கல்லூரிப் பேராசிரியர் சுசீந்தரனின் மாணவர்கள் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டது இது.
கல்லூரி முதல்வர் அழைத்ததால், அவர் அறைக்குச் சென்றார் சுசீந்தரன்.
"பல்கலைக் கழகத்தின் பாடத்திட்ட சீரமைப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலேந்து உங்களை நீக்கி இருக்கறதா பல்லைக்கழகத்திலேந்து கடிதம் வந்திருக்கு. உங்க பங்களிப்பு திருப்திகரமா இல்லைன்னு காரணம் சொல்லி இருக்காங்க. யூ ஆர் ஸச் எ கிரேட் ஸ்காலர்! உங்களைப் பத்தி அவங்க இப்படிச் சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்தக் குழுவோட பல அமர்வுகளுக்குப் போகவே இல்லையாமே?" என்றார் கல்லூரி முதல்வர்.
சுசீந்திரன் மௌன்னமாக இருந்தார்.
"எனக்குத் தெரியல. உங்ககிட்ட ஏதோ பிரச்னை இருக்குன்னு நினைக்கிறேன். நம்ம கல்லூரியிலேயே மாணவர்களால அதிகம் விரும்பப்பட்ட பேராசிரியரா நீங்க இருந்தீங்க. ஆனா, கொஞ்ச நாளா உங்களைப் பத்தி மாணவர்கள்கிட்டேந்து நிறைய புகார்கள் வருது. நீங்க சரியா வகுப்பு எடுக்கறதில்லை, மாணவர்கள் சந்தேகம் கேட்டா அவங்க மேல எரிஞ்சு விழறீங்கன்னெல்லாம் புகார்கள் வருது. என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார் கல்லூரி முதல்வர்.
"ஏதோ ஒண்ணு ரெண்டு தடவை உடம்பு சரியில்லாம இருந்தப்ப அப்படி நடந்துக்கிட்டிருப்பேன். இனிமே அப்படி நடக்காம பாத்துக்கறேன்!" என்றார் சுசீந்திரன்.
ஆயினும், சுசீந்திரன் மீது புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சில மாதங்களில், சுசீந்திரன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
"உங்களுக்கு வேலை போய் மூணு மாசம் ஆகப் போகுது. நீங்க குடும்பச் செலவுக்காகக் கொடுத்த பணத்தில சேர்த்து வச்சதை வச்சு நான் இத்தனை நாள் குடும்பத்தை ஓட்டிட்டேன். நம்ம பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும். இன்னும் நிறைய செலவு இருக்கு. பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?" என்றாள் சுசீந்திரனின் மனைவி மல்லிகா.
"பார்க்கலாம். டியூஷன் எடுக்கலாமான்னு பாக்கறேன்" என்றார் சுசீந்தரன்.
"ஏங்க, நீங்க எவ்வளவு படிச்சவர்! உங்களுக்கு எவ்வளவு பேரும் புகழும் இருந்தது! நல்ல வேலை, நல்ல சம்பளம். வசதியா வாழ்ந்துக்கிட்டிருந்தோம். இப்ப எல்லாம் போயிடுச்சு. வருமானத்துக்கு டியூஷன் எடுக்கப் போறதா நீங்க சொல்றதைக் கேக்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. உங்களுக்கு வேற வேலை கிடைக்காதா?" என்றாள் மல்லிகா, ஆற்றாமையுடன்.
"ஒரு இடத்தில வேலை போனப்புறம், இன்னொரு இடத்தில வேலை கிடைக்கிறது சுலபம் இல்லை. பாக்கலாம். சரி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்" என்று கிளம்பினார் சுசீந்திரன்.
"சாப்பிட்டுட்டுப் போங்க. காலையிலேந்து நீங்க எதுவுமே சாப்பிடலியே!"
"எனக்கு சாப்பிடணும்னே தோணல. வந்தப்புறம் சாப்பிட்டுக்கறேன்."
"இருங்க. உங்க சட்டை கசங்கி இருக்கு. வேற நல்ல சட்டை போட்டுக்கிட்டுப் போங்க!"
"சூதாட்டப பழக்கத்தால பணம் போனதோட இல்லாம, அந்தக் கவலையினால என் வேலையில கவனம் செலுத்தாம இருந்ததால, என்னோட வேலை, எனக்கு இருந்த நல்ல பேர், சேர்த்து வச்சிருந்த பணம் எல்லாம் போயிடுச்சு. இனிமே, கசங்கின சட்டை போட்டுக்கிட்டுப் போனா என்ன?" என்றார் சுசீந்திரன், விரக்தியுடன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது
குறள் 939:
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
No comments:
Post a Comment