"ம்..." என்றான் ரமணன்.
"ரொம்ப வருத்தமா இருந்தாங்க. அவங்க பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட நாளைக்குத்தான் கடைசி நாளாம். பத்தாயிரம் ரூபா வேணுமாம். நீங்க இல்லேன்னுட்டீங்களாம்."
"ஆமாம்."
"உங்க அக்காதானே! அதுவும் பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்காகக் கேட்டிருக்காங்க. எங்கேயாவது புரட்டிக் கொடுத்திருக்கலாம் இல்ல?"
"எங்கே புரட்டறது? நம்ம நிலைமையே மோசமாத்தானே இருக்கு!" என்றான் ரமணன், எரிச்சலுடன்.
"நிறைய சம்பாதிக்கிறீங்கன்னு பேரு. வர பணம்லாம் எங்கே போகுதுன்னே தெரியல. கேட்டா, விலைவாசி எல்லாம் உயர்ந்துகிட்டே போகுது, வாங்கற சம்பளம் போதலைன்னு சொல்றீங்க!"
"சரி. நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்!" என்று கிளம்பினான் ரமணன்.
"இப்பல்லாம் தினம் கோவிலுக்குப் போறீங்க. வரதுக்கு லேட் ஆகுது. அவ்வளவு நேரம் என்ன செய்யறீங்க?"
"கோவில்ல ஒத்தர் கதை சொல்றாரு. அதைக் கேட்டுட்டு வருவேன். நீயும் வரியா?" என்றான் ரமணன்.
"நானும் வந்துட்டா, நம்ம பொண்ணை யார் பாத்துக்கறது? இப்ப அவ டியூஷன்லேந்து வந்துடுவாளே!" என்றாள் லட்சுமி.
வழக்கம் போல் நண்பன் வீட்டுக்குச் சீட்டாடச் சென்று விட்டு, ஐயாயிரம் ரூபாய் தோற்று விட்டுச் சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பியபோது, 'சே! என்ன இப்படி ஆயிட்டேன்! மனைவிகிட்ட கோயிலுக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு, சீட்டாடிட்டு வரேன். நான் தூக்கி வளர்த்த என் அக்கா பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டப் பணம் வேணும்னு அக்கா கேட்டப்ப, கையில பணம் இருந்தும், சீட்டாடப் பணம் வேணுமேங்கறதுக்காகக் கொஞ்சம் கூட இரக்கமில்லாம பணம் இல்லைன்னு சொல்லிட்டேன்!' என்று தன்னையே நொந்து கொண்டான் ரமணன்.
'இன்னிக்கு விட்ட ஐயாயிரம் ரூபாயை நாளைக்கு எப்படியாவது ஜெயிச்சுடணும்!' என்ற எண்ணம் உடனேயே அவன் மனதில் எழுந்தது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
No comments:
Post a Comment