Saturday, September 9, 2023

941. நாடி துடிக்குது, துடிக்குது!

என் அப்பாவுக்கு நாட்டு வைத்தியத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. 

எங்கள் குடும்பத்தில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், அவர் நாட்டு வைத்தியரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவார். ஆங்கில மருத்துவரிடம் செல்வது என்பது எப்போதாவதுதான்.

அதிர்ஷ்டவசமாக, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதில்லை.

எங்களுக்கு அவ்வப்போது ஏற்பட்ட சளி, இருமல், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள் ஆகியவை நாட்டு வைத்தியர் கொடுத்த சூரணங்கள் மூலம் சரியாகி விட்டது குறித்து என் அப்பாவுக்குப் பெருமை உண்டு. ஆயினும், அவை மருந்து இல்லாமலே குணமாகி இருக்கக் கூடிய சிறு உடல்நிலைக் கோளாறுகள்தான் என்பது நான் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்களின் கருத்து!

எந்த உடல்நிலைக் கோளாறு என்றாலும், நாட்டு வைத்தியர் உள்ளங்கைக்குக் கீழே உள்ள மணிக்கட்டுப் பகுதியில் தன் விரல்களை வைத்து நாடியைப் பரிசோதிப்பார்.

"நாடியைப் பார்த்து என்ன கண்டுபிடிப்பீங்க, வைத்தியரே?" என்று நான் ஒருமுறை அவரைக் கேட்டேன்.

"தம்பி! நம் உடம்பு பஞ்ச பூதங்களால ஆனது. பஞ்ச பூதங்கள்னா தெரியும் இல்லையா?" என்றார் வைத்தியர்.

"ஓ, தெரியுமே! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்" என்று பள்ளியில் படித்தை ஒப்பித்தேன்.

"கரெக்ட். நிலம்னா, நிலத்தில் உள்ள மண், கனிமங்கள் எல்லாம் அடக்கம். உடம்புங்கறதே பல கனிமங்களால ஆனதுதானே? ஆகாயம்கறது வெற்றிடம் அல்லது இடைவெளி. இந்த ரெண்டையும் விட்டுட்டா, மீதமுள்ள மூணு பூதங்களான காற்று, வெப்பம், நீர் இவற்றோட அளவைக் காட்ட, நம்ம உடம்பில வாதம், பித்தம், கபம்னு மூணு நாடி ஓடுது. வாத நாடி உடம்பில இருக்கற காற்றோட அளவைக் காட்டும். பித்த நாடி உடம்பில உள்ள வெப்ப அளவைக் காட்டும். கப நாடி உடம்பில உள்ள நீர் அளவைக் காட்டும். இந்த அளவுகள் கூடுவதோ, குறைவதோதான் நம் உடம்பில ஏற்படற பிரச்னைகளுக்குக் காரணம். உதாரணமா, கபம் அதிகமா இருந்தா, சளி பிடிக்கும். மணிக்கட்டில தெரியற நாடியோட ஓட்ட அளவை வச்சு, உடம்பில என்ன பிரச்னைன்னு கண்டுபிடிச்சு, அதைச் சரி செய்ய மருந்து கொடுக்கிறோம்" என்று விளக்கினார் அவர்.

பள்ளியில் படித்த விஞ்ஞானப் பாடங்களால் சில கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்த எனக்கு அவருடைய விளக்கம் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

திடீரென்று அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. நாங்கள் பயந்து விட்டோம். அவரைப் பக்கத்து ஊரில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தோம்.

வாடகைக் கார் வருவதற்குள், விஷயம் தெரிந்து நாட்டு வைத்தியர் வந்து விட்டார். அவர் அப்பாவின் நாடியைப் பரிசோதித்து விட்டு, "வாத நாடித் துடிப்பு அதிகமா இருக்கு. வாயுப் பிரச்னைதான். கவலைப்படத் தேவையில்லை. ஆனா, நீங்க ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறதால, நான் சூரணம் எதுவும் கொடுக்கல" என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

அரசு மருத்துவமனையில், அப்பாவுக்கு ஈ.சி.ஜி எடுத்தார்கள். ரத்த அழுத்தத்தையும் சோதித்தனர்.

"பிளட் பிரஷர் நார்மலா இருக்கு. ஈ.சி.ஜி-யும் நார்மலாத்தான் இருக்கு. கேஸ் பிரச்னையாலேயும் சில சமயம் நெஞ்சு வலி வரும். கேஸ் பிரச்னைக்கு மாத்திரை எழுதித் தரேன். சாப்பிடுங்க. சரியாயிடும்!" என்றார் அரசு மருத்துவர். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 95
மருந்து

குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்: 
வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), சிலேத்துமம் (நீர்) என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று, அளவுக்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...