Monday, September 11, 2023

945. விருந்துண்ண வந்தவர்

"நீங்க பாட்டுக்கு உங்க பாஸை சாப்பிடக் கூப்பிட்டுட்டீங்க. அவருக்கு ஏத்தாப்பல என்ன சமைக்கறதுன்னே தெரியலையே!" என்றாள் சங்கீதா.

"நீ வழக்கமா சமைக்கிற மாதிரி சமை. அவர் ரொம்ப சிம்ப்பிளானவர்தான்" என்றான் முகில்.

"பொதுவா, நான் யார் வீட்டுக்கும் சாப்பிடப் போறதில்லை. முகில் ரொம்ப வற்புறுத்தினார்னு வந்தேன்" என்றார் முகிலின் மேலதிகாரி சண்முகநாதன், அவர்கள் விட்டுக்கு வந்தவுடனேயே.

"நான் சமைச்சதெல்லாம் உங்களுக்குப் பிடிக்குமோ என்னவோ தெரியல" என்றாள் சங்கீதா, தயக்கத்துடன்.

"கவலைப்படாதீங்க. என் மனைவி இறந்தப்புறம், நானேதான் சமைச்சு சாப்பிடறேன். என்னை விட மோசமா சமைக்கிறவங்க இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. என் சமையலையே சாப்பிடறவன், உங்க சமையலை சாப்பிட மாட்டேனா?" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

"சார் சும்மா சொல்றாரு. அவர் பிரமாதமா சமைப்பாரு. அவர் ஆஃபீசுக்கு எடுத்துட்டு வர சாப்பாட்டை நான் சாப்பிட்டுப் பாத்திருக்கேன்!" என்றான் முகில்.

"ஏற்கெனவே, என் சமையல் அவருக்குப் பிடிக்குமோன்னு நான் பயந்துக்கிட்டிருக்கேன். அவரே பிரமாதமா சமைப்பார்னு சொல்றீங்க. எனக்கு இன்னும் அதிக பயமா இருக்கு" என்றாள் சங்கீதா.

"நான் கொண்டு வர சாப்பாட்டை முகில் ருசி பார்த்த மாதிரி, முகில் கொண்டு வர சாப்பாட்டையும் நான் ருசி பாத்திருக்கேன். நீங்க சமைச்ச அயிட்டங்கள் எல்லாம் பிரமாதம்!" என்றார் சண்முகநாதன்.

ஆனால், சங்கீதா பரிமாறியபோது, ஒவ்வொரு அயிட்டமாக என்ன என்று கேட்டுக் கொண்டு, ஒரு சிலவற்றை வேண்டாமென்று மறுத்து விட்டார் சண்முகநாதன். மற்ற உணவு வகைகளையும் குறைவாகவே உண்டார்.

சாப்பிட்டு முடித்ததும், "நிஜமாகவே உங்களுக்கு என் சமையல் பிடிக்கலேன்னு நினைக்கிறேன். சில அயிட்டங்களை வேண்டாம்னுட்டீங்க. மற்ற அயிட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சம்தான் சாப்பிட்டீங்க" என்றாள் சங்கீதா, வருத்தத்துடன்.

"இல்லம்மா. உங்க சமையல் அருமையா இருந்தது. சில உணவு வகைகள், சில காய்கறிகள் என் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு என்னோட அனுபவத்தில நான் கண்டறிஞ்சிருக்கேன். அதனால. அதையெல்லாம் தவிர்த்துடுவேன். அதைத் தவிர, பொதுவாகவே நான் சாப்பிடற அளவைக் குறைச்சுட்டேன். வயசாகிக்கிட்டிருக்குல்ல? கடவுள் புண்ணியத்தில, இதுவரை உடல்நலப் பிரச்னை எதுவும் இல்லாம இருக்கேன்" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

"சார் அடுத்த மாசம் ரிடயர் ஆகப் போறாரு!" என்றான் முகில்.

"அப்படியா? உங்களுக்கு அறுபது வயசு ஆயிடுச்சா?" என்றாள் சங்கீதா, வியப்புடன்.

"எங்க கம்பெனியில ரிடயர்மென்ட் வயசுன்னு எதுவும் கிடையாதும்மா. யாரும் எவ்வளவு வயசு வரையிலேயும் வேலை செய்யலாம். நான்தான் வேலை செஞ்சது போதும்னு ரிடயர் ஆகறேன். அடுத்த மாசம் எனக்கு எழுபது வயசு முடியப் போகுதே!" என்றார் சண்முகநாதன், சிரித்தபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 945:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்: 
தன் உடலுக்கு ஒத்து வரக் கூடிய உணவை அளவு மீறாமல், மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...