நேரம் கழிச்சுக் கொடுத்துப் பாரு. சாப்பிடுவான்."

"சாப்பாடு ஊட்டற எனக்குத்தானே தெரியும்! சாயந்திரம் இவனோட அப்பா அம்மா ஆஃபீஸ்லேந்து வரதுக்குள்ள, சீக்கிரமே டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம்!" என்றாள் ருக்மிணி.

"குழந்தை நல்லாத்தான் இருக்கான். உடம்பில எதுவும் பிரச்னை இல்லை" என்றார் டாக்டர்.

"சாப்பிடவே மாட்டேங்கறான் டாக்டர்!" என்றாள் ருக்மிணி.

"எந்தெந்த நேரத்தில, என்னென்ன கொடுத்தீங்கன்னு சொல்லுங்க."

ருக்மிணி தயக்கத்துடன் கணவரின் முகத்தைப் பார்த்து விட்டு, காலையிலிருந்து எத்தனை மணிக்கு என்னென்ன கொடுத்தாள் என்பதைச் சொன்னாள்.

"குழந்தை நல்லா வளரணுங்கற எண்ணத்தில, அடிக்கடி ஏதாவது சத்துள்ள உணவுகளைக் கொடுக்கணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, குழந்தையோட ஜீரண சக்தின்னு ஒண்ணு இருக்குல்ல? ஒரு தடவை ஏதாவது சாப்பிட்டா, அது ஜீரணம் ஆக நேரம் கொடுத்துட்டுப் பசி எடுக்கற நேரத்திலதான் மறுபடி எதையும் சாப்பிடணும். அதுவும், உடம்புக்கு ஒத்துப் போற உணவாப் பாத்துதான் சாப்பிடணும். பெரியவங்களானாலும், குழந்தைகளானாலும் இதே விதிதான்!" என்றார் டாக்டர்.

டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்ததும், "டாக்டர் சொன்னதைக் கேட்டப்ப, இதுக்கு முன்னால வேற ஒத்தர் சொன்ன மாதிரியே இருந்தது இல்ல?" என்றார் மணிகண்டன்.

"நீங்க சொன்னதைத்தான் டாக்டரும் சொன்னார்னு சொல்லிக் காட்ட வேண்டாம்!" என்றாள் ருக்மிணி, கோபத்துடன்.

"ஐயையோ! நான் அப்படிச் சொல்லல. திருவள்ளுவரும் இதையேதான் சொல்லி இருக்கார்னு சொல்ல வந்தேன்!" என்றார் மணிகண்டன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 944:
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

பொருள்: 
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு. உடலுக்கு ஒத்து வரக் கூடிய உணவை அருந்த வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...