Friday, September 8, 2023

940. மனோகர் எங்கே?

சிவராமன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்

சிவராமனைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் ராஜபாண்டியனிடம், "இந்த மூச்சுத் திணறல் அடிக்கடி வருது. இந்தத் தடவை கொஞ்சம் அதிகமா இருந்ததால, ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போனோம். நல்லவேளை சரியாயிடுச்சு" என்றாள் சிவராமனின் மருமகள் வள்ளி.

"இப்ப எப்படி சார் இருக்கீங்க?" என்று சிவராமனிடம் கேட்டார் ராஜபாண்டியன்..

"இப்ப பரவாயில்லை. ஆனா, அந்த மூச்சுத் திணறல் வந்து கஷ்டப்படறப்ப, உயிர் போயிட்டா பரவாயில்லேன்னு தோணுது! எனக்கும் எண்பது வயசு ஆயிடுச்சு இல்ல? சீக்கிரம் போய்ச் சேந்துட்டா எல்லாருக்குமே நல்லது!" என்றார் சிவராமன்.

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்தக் காலத்தில எத்தனையோ பேர் 90, 95 வயசுக்கு மேலே எல்லாம் இருக்காங்க. நீங்க நூறு வயசு இருப்பீங்க!" என்றார் ராஜபாண்டியன்..

இப்படி யாராவது சொல்வார்கள் என்பதற்காகவே, தன் மாமனார் தான் இறந்து விட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்வதைப் பலமுறை கேட்டிருந்த வள்ளி, தனக்குள் சிரித்துக் கொண்டாள். 

ராஜபாண்டியன் சொன்னதைக் கேட்டதும் சிவராமன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கவனித்த வள்ளி, "பாவம்! உயிர் மேல் அத்தனை ஆசை! ஒருவேளை, என் வயதான காலத்தில் நானும் இப்படித்தான் இருப்பேனோ, என்னவோ!' என்று நினைத்துக் கொண்டாள்.

"மனோகர் இன்னும் வரலியா?" என்றார் ராஜபாண்டியன், வள்ளியிடம்.

"வர நேரம்தான்'" என்று அவருக்கு பதில் சொல்லி விட்டுத் தன் முகத்தை அவர் பார்த்து விடக் கூடாதே என்பதற்காகச் செய்ய வேண்டிய வேலை திடீரென்று நினைவுக்கு வந்தது போல் சமையலறைக்குள் சென்றாள் வள்ளி.

அன்று மாலை, தன் தந்தையை மருத்துவமனையிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல், வள்ளி பார்த்துக் கொள்வாள் என்ற அலட்சியத்தில், வழக்கம் போல், அலுவலகம் முடிந்ததும் சீட்டாடும் இடத்துக்குப் போய் விட்ட கணவனை நினைத்து அழுவதா, ஆத்திரப்படுவதா என்று வள்ளிக்குத் தெரியவில்லை.

ரவில் வீடு திரும்பிய மனோகருக்கு உணவு பரிமாறும்போது, "இன்னிக்கும் நஷ்டம்தானே?" என்றாள் வள்ளி.

மனோகர் பதில் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"தினம் சீட்டாட்டத்தில காசு போய்க்கிட்டே இருக்கே, அதை விட்டு ஒழிச்சுடலாம் இல்ல?" 

"அதெப்படி? விட்ட காசை எடுக்க வேண்டாமா? ஜெயிச்சாலாவது, போதும்னு விட்டுட்டு வந்துடலாம். தோத்தா, மறுபடி ஜெயிக்கற வரையில ஆடிக்கிட்டுத்தான் இருக்கணும்!" என்றான் மனோகர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பொருள்: 
துன்பத்தை அனுபவிக்கும்போதெல்லாம், இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும்போதெல்லாம், சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...