உள்ளே நுழைந்த ரகுராமனிடம், அவளிடம் இருந்ததை விடவும் அதிகச் சோர்வு தெரிந்தது.
"இன்னிக்கு எவ்வளவு விட்டீங்க?" என்றாள் புவனா.
"முதல்ல உள்ளே வர வழி விடு!" என்று அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் ரகுராமன்.
"எட்டு மணிக்கு வந்து சாப்பிட்டுட்டு, அப்புறம் உங்க சீட்டாட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம் இல்ல?"
ரகுராமன் பதில் பேசாமல் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு, நேரே படுக்கைக்குச் சென்றான்.
"சாப்பிடலையா?"
"பசிக்கல!"
"சீட்டாடற நேரம் முழுக்க வெத்தலையை மென்னுக்கிட்டே இருந்தா, எப்படிப் பசிக்கும்?" என்றபடியே சமையலறைக்குச் சென்ற புவனா, "பாதி நாள் நீங்க சாப்பிடாததால, அந்தச் சாப்பாட்டை மீதி வச்சு, அடுத்த நாள் நான் சாப்பிட வேண்டி இருக்கு. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்காமலேயே இருக்கலாம். ஆனா, அதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குதே!" என்று முணுமுணுத்தது ரகுராமனின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை.
"அல்சர்!" என்ற டாக்டர், "ஏன், நேரத்துக்கு சாப்பிடறதில்லையா?" என்றார், ரகுராமனிடம்.
"சாப்பிடறேனே!" என்றான் ரகுராமன்.
"எங்கே? எப்பப் பார்த்தாலும் வெத்தலையை மென்னுட்டுப் பல நாள் சாப்பாடே வேண்டாம்னுடறாரு!" என்றாள் புவனா.
"சாப்பாட்டுக்கப்பறம் வெத்தலை போடலாம். வெத்தலையே சாப்பாடா இருக்க முடியாது. இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க. அல்சர் முத்திப் போச்சுன்னா, ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டி இருக்கும்!" என்று எச்சரித்தார் டாக்டர்.
"நான் பாத்துக்கறேன் டாக்டர்!" என்றாள் புவனா.
வீட்டுக்கு வந்ததும், "ஐ ஆம் சாரி! என்னால உனக்குக் கஷ்டம்!" என்றான் ரகுராமன்.
"என்னோட கஷ்டத்தை விடுங்க. அது எப்பவுமே இருக்கறதுதானே! நீங்களாவது சூதாடிக்கிட்டு சந்தோஷமா இருந்தீங்க. உங்களுக்கும் அல்சர் வந்திருக்கு. ஆனா, அதை விடப் பெரிய நோய் ரெண்டு பேருக்குமே வரப் போகுதுன்னு நினைக்கிறேன்!" என்றாள் புவனா.
"என்ன நோய் அது? அது ஏன் நமக்கு வரணும்?"
"பசி நோய்! அது யாருக்கு வேணும்னா வரலாமே! நீங்க வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்கறதில்ல. டாக்டருக்குப் பணம் கொடுக்கக் கூடப் பக்கத்து வீட்டில கடன் வாங்கிக்கிட்டுதான் வந்தேன். வீட்டுச் சாமானெல்லாம் கடையில கடனுக்குத்தான் வாங்கிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசமா பணம் கொடுக்காததால, கடைக்காரர் இனிமே கடனுக்குப் பொருட்கள் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. உங்களுக்காவது சீட்டாடற இடத்தில, யாராவது வெத்தலை வாங்கிக் கொடுப்பாங்க. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல!"
அதற்கு மேல் துக்கத்தை அடக்க முடியாமல், புவனா அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
No comments:
Post a Comment