Friday, September 1, 2023

937. பண்பான கணவன்

கவிதாவுக்குத் திருமணமானபோது, அவள் கணவன் முத்துசாமி வேலை எதற்கும் போகவில்லை.

"நிறைய சொத்து இருக்கு. அவன் எதுக்கு வேலைக்குப் போகணும்?" என்றாள் முத்துசாமியின் தாய் சுந்தரவல்லி, கவிதாவின் தந்தையிடம்.

தன் பெண் வசதியான இடத்தில்தானே வாழ்க்கைப் படுகிறாள், மாப்பிள்ளைக்கு வேலை இல்லாவிட்டால் என்ன என்று நினைத்துக் கவிதாவின் தந்தை அவளை முத்துசாமிக்குத் திருமணம் செய்து வைத்தார்.

கணவன் வேலைக்குப் போகவில்லையே என்ற குறை திருமணத்துக்கு முன் கவிதாவிடம் இருந்தாலும், திருமணத்துக்குப் பின் முத்துசாமி அவளிடம் காட்டிய அன்பும், மற்றவர்களிடம் அவன் காட்டிய பண்பும் கவிதாவின் குறையைப் போக்கித் தன் கணவனைப் பற்றி அவளைப் பெருமை கொள்ள வைத்தன.

ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகு, முத்துசாமியிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டது.

"ஆம்பளைன்னா வேலைக்குப் போய் சம்பாதிக்கணும். இப்படியா வீட்டில உக்காந்திருப்ப?" என்று முத்துசாமியின் நண்பன் ஒருவன் அவனிடம் கேட்டான்.

"எனக்கு எங்க அப்பா விட்டுட்டுப் போன சொத்து இருக்கு. அதில வர வருமானத்தில, நான் வசதியாவே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அதனால, நான் வேலைக்குப் போகல. அதோட, இந்த வயசில நான் எந்த வேலைக்குப் போக முடியும்?" என்றான் முத்துசாமி.

"வேலைக்குப் போகாட்டா என்ன? சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கே! நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன். அதைப் பார்த்துட்டு நீ முடிவு பண்ணு!" என்றான் நண்பன்.

முத்துசாமியை அந்த நண்பன் அழைத்துச் சென்றது பக்கத்து ஊரிலிருந்த ஒரு சீட்டாடும் இடத்துக்கு. 

ஒரு பெரிய வீட்டில், பல அறைகளில், பல குழுக்களாக, அங்கே சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். சமையலுக்கு ஆள் வைத்து, சீட்டாடுபவர்களுக்கு காப்பி, சிற்றுண்டி என்று தயார் செய்து கொடுத்து, அதை ஒரு நிறுவனம் போல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அங்கேயே ஒரு அறையில் இரண்டு மூன்று நாட்கள் தங்கித் தொடர்ந்து சீட்டாடுவார்கள் என்று விளக்கினான் நண்பன்.

"என்னை எதுக்கு இங்கே அழைச்சுக்கிட்டு வந்தே? நான் காசு வச்சு விளையாடறதில்லேன்னு உனக்குத் தெரியுமே!" என்றான் முத்துசாமி, சற்றுக் கோபத்துடன்.

"தெரியும். ஆனா, உன்னோட சீட்டாட்டத் திறமையும் எனக்குத் தெரியும். நீயெல்லாம் காசு வச்சு விளையாடினா, சும்மா பணத்தை அள்ளலாம்!"

"வேண்டாம். வா, போகலாம்!" என்று கிளம்ப முயன்றான் முத்துசாமி.

"வந்ததுக்கு ஒரு ஆட்டம் ஆடிட்டுப் போகலாம். நீ காசு வச்சு ஆட வேண்டாம். நான் காசு வைக்கறேன். நீ எனக்காக ஆடு. ஜெயிச்சா, எனக்கு லாபம். தோத்தா, எனக்குத்தான் நஷ்டம். சரியா?" என்றான் நண்பன்.

அரை மனதுடன் ஆட உட்கார்ந்த முத்துசாமி, தொடர்ந்து ஐந்தாறு ஆட்டங்கள் ஆடினான். ஒட்டுமொத்தமாக ஐநூறு ரூபாய் லாபம் கிடைத்தது.

"பாத்தியா?  கொஞ்ச நேரம் ஆடினதுக்கே ஐநூறு ரூபா கிடைச்சிருக்கு. உன் திறமைக்கு, நீ தொடர்ந்து ஆடினா, உன்னை யாராலும் அடிச்சுக்க முடியாது!" என்றான் நண்பன்.

"சரி. நானே காசு வச்சு ஆடிப் பாக்கறேன்!" என்றான் முத்துசாமி.

அதற்குப் பிறகு, பல சமயங்களில் முத்துசாமி தொடர்ந்து நான்கைந்து நாட்கள் வீட்டுக்கு வருவதில்லை. சீட்டாட்டம் நடக்கும் இடத்திலேயே தங்கியிருந்து, தொடர்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தான்.

கவிதா எவ்வளவோ சொல்லியும், முத்துசாமி தன் சீட்டாட்டப் பழக்கத்தை விடவில்லை. முத்துசாமியின் தாய் சுந்தரவல்லி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டதால், அவனைக் கேட்பதற்கு வேறு எவரும் இல்லை.

"ஏங்க, நில அடமான பாங்க்ல கடன் வாங்கினீங்களா?" என்றாள் கவிதா.

"ஆமாம். அதுக்கு என்ன?" என்றான் முத்துசாமி.

"அங்கேந்து ஜப்தி நோட்டீஸ் வந்திருக்கு!"

முத்துசாமி அதிர்ச்சியுடன் நோட்டீசை வாங்கிப் படித்தான்.

"சீட்டாட்டத்தில உங்களுக்கு நிறையப் பணம் போயிடுச்சுன்னு ஊரில பேசிக்கிட்டப்ப நான் நம்பல. இப்படி நிலத்தை அடமானம் வச்சுக் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாத அளவுக்கா பணத்தை இழந்திருக்கிறீங்க?"

முத்துசாமி பதில் பேசாமல் இருந்தான்.

"நான் சொல்றதைக் கேளுங்க. உங்க முன்னோர்கள் விட்டுட்டுப் போன சொத்தை சீட்டாட்டத்தில இழந்துடாதீங்க. இதோட நிறுத்திக்கங்க. இல்லேன்னா, மொத்த சொத்தும் போயிடும்."

கவிதா பேசி முடிக்கும் முன்பே, அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தான் முத்துசாமி.

"நீ யாருடி எனக்கு புத்தி சொல்றதுக்கு? உன் அப்பனோட சொத்தையா நான் இழந்துட்டேன்? இது என் அப்பனோட சொத்துதானே? அதைப் பத்தி உனக்கென்ன?"

கவிதா அதிர்ச்சியுடன் கணவனைப் பார்த்தாள். 

பத்து ஆண்டுத் திருமண வாழ்க்கையில், தன்னைக் கடிந்து கூடப் பேசாத கணவன், தன் கன்னத்தில் அறைந்து, தரக் குறைவாகப் பேசுவதை அவளால் நம்ப முடியவில்லை.

சீட்டாட்டப் பழக்கம் அவன் முன்னோர்கள் வைத்து விட்டுப் போயிருந்த சொத்தை மட்டும் அழிக்கவில்லை, அவனுடைய பண்பையும் சிதைத்து விட்டது என்ற உணர்வு அவளுக்கு வலியை ஏற்படுத்தியது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

பொருள்: 
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடி வைத்த சொத்துக்களையும், அவரது இயல்பான  நற்பண்பையும் கெடுத்து விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...